கார்டுகளில் கவனமாக இருங்கள்!

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற கார்டுகள் திருடு போவதும், ஏ.டி.எம் மையங்களில் ஸ்கிம்மர் கருவிகளைப் பொருத்தி கார்டு ரகசியங்களைத் திருடுவதும், பணம் எடுக்க வருபவர்கள் தாக்கப்படுவதும் தொடர்கதை ஆகிவருகின்றன.

இந்த கார்டுகளை எச்சரிக்கையுடன் பயன்படுத்துவது எப்படி?

* ஒதுக்குப்புறமான, வெளிச்சம் இல்லாத இடங்களில் இருக்கும் ஏ.டி.எம்களைத் தவிர்த்து விடுங்கள். வங்கிக் கிளையோடு இணைந்துள்ள ஏ.டி.எம்மையோ, பெரிய வணிக மற்றும் அலுவலக வளாகங்களில் இருக்கும் ஏ.டி.எம்களையோ பயன்படுத்துங்கள். எப்போதும் மக்கள் நடமாட்டமும் பாதுகாப்பும் இருப்பதால், இங்கு நீங்கள் பாதுகாப்பாக உணரலாம்.

* ஏ.டி.எம் மெஷினில் கார்டு நுழைக்கும் இடத்தில் பசையோ, டேப்போ ஒட்டப்பட்டிருந்தாலோ, சம்பந்தமில்லாமல் ஏதாவது வயர்கள் இணைக்கப்பட்டிருந்தாலோ, அந்த மெஷினைப் பயன்படுத்தாதீர்கள்.

* அவசிய அவசரம் இருந்தால் தவிர, இரவு வெகுநேரத்துக்குப் பிறகோ, அதிகாலையிலோ ஏ.டி.எம்முக்குச் செல்லாதீர்கள். பெண்கள் அந்த நேரத்தில் துணைக்கு யாரையாவது அழைத்துச் செல்லுங்கள்.

* ஏ.டி.எம் இருக்கும் அறையில் சம்பந்தமே இல்லாமல் யாராவது நீண்ட நேரம் இருந்தால், அங்கே போகாதீர்கள். அல்லது செக்யூரிட்டியை உதவிக்குக் கூப்பிடுங்கள்.

* ஏ.டி.எம் அட்டை வைத்திருக்கும் பர்ஸில், ரகசிய ‘பின்’ நம்பரை எழுதி வைக்காதீர்கள். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களிடம்கூட பின் நம்பரைச் சொல்லாதீர்கள். கார்டு தொலைந்தால் உடனே பணம் பறிபோய்விடும்.

* உங்களது பிறந்த நாள், வாகன எண், 1234 போன்ற எளிதில் யூகிக்க முடிகிற எண் ஆகியவற்றை பின் நம்பராகப் பயன்படுத்தாதீர்கள்.

* நீங்கள் ஏ.டி.எம் மெஷினில் கார்டை செருகி பின் நம்பரை அழுத்தும்போது யாராவது எட்டிப் பார்க்கக் கூடும். ஒருவேளை விஷமிகள் எங்காவது ரகசியக் கேமரா வைத்து படம் பிடிக்கக்கூடும். எனவே பின் நம்பரை அழுத்தும்போது, இன்னொரு கையால் மறைத்துக் கொள்ளுங்கள்; அல்லது பர்ஸ் வைத்தும் மறைக்கலாம்.

* முகம் தெரியாத நபர்களின் உதவியை நாடாதீர்கள். வேறு வழியின்றி யாரிடமாவது உதவி கேட்டால், அன்றே உங்கள் பின் நம்பரை மாற்றிவிடுங்கள்.

* பணப் பரிவர்த்தனைக்குப் பிறகு ஞாபகமாக மெஷினில் இருக்கும் ‘கேன்சல்’ பட்டனை அழுத்துங்கள்.

* இயன்றவரை நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்களிலேயே பணம் எடுங்கள். ஏதாவது மோசடியோ, கோளாறோ என்றால் ஒரே வங்கிக்கு அலைவதோடு மட்டும் முடிந்துவிடும். இல்லாவிட்டால் இரண்டு இடங்களுக்குப் போக நேரும்.

* உங்கள் வங்கிக் கணக்கில் உங்கள் மொபைல் எண்ணை ஞாபகமாக இணைத்து விடுங்கள். உங்கள் கணக்கில் பணம் போடப்பட்டாலும், எடுக்கப்பட்டாலும் உடனடியாக உங்கள் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் வந்துவிடும். யாராவது மோசடி செய்தாலும், உடனே தெரிந்துகொண்டு கார்டை முடக்கச் செய்யலாம்.

* உங்கள் வங்கிக் கிளையிலிருந்து பேசுவது போல போன் செய்வார்கள். ‘உங்கள் கார்டு பிளாக் ஆகிவிட்டது’ என்று ஏதாவது ஒரு பொய் சொல்லி உங்களைப் பதற வைப்பார்கள். எப்படிக் கேட்டாலும் உங்கள் டெபிட்/ கிரெடிட் கார்டு விவரங்களைச் சொல்லாதீர்கள். குறிப்பாக சி.வி.வி எண், பின்நம்பர், ஒன்டைம் பாஸ்வேர்டு போன்றவற்றைச் சொல்லாதீர்கள். உங்கள் வங்கிக்கு அந்த விவரங்கள் தேவையில்லை. அப்படி அவர்கள் கேட்கவும் மாட்டார்கள். இது மோசடியாளர்களின் வேலை!

* கார்டு தொலைந்தால் உடனே உங்கள் வங்கியில் தந்திருக்கும் ஹெல்ப்லைன் நம்பருக்கு போன் செய்து சொல்லுங்கள். எல்லா வங்கியிலும் இதற்காக தனி இணைப்பு வைத்திருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக கார்டை முடக்கிவிடுவார்கள்.

* கடைகளில் கார்டைப் பயன்படுத்தி பொருள் வாங்குவதற்கும், பின் நம்பரை அழுத்த வேண்டும். அங்கு நீங்களே கைகளால் மெஷினின் கீபேடை மறைத்துக்கொண்டு பின் நம்பரை அழுத்துங்கள். யாரும் கேட்கிறார்கள் என்பதற்காக பின் நம்பரைச் சொல்லாதீர்கள்.

* டிக்கெட் எடுப்பது, பில் கட்டணம் செலுத்துவது, பொருட்கள் வாங்குவது என ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு கார்டு பயன்படுத்தும்போது, பாதுகாப்பான இணையதளங்களில்தான் பயன்படுத்துகிறோமா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். சாதாரண இணையதள முகவரிகள்  http://  என ஆரம்பிக்கும். பாதுகாப்பான இணையதள முகவரிகள் https:// என கூடுதலாக ஒரு ‘எஸ்’ சேர்ந்து ஆரம்பிக்கும். இவையே பணப்பரிவர்த்தனைக்குப் பாதுகாப்பானவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *