இளமையும் இனிமையும் இழக்காத தனிமை

மகன் ஒரு நாட்டிலும், மகள் ஒரு நாட்டிலும் வசிக்க, முதிய பெறோர்கள் மட்டும் தாய்நாட்டில் வசிக்கும் சூழல் பல குடும்பங்களில் உள்ளது. இன்னும் சில குடும்பங்களில் இளைய தலைமுறையினர் நகரங்களுக்கு வந்துவிட, பெற்றோர்கள் மட்டும் கிராமத்தில் வசிக்க நேர்ந்துள்ளது.

தற்போது உள்ள சூழ்நிலையில் வேலைவாய்ப்புகள் வெளியூரிலும், வெளிநாடுகளிலும்தான் அதிகமாக உள்ளன. இதுபோன்ற வேலைகளில் நல்ல சம்பளம் கிடைப்பதால், ஏராளமானோர் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். கிராமங்களில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள், தங்களின் பெற்றோரை சொந்த கிராமத்தில் விட்டுச் செல்கின்றனர். அவர்களை அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் கவனித்துக்கொள்கின்றனர். ஆனால், சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் தனியாக விடப்படும் பெற்றோர்களின் நிலைமைதான் மிகவும் பரிதாபம்.

பெருநகரங்களில் ‘பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்’ என்பதுகூட தெரியாமல்தான் பலரும் வாழ்ந்து வருகின்றனர். அதைப் பெருமையாகவும், பாதுகாப்பாகவும் கருதுபவர்களும் உண்டு. இப்படி தனிமையில் வாழும் முதியவர்கள், தங்கள் வாழ்க்கையைப் பாதுகாப்பாக அமைத்துக்கொள்ள சில எளிய வழிகள்:

இரவில் தூங்கும்போது படுக்கைக்கு பக்கத்திலேயே செல்போனை வைத்திருப்பது மிகவும் அவசியம். அவசரத்துக்கு இருட்டில் எழுந்து தேட முடியாது.

முதுமையில் கண் பார்வை மங்கி இருக்கும் சிலருக்கு, சிறிய வியூ ஃபைண்டர் துவாரத்தில் பார்த்தால், வெளியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரிவதில்லை. எனவே கதவில் அரை அடிக்கு அரை அடி அளவில் சதுரமாக கண்ணாடி பொருத்திக்கொள்ளலாம். காலிங் பெல் அடித்தால் அந்தக் கண்ணாடி மூலம் பார்த்து கதவைத் திறக்கலாம்.

தாழ்ப்பாளுடன் பொருத்தும் சிறிய செயின் ஒன்றை வீட்டின் வாசல் கதவு தாழ்ப்பாளில் பொருத்திக்கொள்ளலாம். கதவைத் திறந்தால், சுமார் அரை அடி இடைவெளி மட்டுமே திறக்கும். யாரும் உள்ளே வர முடியாது. பேப்பரோ, கடிதமோ எது வந்தாலும் அந்த இடைவெளியில் பாதுகாப்பாக வாங்கிக் கொள்ளலாம்.

சிக்கனமாக இருக்கிறேன் பேர்வழி என்று இரவு நேரத்தில் வீட்டில் விளக்குகள் போட்டு வைப்பதில் கஞ்சத்தனம் செய்ய வேண்டாம். அதிக நேரம் இருக்கும் ஹாலிலும், மற்ற அறைகளிலும் விளக்கு போட்டு வைக்கவும். இரவு தூங்கப் போகும் நேரத்தில் இங்கெல்லாம் இரவு விளக்குகள் எரியட்டும். பாத்ரூமில் மங்கலான விளக்கு வேண்டாம். பளிச்சென எரியும் விளக்குகள் போடவும். எல்.இ.டி பல்புகள் குறைந்த மின்சாரத்தில் அதிக வெளிச்சம் தருகின்றன.

இரவு படுக்கும்பொழுது எல்லா தாழ்ப்பாள்களும் போட்டு இருக்கிறதா என்று பார்த்துவிட்டுப் படுக்கவேண்டும்.

தூங்கப் போகும்பொழுது குழாய்கள் சரியாக மூடப்பட்டு இருக்கின்றனவா, காற்றில் அசையும் காலண்டர் பின் செய்து இருக்கிறதா என்றெல்லாம் கவனிக்க வேண்டும். ‘சொட் சொட்’ என்று தண்ணீர் விழும் சத்தம், காற்றில் படபடவென்று அடித்துக்கொள்ளும் காலண்டர் அசைவு போன்றவை நடுநிசியில் மனதில் திக்கென்ற உணர்வை ஏற்படுத்தும்.

படுக்கைக்கு அருகில் ஒரு மேஜை இருந்தால், அதில் கட்டாயம் டார்ச் ஒன்று, நமது மூக்குக் கண்ணாடி பெட்டி போன்றவற்றை வைக்க வேண்டும். காலில் செருப்பு போட்டு பழக்கம் உள்ளவர்கள் கட்டில் கீழேயே வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிலர் சிறிய கைத்தடி வைத்துக் கொள்வார்கள். குடிக்க ஒரு தண்ணீர் பாட்டில் வைத்துக் கொள்வது நல்லது.

விலை உயர்ந்த நகைகள், வெள்ளி சாமான்கள் போன்றவற்றை லாக்கரில் வைத்துவிடுங்கள். அல்லது பிள்ளை, பெண், பேரன், பேத்திகளுக்கு மனதார தந்துவிடுங்கள். அவற்றை வீட்டில் வைத்திருப்பது ஆபத்தை வரவழைக்கும்.
‘வீட்டோடு’ பணியாளர்கள் தங்கி இருந்தால், அவர்களைப் பற்றிய விவரங்களை நன்றாகத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். சில இடங்களில் அவர்களே ஆபத்தாக அமைந்து விடுவார்கள்.

வெளியே செல்லும்பொழுது அதிகமாக பணம் எடுத்துச் செல்லாதீர்கள், அன்று என்ன செலவு செய்யப் போகிறோம் என்பதை திட்டமிட்டு எடுத்துச் செல்லுங்கள். இப்பொழுதுதான் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்ற வசதிகள் வந்துவிட்டனவே!

தளர்ந்த இந்த முதிய பருவத்தில் பஸ் ஏறுவதை இயன்றவரை தவிர்த்து விடுங்கள். தெருவைக் கடக்கும்பொழுது மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். கௌரவம் பார்க்காமல் யாரிடமாவது உதவி பெற்றுக் கடக்க வேண்டும்.

வெளியே போகும்பொழுது நமக்கு அதிகப்படியாகத் தேவைப்படும் பிஸ்கெட், மருந்துகள், பழங்கள், சில தின்பண்டங்கள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி கடைக்குப் போக வேண்டிய அவசியத்தை இதன்மூலம் தவிர்க்கலாம்.

வீட்டுக்குள் நாற்காலி, மேஜை போன்ற அதிக கனமான ஃபர்னீச்சர்களைத் தவிர்த்துவிடுங்கள். சுத்தம் செய்வதற்காகவும் நகர்த்தி இடம் மாற்றுவதற்காகவும் சிரமப்பட வேண்டியிருக்காது.
சோம்பலுடன் உட்கார்ந்து மனதை வருத்திக்கொள்ளாமல், காலையிலிருந்து மாலை வரை தங்களை ஏதாவது ஒரு பணியில் ஈடுபடுத்திக்கொண்டு இருந்தால் தனிமை அவ்வளவு உறுத்தாது.

‘நாம் பிறக்கும்பொழுது தனியாகப் பிறந்தோம். இறக்கும்பொழுது தனியாகப் போகிறோம். நாம் வரும்பொழுது எதைக்கொண்டு வந்தோம். போகும்பொழுது எதைக்கொண்டு செல்கிறோம்?’ என்கிற அருமையான கீதையின் வாக்கியத்தின் சாராம்சத்தை மனதில் அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். தனிமையைத் தானாகவே தேர்ந்து எடுத்தவர்களும், தனிமைக்குத் தள்ளப்பட்டவர்களும், தனிமை என்பதை ஒரு கொடுமையாக எடுத்துக்கொள்ளாமல் அதை இனிமையான ஓர் இலையுதிர் காலமாக எடுத்துக்கொள்ளலாம்.

அனைவரிடத்திலும் அன்புடன் பழகுதல், எதிர்பார்ப்புகளை விட்டுக்கொடுத்தல், மனதில் தன்னம்பிக்கையை வளர்த்தல், உடல் ஆரோக்கியம் பாதுகாத்தல்… இந்த வழிமுறைகள் முதுமையில் இனிமையாக மட்டுமின்றி இளமையாகவும் இருக்க உதவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *