எங்கும் தடுப்போம் டெங்கு கொசுக்களை!

தமிழகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது டெங்கு ஜுரம். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் டெங்கு பரவலாக தாக்குதல் நிகழ்த்துகிறது. குறிப்பாக குழந்தைகள் நிறைய பேரை இது தாக்கி வதைப்பதால் அச்சம் அதிகமாகியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையே டெங்கு தாக்கும். எனவே, குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள், உடல்நலமின்றி இருப்பவர்கள் போன்றவர்களே அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
ஜுரம், மூட்டுவலி, கண்கள் சிவந்திருப்பது, தலைவலி போன்றவை டெங்கு அறிகுறிகள். 24 மணி நேரத்துக்கு மேல் அதிக ஜுரம் நீடித்தால், உடலில் சிவப்புத் திட்டுகள் தோன்றினால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். டெங்கு ஜுரத்துக்கு நிவாரணம் தரும் நேரடி சிகிச்சை எதுவுமில்லை. டெங்கு வந்ததும் ரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். நிலவேம்புக் கஷாயம் குடித்தால், இதை அதிகரிக்கச் செய்யலாம். நவீன மருத்துவத்தில் டெங்குவால் ஏற்படும் இரண்டாம்கட்ட பாதிப்புகளுக்கு மட்டுமே சிகிச்சை தருவார்கள். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, டெங்குவை எதிர்த்துப் போராட உடலைத் தூண்டுவார்கள். டெங்குவின் விளைவால் ஏற்படும் ரத்தக்கசிவே, நோயாளிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. அதனால் எச்சரிக்கை முக்கியம்.
நேரடித் தீர்வு தரும் மருந்துகள் இல்லாத டெங்குவை, வராமல் தடுப்பதே சிறந்த வழி. ‘நம் வீடு மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது, சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்க வேண்டும்’ என மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். தங்கள் வீடுகளின் பக்கத்தில் இருக்கும் காலியிடங்கள், மைதானங்கள், அரசு அலுவலக வளாகங்கள், தெருக்கள் என எல்லா இடங்களின் தூய்மை பற்றியும் மக்கள் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். இந்த விழிப்பு உணர்வு பல எதிர்கால நன்மைகளைத் தரும்.
கொசு பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
* மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர்த்தொட்டி நன்கு மூடப்பட்டுள்ளதா என கவனியுங்கள். அதன் உள்புறத்தில் டார்ச் அடித்துப் பார்த்து, கொசுக்கள் எங்காவது முட்டையிட்டுள்ளதா என கண்காணியுங்கள். தண்ணீர்த்தொட்டிக்கு அடியில் எங்காவது தண்ணீர் கசிந்து தேங்கினால், அதை உடனடியாக சுத்தம் செய்யுங்கள்.
* டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் கொசு, நல்ல தண்ணீரில்தான் விரைந்து வளர்கிறது. மொட்டை மாடியில் பழைய பர்னீச்சர், பாட்டில், பாத்திரங்கள் என எதையாவது போட்டு வைத்திருந்து, அவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதா என கவனியுங்கள்.
* மொட்டை மாடியிலிருந்து மழைநீர் வெளியேறும் குழாய்களில் எங்காவது அடைப்பு இருந்து தண்ணீர் தேங்கியுள்ளதா என கவனியுங்கள்.
* மாடித் தோட்டம் போட்டிருந்தால், அதை ஒட்டிய பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்யுங்கள்.
*வீட்டின் ஜன்னல்களுக்கு மேலாக இருக்கும் சன்ஷேடுகளில் ஏதாவது அடைத்துக்கொண்டு தண்ணீர் தேங்கியிருக்கலாம். சுத்தம் செய்யுங்கள்.
* ஏ.சி-யிலிருந்து வெளியேறும் தண்ணீர் அதன் அடியிலோ, குழாயிலோ தேங்கியிருக்கலாம். அதை வெளியேற்றுங்கள். பால்கனிகளையும் சுத்தமாக வைத்திருங்கள்.
* தோட்டத்திலோ, வீட்டைச் சுற்றிலுமோ தேவையற்ற பொருட்களைப் போட்டு வைத்திருந்தால், அவற்றை சுத்தம் செய்யுங்கள்.
* தொட்டிகளில் செடி வளர்த்தால், அவற்றுக்கு ஊற்றும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். மண்ணைக் கிளறிவிட்டால், தண்ணீரை உள்ளே உறிஞ்சிக்கொள்ளும்.
* பாத்ரூமிலிருந்து வெளியேறும் தண்ணீர் தேங்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை அப்படித் தேங்கினால், அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய்ப்படலம் மேலே படர்ந்து, தண்ணீருக்குள் ஆக்சிஜன் போகாதபடி செய்துவிடும். கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வது தவிர்க்கப்படும். வீட்டுக்கு வெளியே சாக்கடை தேங்கினால், அங்கும் இப்படிச் செய்யலாம். சாக்கடையில் மண்ணெண்ணெய்கூட ஊற்றலாம்.
* வீட்டுக்குள்ளும் இதேபோன்ற கவனம் வேண்டும். எந்தப் பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து வைத்தாலும், அதை உள்ளே கொசு போக முடியாதபடி மூடி வையுங்கள்.
*காலியாக இருக்கும் பாத்திரங்களைக் கவிழ்த்து வையுங்கள். கிச்சன் ஸிங்க்கில்கூட எப்போதும் ஈரம் இருப்பது கூடாது.
* பாத்ரூமை தினமும் கிருமிநாசினி போட்டுக் கழுவ வேண்டும். தண்ணீர் வெளியேறும் குழாய்களில் எங்கும் சிறிது தண்ணீர்கூட தேங்கியிருக்கக் கூடாது.
* வீட்டுக்குள் அலங்கார ஜாடியில் பிளாஸ்டிக் மலர்கள் வைப்பவர்கள், வாஸ்து சட்டியில் தண்ணீர் ஊற்றி பூ வைப்பவர்கள், இதையெல்லாம் தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.
* ஏர்கூலர் பயன்படுத்துபவர்கள், அதில் இருக்கும் தண்ணீரை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஃபிரிட்ஜின் அடியிலும் பின்னாலும் தண்ணீர் தேங்க விடக்கூடாது.
* குப்பை கொட்டி வைக்கும் கூடையை எப்போதும் மூடி வைக்க வேண்டும். சமையலறையிலும் தேவையற்ற கழிவுகளைச் சேர்த்து வைக்கக்கூடாது.
* இருள் சூழும் மாலை நேரங்களில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்க வேண்டும். அந்த நேரத்தில்தான் வீட்டுக்குள் கொசுக்கள் பரவுகின்றன.
* குழந்தைகள் பகல் நேரத்தில் தூங்கும். அப்போது கொசுவலையால் மூடி வைக்கவும். டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் பகல் நேரத்தில்தான் அதிகம் கடிக்கின்றன.
* கொசுவை விரட்டும் திரவங்கள், மேட் போன்றவை வேதிநச்சுகளைப் பரப்பும். சுவாசக்கோளாறு உள்ளவர்களுக்கு இவை ஆபத்தைத் தரலாம். கொசுவலை மற்றும் மின்சார கொசுவிரட்டி இயந்திரங்களை உபயோகிக்கலாம்.
* வேப்ப எண்ணெயும் தேங்காய் எண்ணெயும் கலந்து உடலில் தடவிக்கொண்டால் கொசுக்கள் கடிக்காது.
* கட்டிலின் அடிப்பகுதி, சோபாவின் பின்பக்கம் என வீட்டில் அதிகம் கவனிக்கப்படாத இருட்டுப் பகுதிகளில்தான் கொசுக்கள் மறைந்திருக்கும். அங்கெல்லாம் கிருமிநாசினியைத் தண்ணீரில் கலந்து தரையைத் துடைக்க வேண்டும். கடுகு எண்ணெயில் ஓமத்தைப் பொடியாக்கிப் போட்டு அங்கே வைத்தால், அந்த நறுமணத்தில் கொசு வெளியேறிவிடும்.
* உடலை முழுமையாக மூடியிருக்கும்படி ஆடைகளை அணிவது, கொசுக்கடியிலிருந்து பாதுகாப்பு தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *