இறுதி மாதவிடாய்… சுகமா, சுமையா?

இறுதி மாதவிடாய்… சுகமா, சுமையா?

– டாக்டர் கற்பகாம்பாள் சாய்ராம்

மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர், கருவுறுதல் நிபுணர்

பருவ வயதில் பெண்கள் பூப்பெய்துவது எப்படி இயல்பான நிகழ்வோ, அதுபோலதான் நடுத்தர வயதுகளில் மாதவிலக்கு சுழற்சி நிற்பதும். ‘இறுதி மாதவிடாய்’ எனப்படும் இது ஒரு நோயல்ல. இயற்கையின் நியதி. இதை சரியாகப் புரிந்து கொண்டால், அவஸ்தைகளைத் தவிர்த்து இனிமையாக எதிர்கொள்ளலாம்.

மாதவிடாய் தொடர்ந்து 12 மாதங்களுக்கு ஏற்படாமல் இருந்தால் அவர்கள் இறுதி மாதவிடாயை அடைந்துவிட்டார்கள் எனலாம்.  சராசரியாக இது 45 வயதுக்கு மேல் 55 வயதிற்குள் ஏற்படலாம். ஒவ்வொருவருக்கும் அவரவர் பரம்பரையைப் பொறுத்து இது அமையும். இறுதி மாதவிடாய் என்பது சினைப்பையின் செயல் திறன் குறைந்து ஹார்மோன் குறையும் பருவம் ஆகும்.

மூன்று கட்டங்களாக இது ஏற்படுகிறது.

இறுதி மாதவிடாய்க்கு முந்தைய நிலை:

இந்தக் காலத்தில் மனரீதியான மாற்றங்கள்தான் அதிகமாக இருக்கும். சிலருக்கு எப்போதும் வியர்த்துக் கொட்டும். உடல் சிவக்கும். படபடப்பு அதிகரிக்கும். சுமார் 70 சதவிகித பெண்களுக்கு இந்தத் தொல்லைகள் வரலாம். சிலருக்கு இவை 5 ஆண்டுகள் வரைகூட நீடிக்கலாம். மூட்டு வலி, கை கால் குடைச்சலும் இருக்கும். மாதவிலக்கு சமச்சீரற்று இருக்கும். சில மாதங்கள் வரும், சில மாதங்கள் வராது. சிலருக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை வந்து தொந்தரவு செய்யும். சிலருக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். இதற்குக் காரணம், ஹார்மோன் மாற்றங்கள்தான்.

இறுதி மாதவிடாய் நிலை:

ஞாபக மறதி, உடல் அசதி ஏற்படும். அசதி காரணமாக வேலை செய்வதைத் தவிர்ப்பதால், உடலில் அதிகமான கொழுப்பு சேரும் ஆபத்து உண்டு. ‘நம்மை யாரும் கண்டுகொள்ளவே இல்லையே’ என்று வேதனை எழும். சினைப்பையிருந்து வெளியாகும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆண்ட்ரோஜன் ஹார்மோன்களே எலும்பை வலிமையாக வைக்கின்றன. இறுதி மாதவிடாய் பருவத்தில் இந்த ஹார்மோன்கள் குறைவதால், எலும்பு வலிமை இழக்கிறது. இதனால் சின்ன சறுக்கல் ஏற்பட்டாலும், எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு அதிகமாகிறது. பெண்ணுறுப்பை வழவழப்பாக வைத்திருக்கிற திரவத்தின் சுரப்பு குறையும். அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படலாம். சிலருக்கு வெள்ளைப்படுதலுடன் அரிப்பும் ஏற்படும்.

இறுதி மாதவிடாய்க்கு பிந்தைய நிலை:

குழந்தைப் பருவம் போல மிகவும் மகிழ்ச்சியாக உணர்வார்கள். அரிதாக சிலருக்கு சில ஆண்டுகள் கழித்து மாதவிலக்கு வரும். இது சாதாரண தொற்றின் அறிகுறியாகவும் இருக்கலாம். சில சமயங்களில் புற்றுநோயின் ஆரம்பநிலையாகவும் இருக்கும். எனவே தயங்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

எதிர்கொள்வது எப்படி?

