ஏன் ஏற்படுகிறது முதுமை?

ஏன் ஏற்படுகிறது முதுமை?

– பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராசன்

முதியோர் நல மருத்துவர்

முதுமையையும் மரணத்தையும் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் மனித இனத்துக்கு காலம் காலமாக இருந்துவருகிறது. அந்தக் கால ஞானிகள் தொடங்கி இந்தக் கால விஞ்ஞானிகள் வரை பலரும் இதற்காக ஆராய்ச்சிகள் செய்தார்கள்; செய்கிறார்கள். ஆனால், இன்னமும் விடை தெரியாத கேள்வியாகவே இது இருக்கிறது. இயற்கையை அவ்வளவு எளிதாக மனிதர்களால் வென்றுவிட முடியாது!

சரி, முதுமை எதனால் ஏற்படுகிறது? இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

* வயது ஆக ஆக உடலில் உள்ள முக்கிய உயிரணுக்கள் உற்பத்தியாகும் திறன் குறைகிறது. திறனற்ற உயிரணுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன.

* கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படாமல் உடலில் தங்கி விடுகின்றன.

* ஃப்ரீரேடிகல்ஸ் (Freeradicals) என்ற திரவம் உடலில் அதிகம் சேர்ந்து மற்ற திசுக்களை அழிக்கிறது.

* உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன் (Growth hormone) குறைதல்.

* மூளைப் பகுதியிலுள்ள பிட்யூட்டரி என்னும் நாளமில்லா சுரப்பி, ‘இறப்பு ஹார்மோன்’ (Killer hormone) எனும் திரவத்தைச் சுரக்கிறது. இது பெண்கள் பூப்பெய்தும் பருவத்தில் சுரக்க ஆரம்பிக்கிறது. எனவே, ஒரு பெண் பூப்படையும் வயது தள்ளிப் போனால், அவள் ஆயுளும் அதிகரிக்கும் என்ற ஒரு கருத்து உண்டு.

* மூளைப்பகுதியில் பீனியல் எனும் சுரப்பி மேலோட்டினின் (Melotinin) எனும் திரவத்தைச் சுரக்கிறது. இளமையைப் பாதுகாக்க இது மிகவும் அவசியம். ஆனால், 25 வயதில் இதன் சுரப்பு குறைய ஆரம்பிக்கிறது. எனவே, முதுமையடைவது அப்போதே ஆரம்பித்து விடுகிறது.

* முதுமையடைவதற்கு மரபணு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.  திசுக்களின் நலம் பேணவும், அவை சரியாக செயல்படவும் மரபணுக்களே உதவுகின்றன.

 

 

முதுமையில் உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களையும் அவற்றின் விளைவுகளையும் அறிவோம்:

நாக்கு

மாற்றங்கள்: சுவை மொட்டுகள் (Taste buds) எண்ணிக்கை குறையும்; சுவையைக் கட்டுப்படுத்தும் நரம்பு மையமும் (Parietal lobe) தளர்ந்துவிடும்.

விளைவுகள்: உணவின் அறுசுவையை உணரும் திறன் குறையும். உப்பை உணர்வது கடைசியாய் குறையும்.

————

வாய்

மாற்றங்கள்: வாயில் உமிழ்நீர் குறையும்.

விளைவுகள்: வாயில் வறட்சி ஏற்படும்.

———–

இரைப்பை

மாற்றங்கள்: அமிலச்சுரப்பு குறையும்.

விளைவுகள்: இரைப்பையின் உணவை கிரகிக்கும் தன்மை சற்று குறையும்.

————-

நாளமில்லா சுரப்பிகள்

மாற்றங்கள்: இன்சுலினை உடல் சரியாகப் பயன்படுத்தாது.

விளைவுகள்: சிலருக்கு இது நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம்.

—————–

சிறுகுடல்

மாற்றங்கள்: ரத்த ஓட்டம் 40% குறையும்; உணவை கிரகிக்கும் பகுதியில் 30% குறையும்.

விளைவுகள்: உணவு, மருந்துகளைக் கிரகிக்கும் தன்மை குறையும்.

——————-

பெருங்குடல்

மாற்றங்கள்: சுருங்கி விரியும் தன்மை குறையும்.

விளைவுகள்: மலச்சிக்கல் ஏற்படும்.

—————–

கல்லீரல்

மாற்றங்கள்: மூன்றில் ஒரு பங்கு எடை குறையும்.

விளைவுகள்: செயல்திறன் குறையும்.

———————

மூளை

மாற்றங்கள்: எடை குறையும்; ரத்த ஓட்டம் 30% குறையும்; செல்கள் குறையும்.

விளைவுகள்: அதிக மறதி ஏற்படும். பக்கவாதம் தாக்கக்கூடும். மனநிலையில் மாற்றம் ஏற்படும்.

—————————–

சிறுநீரகம்

மாற்றங்கள்: சிறுநீரகத்திலுள்ள நெப்ரான்கள் அதிக எண்ணிக்கையில் குறையும். ரத்த ஓட்டம் 53% குறையும். கழிவுப் பொருள்களை வெளியேற்றும் சக்தி 46% குறையும்.

விளைவுகள்: சிறுநீரகம் எளிதில் செயல் இழக்கும். நீர் வறட்சி மற்றும் நீர்க்கோர்த்தல் ஏற்படலாம். மருந்தை கிரகிக்கும் திறனும் வெளியேற்றும் திறனும் குறையும்.

——————–

இதயம்

மாற்றங்கள்: இதயத்திலிருந்து வெளிவரும் ரத்த அளவு குறையும்; நாடித்துடிப்பு வேகம் குறையும்.

விளைவுகள்: உடல் சோர்வு, மூச்சுத்திணறல் ஏற்படும். ரத்த அழுத்தம் மாறுபடும். நாடித் துடிப்பு சீரற்று இருக்கும்.

—————-

சிறுநீர்ப்பை

மாற்றங்கள்: ஆண்களுக்கு சிறுநீர்ப்பையில் உள்ள பிராஸ்டேட் (Prostate gland) எனும் சுரப்பி பெரிதாகிக் கொண்டே வரும்.

விளைவுகள்: சிறுநீர் அடிக்கடி வெளியேறும். சிறுநீர் செல்லும்போது அடைப்பு ஏற்படும்.

—————

ஹார்மோன்

மாற்றங்கள்: பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் குறையும். ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரோன் சற்று குறையும்.

விளைவுகள்: பெண்களுக்கு எடை கூடும். எலும்புகளின் வலிமை குறைந்து, எளிதில் எலும்பு முறிவு ஏற்படலாம். இறுதி மாதவிடாய் ஏற்படும். ஆண்களுக்கு தசையின் அளவு குறையும். அதிக களைப்பு ஏற்படும்.

—————

இனப்பெருக்க மண்டலம்

மாற்றங்கள்: பெண்களுக்கு மார்பகம் மற்றும் பிறப்புறுப்புகளில் சில மாற்றங்கள் ஏற்படும். ஆண்களுக்கு விந்தணுக்கள் சற்று குறையும். ஆனால் கரு உருவாக்கும் தன்மை குறையாது.

விளைவுகள்: பாலுணர்வு குறையும்.

—————–

நுரையீரல்

மாற்றங்கள்: நுரையீரலில் உள்ள சிறு சிறு காற்றுப் பைகள் காரணமே இல்லாமல் பெரிதாகும். இதனால் நுரையீரலின் விரிந்து சுருங்கும் தன்மை குறையும். விலா எலும்புகள் கடினமாவதால், சுற்றியுள்ள தசைகளின் பலம் குறையும்.

விளைவுகள்: செயல்திறன் குறையும், நோய்த் தொற்று அபாயம் அதிகரிக்கும்.

————–

தோல்

மாற்றங்கள்: நீர் குறையும், கொழுப்புப் பகுதியும் குறையும்.

விளைவுகள்: தோலில் வறட்சி, நமைச்சல் ஏற்படும். குளிரை அதிகம் தாங்க முடியாது.

——————

எலும்பு

மாற்றங்கள்: எலும்பின் பொருள் திணிவு குறையும். மூட்டுகளின் இடையே உள்ள ஜவ்வு தேயும்.

விளைவுகள்: எளிதில் எலும்புமுறிவு ஏற்படும். மூட்டுவலியும் வாட்டும்.

————————

கண்

மாற்றங்கள்: விழி லென்ஸ் கடினத்தன்மையும் விறைப்புத் தன்மையும் அடையும். ஒளி ஊடுருவிச் செல்ல முடியாத நிலை உருவாகும்.

விளைவுகள்: அருகே உள்ள பொருட்களைப் பார்ப்பதில் சிரமம் ஏற்படும். பார்வை குறையும். கண்புரை ஏற்படும்.

———————–

காது

மாற்றங்கள்: உள்காதிலும் நரம்பிலும் மாற்றங்கள் ஏற்படும்.

விளைவுகள்: கேட்கும் திறன் குறையும். நிலை தடுமாறும்.

 

முதுமைப் பருவத்தை ‘நோய்களின் மேய்ச்சல் காடு’ என்கிறார்கள். அப்பருவத்தில் எந்தவிதமான நோய்கள் ஏற்படுகின்றன? அடுத்த இதழில் பார்க்கலாம்!

(மகிழ்ச்சியைத் தொடர்வோம்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *