அன்புள்ள உங்களுக்கு

வணக்கம்!!!

முதியோர் நல மருத்துவத் துறை என்பது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர்களுக்கே கூட அதிகம் தெரியாத ஒன்றாக இருந்தது. இப்போது அது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம், நாம் வாழும் நாட்கள் அதிகரிப்பதே!

drvsn

 

இந்த விஷயத்தில் இந்தியாவுக்கே தமிழகம் முன்னோடியாக இருக்கிறது என்பதில் பெருமிதம் அடையலாம். முதியோர் நல மருத்துவத் துறை எனும் ஆல விருட்சத்தின் விதை, 1978ம் ஆண்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவாக ஊன்றப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக 1988ம் ஆண்டு 10 படுக்கைகள் கொண்ட முதியோர் நல வார்டும் இங்குதான் தொடங்கப்பட்டது. அன்று ஊன்றப்பட்ட விதை, துளிர்த்து செடியாக தளிர் விட ஆரம்பித்தது.

ஆரம்ப கால எதிர்ப்புகள், அவை தந்த ஏமாற்றங்கள், தடைகள், அவை ஏற்படுத்திய வலிகள் என எல்லாவற்றையும் எதிர்கொண்ட எனது முயற்சியும், உழைப்புமே இந்த விருட்சத்தின் விதைக்கு நீராகவும் உரமாகவும் ஆயிற்று.

விரைவில் சென்னை கிண்டியில் 150 கோடி செலவில் 200 படுக்கைகள் கொண்ட தேசிய முதியோர் நல மையம் எனும் மாபெரும் விருட்சம் பல கிளைகளையும், விழுதுகளையும் பரப்பி, முதியவர்களுக்குத் தன் பணிகளைத் தொடர இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் குறிப்பிடுகிறேன்.

கடந்து வந்த பாதையை என் மனதில் அசைபோட்டுக் கொண்டிருக்கும் வேளையில் திரு. இராஜசேகரன் மணிமாறன் அவர்களின் அறிமுகம், ரோட்டரியன் திருமதி. வித்யா அவர்கள் மூலம் கிடைத்தது. ‘‘உங்கள் பெயரில் ஓர் அறக்கட்டளையைத் தொடங்கலாமே’’ என்று ஒரு கனத்த செய்தியை என் காதில் போட்டார். ‘இந்த வயதில் இனிமேல் இது எல்லாம் எதற்கு’ என்று சற்று பின்வாங்கினேன். ‘‘இல்லை டாக்டர், முதியோர் மருத்துவத்தை இந்தியாவிலேயே முதன்முதலாக ஆரம்பித்து அத்துறையின் தந்தை என்ற பெருமையைப் பெற்றவர் நீங்கள். உங்கள் பெயரில் ஓர் அறக்கட்டளையை நீங்கள்தான் தொடங்க வேண்டும்’’ என்று அழுத்தமாகக் கூறினார். சற்று அரை மனதுடன் சம்மதித்தேன்.

அறக்கட்டளை தொடக்க விழாவை ஐம்பெரும் விழாவாக 06.02.2017 அன்று நடத்திக் காட்டினார் அவர். 2017 பிப்ரவரியில் என் பெயரில் அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டு, அதன் மூலம் முதியோர் நலப் பணிகள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

முதுமையில் சந்திக்கும் நோய்கள் குறித்து குழப்பமான எண்ணம் பலருக்கு இருக்கிறது. முதுமைக் காலத்தில் சந்திக்கும் வாழ்க்கைப் பிரச்னைகளால் பலர் மனக்குழப்பத்தில் தவிக்கிறார்கள். இந்த இரண்டு பிரச்னைகளிலிருந்தும் அவர்கள் மீண்டு, இனிய முதுமைப் பருவத்தை வாழ வேண்டும். முதியவர்களை அணுகுவது குறித்து நடுத்தர வயதினருக்கும் இளைய தலைமுறைக்கும் நிறைய தயக்கங்கள், சந்தேகங்கள் உள்ளன. அவர்களுக்கு ஒரு தெளிவைத் தர வேண்டும். முதியோர் இல்லங்களில் வாழ்க்கையை இயல்பாக்கிக் கொள்ள முதியோருக்கு வழிகாட்ட வேண்டும். முதியோருக்குத் தேவைப்படும் மருத்துவ வசதிகள், சமூக உதவிகள், சட்ட ஆலோசனைகள், அரசு நலத்திட்டங்கள் என எல்லாவற்றையும் செய்ய வேண்டியுள்ளது.

இத்தனை பணிகளையும் ஒருங்கிணைத்துச் செய்வதற்கு ஒரு மாத இதழ் இருந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தோம். அதன் விளைவாக ‘முதுமை எனும் பூங்காற்று’ என்ற பெயரில் இந்த இதழ் உங்கள் கரங்களில் தவழ்கிறது. முதியோர்களுக்கும், அவர்களின் நலனில் அக்கறை காட்டும் எல்லோருக்கும் ஒரு வழிகாட்டியாக இது இருக்கும்.

இந்தத் துளிரை விருட்சமாக்க வேண்டியது நம் சமூகக் கடமை!

அன்புடன்,
டாக்டர் வ.செ.நடராசன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *