இளமை ததும்பும் இட்லி பாட்டி!

வயது அறுபதைத் தாண்டினாலே அமைதியாக ஓய்வெடுக்க நினைக்கும் மனிதர்கள், கமலாத்தாள் பாட்டியின் வாழ்க்கையை உதாரணமாகக் கருத வேண்டும். 82 வயதிலும் ஓய்வின்றி உழைத்து அடுத்தவர்களுக்கு உதவ நினைக்கும் இந்தப் பாட்டி, ‘நம் பூமியில் இன்னமும் மனிதநேயம் தழைத்திருக்கிறது’ என்பதற்கு நம்பிக்கை உதாரணமாகத் திகழ்கிறார்.

கோவை புறநகர்ப் பகுதியில் இருக்கும் வடிவேலம்பாளையம் என்ற கிராமத்தில் இந்தக் காலத்திலும் ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுத்து பலரின் பசி தீர்க்கும் இந்த இட்லி பாட்டி இப்போது இந்தியா முழுக்க பிரபலமாகி விட்டார்.

‘பாட்டிம்மா’ என அன்பாக அழைக்கப்படும் கமலாத்தாளின் பொழுது, அதிகாலை 5 மணிக்கு விடிகிறது. உடல் தளர்ந்து கூன் விழுந்திருந்தாலும், யாருடைய உதவியும் இல்லாமல் உரலில் மாவு அரைக்கிறார். சட்னி, சாம்பார் வைக்கிறார். விறகு அடுப்பில்தான் தினமும் சுமார் 1,000 இட்லி சுட்டு விற்கிறார். 30 ஆண்டுகளாக தன் வீட்டிலேயே இட்லி விற்கும் பாட்டிம்மாவின் இந்த நடைமுறை ஒருநாள்கூட மாறவில்லை.

‘‘ஆரம்பத்தில் ஐம்பது பைசாவுக்கு இட்லி கொடுத்தேன். விலைவாசி ஏறினதால ஒரு ரூபாய்க்கு விற்க வேண்டியிருக்கு’’ என குற்ற உணர்வுடன் சொல்லும் இவர், 15 ஆண்டுகளாக இந்த விலைக்குதான் விற்கிறார். பக்கத்து கிராமங்களில்கூட 6 ரூபாய்க்கு இட்லி விற்கும் சூழலில், இவர் விலையை ஏற்றவில்லை. அடித்தட்டுக் குடும்பத்தினர், கூலித் தொழிலாளிகள், பள்ளி மாணவர்கள் என பலரும் காலை ஏழு மணியிலிருந்து இவர் கடைக்கு வந்து பசியாறுகிறார்கள்.

ருசியாக சமைப்பதால், பக்கத்து கிராமங்களில் இருந்தும் அவரிடம் இட்லி சாப்பிட வருகிறார்கள். சாதாரண வீடு, எளிமையான குடும்பம். என்றாலும் இதில் பெரிய லாபம் பார்க்க ஆசைப்படவில்லை. ‘‘இதில் கிடைக்கும் குறைந்த லாபமே போதும். இத்தனை பேரின் பசி தீர்ப்பது பெரிய புண்ணியம். ‘ருசியாக இருக்கிறது’ என எல்லோரும் பாராட்டும்போது எனக்கு மனசு நிறைந்துவிடுகிறது’’ என்கிறார் கமலாத்தாள் பாட்டி.

இவரின் சேவை பற்றி மீடியாக்களில் வெளியான வீடியோக்களைப் பார்த்து இப்போது உதவிகள் குவிகின்றன. ‘ஏழை மக்களுக்கு கமலாத்தாள் பாட்டி செய்யும் சேவையில் சிறிதளவேனும் மற்றவர்கள் செய்வார்களா என்று தெரியவில்லை’ என்று தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா நெகிழ்ந்து பாராட்டி உதவி செய்வதாக அறிவித்தார். மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதைப் பார்த்துவிட்டு, உடனடியாக கமலாத்தாள் பாட்டிக்கு கேஸ் ஸ்டவ், சிலிண்டர், கிரைண்டர் கொடுக்க ஏற்பாடு செய்தார். பாட்டிக்கு அரசுத் திட்டத்தில் வீடு கொடுக்கப்படும் என கோவை கலெக்டர் அறிவித்தார். முதுமையின் தாக்கங்களை ஒதுக்கிவிட்டு எப்படி வாழ வேண்டும் என்பதற்கு நடமாடும் உதாரணமாக இருக்கிறார் இந்த இட்லி பாட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *