அன்புள்ள உங்களுக்கு…
தலைநகரம் டெல்லியில் காற்று மாசு அதிக அளவு ஏற்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டிய சூழல் ஏற்பட்டது. குழந்தைகள், முதியவர்கள், சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் போன்றோருக்கு இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ஆனால், தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளி தினத்திலேயே சற்று மாசு அளவு குறைந்தது. இதற்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலும், பொதுமக்களின் ஒத்துழைப்புமே காரணம் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்ந்தால், விரைவில் மாசற்ற காற்றை சுவாசித்து நலமுடன் வாழ்வோம் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது.
குளிர்காலம் தொடங்கிவிட்டது. முதியவர்கள் அதிகம் பேருக்கு உடல்நலமில்லாமல் போவது இந்தக் காலத்தில்தான்! வயோதிக கால தொல்லைகளால் இறப்பதும் குளிர்காலத்தில்தான் அதிகம் என்று மேலைநாட்டு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குளிர்காலத்தில் இருமல், சளி, ஃப்ளூ மற்றும் நிமோனியா தொல்லைகளால் அதிக முதியவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். 50 வயது தாண்டியவர்கள் ஒரே ஒரு தடுப்பூசி (Pneumococcal vaccine) போட்டுக் கொண்டால், பல ஆண்டுகளுக்கு நிமோனியா காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். இதில் பக்கவிளைவுகள் ஏதும் கிடையாது. ஆஸ்துமா, அடிக்கடி இருமல், சளி மற்றும் ஃப்ளூ காய்ச்சல் தொல்லை உள்ளவர்கள் குளிர்காலத்தில் ஃப்ளூ தடுப்பூசி (Influenza vaccine) போட்டுக் கொள்வது நல்லது. இதை வருடத்துக்கு ஒரு முறை போடவேண்டும்.
குளிர்காலத்தில் இருமல், சளி தொல்லைகளுக்கு அடுத்ததாக ஏற்படுவது வயிறு சார்ந்த தொல்லைகளே. இதைத் தவிர்க்க, வெளியில் சாப்பிடுவதை முடிந்த அளவுக்குத் தவிர்க்க வேண்டும். கொதிக்க வைத்து, ஆற வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும்.
‘யோகா பாட்டி’ என்று அழைக்கப்பட்ட திருமதி நானம்மாள் தனது 99 வயதில் இயற்கை அடைந்தார் என்ற செய்தி உள்ளத்தை சற்று கனக்க வைக்கிறது. சுமார் 10 லட்சம் பேருக்கு யோகா கற்றுத் தந்தவர் என்ற பெருமை கொண்ட நானம்மாள், பத்மஸ்ரீ விருது பெற்றவர். 85 முதல் 90 வயதைக் கடந்தவர்களுக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் புற்றுநோய் போன்றவை அதிகம் வருவதில்லை. அதனால்தான் அவர்கள் நீண்ட காலம் நலமுடன் வாழ முடிகிறது. நிமோனியா ஜுரம் அல்லது கீழே விழுந்து எலும்புமுறிவு ஏற்படுவது போன்றவற்றின் விளைவாக மரணம் ஏற்படுவதுதான் இவர்களின் விதியாக உள்ளது.
நானம்மாள் இறுதிவரை யோகா பயிற்சியை மேற்கொண்டு நலமுடன்தான் இருந்தார். எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழுந்து, சுமார் ஒரு மாத காலம் படுத்த படுக்கையாக இருந்து மரணத்தை எய்தினார். முதுமையில் எவ்வளவு நலத்துடன் இருந்தாலும், வயது ஆக ஆக கீழே விழுவதற்கான வாய்ப்புகள் சற்று அதிகரிக்கும். கீழே விழுவதற்கு நோய்கள் காரணமாக இருப்பின், அதற்கு தக்க சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கீழே விழுதலையும் குளிர்கால நோய்களையும் தடுத்தாலே நலமுடன் நூறாண்டு தாண்டி வாழலாம். குளிர்காலத்தை சற்று முன்னெச்சரிக்கையுடன் கடப்போம்!
அன்புடன்,
டாக்டர் வ.செ.நடராசன்