* கால்சியம் குறைபாட்டைத் தவிர்க்க சத்துள்ள உணவு அவசியம். புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிடலாம். தேவைப்படுவோர் கால்சியம் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

* எலும்பு வலிமை இழத்தலை ஆரம்ப நிலையிலேயே டெக்ஸா ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

* மாதவிடாய் நின்ற பெண்களுக்கு நல்ல கொழுப்பை உற்பத்தி செய்யும் ஈஸ்ட்ரோஜன் குறைவதால் மார்பு வலி, மாரடைப்பு போன்ற இதயப் பிரச்னைகள் வரலாம். இவற்றைத் தவிர்க்க விறுவிறுப்பான நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி அவசியம்.

* நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற தொல்லைகளும் வரலாம். ஆனால் ஆண்களை விட பெண்களுக்கு சற்று காலம் கடந்தே வரும். இதற்கு மாதவிடாய் நிற்பது காரணம் அல்ல.

* இறுதி மாதவிடாய் சமயத்தில் பல பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பது பெரிய பிரச்னையாக இருக்கிறது. உணவு மற்றும் உடற்பயிற்சி மட்டுமே இதைத் தடுக்க உதவும். சமச்சீரான சத்தான உணவு முக்கியம்.

* அடிக்கடி மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு, தூக்கமின்மை ஆகிய தொல்லைகள் ஏற்படலாம். இவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு மருந்துகள் உள்ளன. மாதவிடாய் நின்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தொல்லைகள் சரியாகிவிடும். உடற்பயிற்சி, யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி, ஆரோக்கியமான உணவுப்பழக்கம் ஆகியவையே இந்தத் தொல்லைகளைப் போக்க சிறந்த வழி.

* பிறப்புறுப்பு மற்றும் நீர்த்தாரையில் அரிப்பு, வறட்சி, சிறுநீர்க்கசிவு போன்ற தொல்லைகள் ஏற்படலாம். நோய்த் தொற்றும் ஏற்படலாம். மகளிர் சிறப்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். பல நேரங்களில் எளிய உடற்பயிற்சிகள் மூலம் சிறுநீர்க் கசிவைக் கட்டுப்படுத்த முடியும். உதாரணம்: அடிவயிற்றுத் தசையை வலிமையடையச் செய்யும் பயிற்சி (pelvic floor muscles exercise), சிறுநீரை அடக்கி சிறிது நேரம் கழித்து வெளியேற்றும் பயிற்சி (Bladder training).

* சிலருக்கு ஹார்மோன் குறைபாட்டால் அடிக்கடி சிறுநீர் வெளியேறும் தொல்லை ஏற்படலாம். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் களிம்பை பிறப்புறுப்புகளில் தடவி வந்தால் தீர்வு கிடைக்கும்.

* இந்தப் பருவத்தில் மார்பகங்கள் சற்று தளர்ந்து, சரிந்து விடுகின்றன. பிறப்புறுப்பு சுருங்குவதாலும், ஈரத்தன்மை குறைவதாலும், பாலுணர்வு குறையும். தாம்பத்ய உறவில் நாட்டமின்மை ஏற்படும்.

குடும்பத்தின் அரவணைப்பு தேவை!

இறுதி மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயற்கையாக நடக்கும் ஒரு நிகழ்வே. அம்மாவும், பாட்டியும் இந்த கால கட்டத்தைக் கடந்து வந்தவர்களே. உணவு, வாழ்க்கைமுறை மற்றும் சிகிச்சைகள் மூலம் இறுதி மாதவிடாய் கால தொல்லைகளிருந்து விடுபட்டு நலமாக வாழமுடியும்.

மாதவிடாய் நிற்கும் பருவத்தில் ஏற்படும் சில தொல்லைகளுக்கு நடுவே சில இனிப்பான செய்திகளும் உண்டு. அவை:

* மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாயிலிருந்து நிரந்தர விடுதலை.

* கோயில் மற்றும் திருமணம் போன்ற விழாக்களுக்கு எந்த தயக்கமும் இல்லாமல் போகலாம்.

* கர்ப்பம் ஏற்படுமோ என்ற பயத்திலிருந்தும் விடுதலை.

மாதவிடாய் நிற்கும் பருவத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு மருந்துகள் மட்டுமே தீர்வு தராது. குடும்பத்தினர் காட்டும் உண்மையான அன்பும் அரவணைப்புமே மருந்தைவிட முக்கியமாக தேவை. இதைக் குடும்பத்தினர் தாராளமாகக் கொடுக்க முன்வந்தால் இறுதி மாதவிடாய் என்பது சுமையல்ல… சுகமான பருவமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *