ஈஸிசேர் சிந்தனைகள்

புதிய தீர்வு தேடுங்கள்!

 

நகரத்து வாழ்வின் பரபரப்புகள் அலுத்துப் போய், பணியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு ஒரு கிராமத்துக்குப் போய் குடியேறினார் ஒருவர். அவர் புதிதாக வாங்கிக் குடியேறிய வீடு ஒரு பள்ளிக்கூடத்துக்கு அருகில் இருந்தது. இவர் குடியேறிய நேரம் பள்ளிக்கு தொடர் விடுமுறை என்பதால் அமைதியின் தாலாட்டில் நிம்மதியாக இருந்தார்.

விடுமுறைக்குப் பிறகு பள்ளி மீண்டும் திறந்ததும் வந்தது பிரச்னை. சில துடுக்கு மாணவர்கள் வேலி தாண்டி வீட்டுக்கு வந்து வாசலில் இருக்கும் இரும்புக் கதவை படபடவென்று அடித்து தாளம் போட்டனர். கதவைத் திறந்தால் ஓடிவிடுவார்கள். அவர் உள்ளே போனதும் திரும்பவும் கூட்டமாக வந்து தாளம் போடுவார்கள். காலையில், உணவு இடைவேளையில், மாலை பள்ளி விடுகையில் இது தொடர்கதையாக இருந்தது. புகார் செய்தும் பயனில்லை.

வேறு வழியின்றி ஒருநாள் இவரே அந்த மாணவர்களை அழைத்தார். அவர்கள் ஆறு பேர் இருந்தார்கள். ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தார். ‘‘நீங்கள் கதவைத் தட்டுவதால் எழும் இசை எனக்கு மிகவும் பிடிக்கிறது. ரேடியோ, டி.வி எதுவும் இல்லாத எனக்கு அதுதான் பொழுதுபோக்கு. சனி, ஞாயிறு விடுமுறையில் நீங்கள் வருவதில்லை. அந்த நாட்களில் அதைக் கேட்காமல் தவிக்கிறேன். தினமும் அரை மணி நேரமாவது இப்படி வந்து கதவில் இசை வாசியுங்கள். உங்களுக்கு ஆளுக்கு ஒரு ரூபாய் தினம் தினம் தருகிறேன். முடிந்தால் விடுமுறை நாட்களில்கூட வந்துவிட்டுப் போங்கள்’’ என்றார்.

‘கரும்பு தின்னக் கூலியா’ என்பதுபோல பரவசப்பட்ட பையன்கள் தினமும் உற்சாகமாக வந்து அடித்துவிட்டு, காசு வாங்கிப் போனார்கள். பத்து நாட்கள் ஆனதும் பெரியவர் சோகமாக அவர்களிடம் வந்தார். ‘‘பென்ஷனில் குடும்பம் நடத்தும் எனக்கு பட்ஜெட் உதைக்கிறது. இனிமேல் ஆளுக்கு ஐம்பது பைசாதான் கொடுக்க முடியும்’’ என்றார். பையன்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் வந்தார்கள். அரை மணி நேரம் கதவை அடிப்படி, அதன்பின் கால் மணி நேரமானது.

பத்து நாட்கள் போனதும் பெரியவர் இன்னும் சோகமாக வந்தார். ‘‘மருந்துகள் எல்லாம் விலையேறிவிட்டன. செலவு அதிக்மாகிவிட்டது. அதனால இனிமே ஆளுக்கு 25 பைசாதான் தர முடியும்’’ என்றார்.

கோபமான ஒரு பையன், ‘‘இவருக்கு ஆசையைப் பாருடா! 25 பைசா செல்லாதுன்னு அரசாங்கமே சொல்லிடுச்சு. அந்தக் காசுக்கு எல்லாம் எங்களால டிரம்ஸ் அடிக்க முடியாது’’ என்றபடி மற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வெளியேறினான். பள்ளியில் மற்ற பையன்களிடமும் ‘பெரியவரின் கஞ்சத்தனம்’ பற்றி சொன்னான்.

பெரியவர் வீட்டில் அன்று முதல் அமைதி மீண்டும் குடிகொண்டது. சண்டை போடாமல், கோபத்தில் கத்தாமல், சாமர்த்தியமாக பிரச்னையைத் தீர்த்தார் அவர்.

உங்களை வாட்டும் எந்தப் பிரச்னை என்றாலும், வழக்கமான கோணத்தில் சிந்திக்காமல் புது கோணத்தில் அணுகுங்கள். வித்தியாசமான தீர்வுகள் கிடைக்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *