குளிர்காலப் பிரச்னைகளை தெளிவாக சமாளிக்கலாம்!

‘‘எவ்வளவு குளிரையும் போர்வை போர்த்திக்கொண்டு சமாளித்துவிடலாம். ஆனால், இந்த வெயில்தான் இம்சை’’ என கோடைக் காலத்தில் எரிச்சல் அடைவோம். ‘‘வெயிலை ஃபேன், ஏ.சி துணையுடன் கடந்துவிடலாம். ஆனால், இந்தக் குளிர்தான் கொடுமை’’ என குளிர்காலத்தில் புலம்புவோம்.

ஒப்பிட்டுப் பார்த்தால் கோடையைவிட குளிர்காலம் எவ்வளவோ பரவாயில்லை. பல மாதங்கள் வெயில் கொளுத்தும் நம் நாட்டில், சுட்டெரிக்கும் வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க இது சிறந்த பருவம். ஆனால் குளிர் நாட்களில் சிறு சிறு தொல்லைகளும், நோய்களும் தாக்கலாம். குறிப்பாக முதியோருக்கு இது நோய்களும் பிரச்னைகளும் வரும் காலம். விழிப்புடன் இருந்தால் இந்தக் குளிர்காலத்தை தெளிவாக சமாளிக்கலாம்.

 

குளிர்காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள்:

* சருமம் வறட்சியாக இருக்கும். நமைச்சல், எக்ஸிமா போன்ற தோல் நோய்கள் அதிகமாகும். தலைமுடியில் பொடுகுத்தொல்லை அதிகரிக்கும். உதடுகளில் வெடிப்பு தோன்றும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இந்தத் தொல்லைகள் அதிகம் ஏற்படும்.

* மூட்டுகளில் வலி மற்றும் இறுக்கம் அதிகரிக்கும். மூட்டுகளைச் சுற்றியுள்ள பகுதிகள் மரத்துப் போனது போல இருக்கும்.

* உணவு மற்றும் தண்ணீர் வழியாக கிருமித்தொற்று இந்த நாட்களில்தான் அதிகம் பரவும். எனவே சீதபேதி, வாந்தி, வயிற்றுவலி போன்ற வயிறு மற்றும் குடல் சார்ந்த நோய்கள் வர வாய்ப்புண்டு.

* குளிர்காலத்தில் மூக்கில் நீர் சொட்டுவது, காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற தொல்லைகள் வர வாய்ப்பு அதிகம். பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளினால் இந்தத் தொல்லைகள் உண்டாகும்.

* ஆஸ்துமா நோயாளிகளுக்கு குளிர்காலத்தில் இத்தொல்லைகள் அதிகரிக்க வாய்ப்புண்டு.

* குளிர்காலத்தில் பசி சற்று அதிகம் எடுக்கும். உடல் பருமனாக உள்ளவர்கள் இதனால் அதிகம் சாப்பிட்டு, அவர்களின் எடை கூட வாய்ப்புண்டு. உணவில் கவனம் தேவை.

* தைராய்டு குறைபாடு உள்ளவர்களால் அதிக குளிரைத் தாங்கிக்கொள்ள முடியாது.

* தாகம் சற்று குறையும். உடலில் நீர் வறட்சி ஏற்படும். உடல் சோர்வு அதிகரிக்கும். மலச்சிக்கல் ஏற்படும்.

* குளிரான சூழலில் நீண்ட நேரம் இருந்தால், உடல் தன் இயல்பான சூட்டை இழந்துவிடும். அதன் விளைவாக பல உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.

* முதியவர்கள் சறுக்கி விழுந்து உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்திக்கொள்வது இந்தக் காலத்தில் அதிகமாக நிகழும்.

குளிர்காலப் பிரச்னைகளை சமாளிக்க:

* தலையில் தினமும் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி ஷாம்பு போட்டு தலை குளிப்பது அவசியம். வாரம் ஒரு முறை எண்ணெய்க் குளியல் சருமத்துக்கும் கூந்தலுக்கும் நல்லது.

* குளிப்பதற்கு மிருதுவான சோப்பையே உபயோகிக்க வேண்டும்.

* அதிக சூடாக இருக்கும் தண்ணீரில் குளிப்பது இதமாகத் தெரியலாம். ஆனால், இது சருமத்தை உடனே வறண்டு போகச் செய்யும். எனவே மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் குளிக்கவும்.

* சருமத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் பெட்ரோலியம் ஜெல்லி சார்ந்த களிம்பைத் தடவும். ஈரப்பசை தரும் (Moisture) களிம்பு அல்லது எண்ணெயை உடலில் தடவி வரலாம்.

* இயன்றவரை வீட்டிலேயே சமைத்த உணவை உண்ண வேண்டும். பாக்டீரியா போன்ற கிருமிகள் குளிர்ந்த நிலையில் நன்றாக வளரும். குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

* கைகளை முறையாகக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நகங்களை வெட்ட வேண்டும்.

* கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும். வெளியில் செல்லும்போது சூடான தண்ணீர் நிரப்பிய பாட்டிலை அவசியம் எடுத்துச் செல்லவும்.

* அதிகம் குளிராக இருக்கும்போது வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். உடல் சூட்டை சற்று அதிகரிக்க கூடிய கம்பளி உடைகளை அணியலாம். தலையில் ஸ்கார்ஃப் கட்டிக்கொள்ளலாம்.

* மழையில் நனைந்தாலோ, உடலில் ஈரம் பட்டாலோ உடனே துடைத்துவிட்டு வேறு ஆடைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். ஈர உடைகள் உடல் வெப்பத்தை உடனடியாகக் குறைத்துவிடும்.

* குளிர்நாட்களில் இயல்பாக தாகம் எடுக்காது. என்றாலும் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். இந்த நாட்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். இது நம் சருமத்தையும் வறட்சியாக்கிவிடும். தண்ணீர் குடிப்பதே இதிலிருந்து நம்மைக் காக்கும்.

* மழைநாட்களில் வெளியில் போய்விட்டு வரும்போது செருப்பு வழுக்கிவிட்டு கீழே விழுவது, வீட்டைச் சுற்றியிருக்கும் ஈரத்தரையில் நடந்து வழுக்குவது என பாதிப்புகள் இருக்கும். ஈரத்தரையில் நடப்பதைத் தவிர்க்கவும். செருப்பில் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

* நோய்த்தொற்றுகள் பரவாமல் பாதுகாத்துக்கொள்ள, கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.

* ஆஸ்துமாவுக்கு இன்ஹேலர் உபயோகிப்பவர்கள், தவறாமல் உபயோகிக்க வேண்டும்.

* மூட்டுகள் இறுக்கமாகிவிடுவதால், மூட்டுவலி ஏற்படும். உடலில் எண்ணெய் தடவி மசாஜ் செய்துகொள்வது இதற்கு இதம் தரும். ரத்த ஓட்டத்தையும் சீராக்கும். தேவையானால், மருத்துவர் ஆலோசனைப்படி பிசியோதெரபி சிகிச்சை செய்துகொள்ளவும்.

* ஃப்ளூ காய்ச்சல் வராமல் தடுக்க அதற்கான தடுப்பூசி (Influenza vaccine) வருடம் ஒருமுறை குளிர்காலத்தில் போட்டுக் கொள்ளலாம். 50 வயது தாண்டியவர்களுக்கு நிமோனியா காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பூசி (Pneumococcal vaccine) போட்டுக் கொண்டால் ஆயுள் முழுவதும் இத்தொல்லையின்றி இருக்க முடியும்.

* குளிர்காலத்தில் அதிகம் தேவையான காய்கறிகள், பச்சைக் காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம், பீட்ரூட் முக்கியம். எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்கவும்.

* பழங்களில் மாதுளம் மற்றும் கொய்யா மிகவும் தேவையானது. பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற கொட்டை வகைகள் உகந்தவை.

* குளிர்காலத்துக்கு சூப் ஒரு சிறந்த உணவு. குளிரை விரட்ட அவ்வப்போது சூப் குடிக்கலாம்.

* தவறாமல் நடைப்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். குளிர் நடுக்கும் அதிகாலையில் செல்லாம, வெயில் வந்ததும் வாக்கிங் செல்லலாம். இப்படி வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள்ளேயே யோகா பயிற்சியைச் செய்யலாம்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், குளிர்காலத்தை சிவப்புக் கம்பளம் விரித்து மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *