கோவையில் வீசிய முதுமை எனும் பூங்காற்று!
‘‘முதுமையை முறியடிக்க முடியாது. ஆனால், முதுமையால் ஏற்படும் தொந்தரவுகளை முறியடிக்கலாம். அதற்கு முறைப்படி முழு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். சரிவிகித உணவு சாப்பிட வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்’’ என்றார் டாக்டர் வி.எஸ்.நடராசன். தன் மனோபலத்தால் ஒருவர் புற்றுநோயை எப்படி வென்றார் என்ற உண்மை நிகழ்வை அவர் விளக்கினார். நிமோனியா தடுப்பூசி போடாததால் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போன துயர நிகழ்வை அவர் கூறி அனைவரின் மனதையும் நெகிழ வைத்தார்.
டாக்டர் வி.எஸ்.நடராசன் முதியோர் நல அறக்கட்டளையும், திருப்பூர் வெற்றி நலவாழ்வு மையமும் இணைந்து ‘அனுபூதி’ என்ற பெயரில் முதியோர்களுக்கான கருத்தரங்கை கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் 06.10.2019 அன்று நடத்தின. ‘முதுமை எனும் பூங்காற்று’ இதழ் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது.
கோவை கொடிசியா தொழில் பூங்கா தலைவர் திரு. ஏ.வி.வரதராஜன் தலைமை வகிக்க, வெற்றி நலவாழ்வு மையத்தின் தலைவர் திரு. கே.பி.ஆர்.நடராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். ‘கருவறை முதல் முதுமை வரையிலான மனிதனின் ஒவ்வொரு நிலையிலும், அந்த நிலையை எதிர்கொள்வதற்கான முழு அறிவையும், இசைவாக வாழ்வதற்கான வழிமுறைகளையும் வழங்குவதே வெற்றி நலவாழ்வு மையத்தின் நோக்கம்’ என்று அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும்படி பேசினார் அதன் துணைச் செயலாளர் திரு. ஸ்கை வி.சுந்தரராஜ்.
சொல்வேந்தர் திரு. சுகி சிவம் இதழை வெளியிட, ஆசிரியர் மருத்துவர் வி.எஸ்.நடராசன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
‘‘மூன்று பேருக்கு என் நன்றிகள். திரு. ஸ்கை வி.சுந்தரராஜ் அவர்கள் ‘இந்த இதழை கோவையில் வெளியிடுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்’ என்றார். ‘கரும்பு தின்ன கூலி இல்லாமல்’ இதை உடனே ஒப்புக்கொண்டேன். அடுத்தாக, 101 பேரிடம் இந்த இதழுக்கு ஆண்டு சந்தா சேர்த்த கோவை திரு. கே.வி.இராஜகோபாலுக்கு நன்றி. இதழ் வெளிவர உதவிய விளம்பரதாரர்கள், இதழை உருவாக்கித் தந்த தரு மீடியா பிரைவேட் லிமிடெட் ஆகியோருக்கும் நன்றி’’ என்றார் டாக்டர் வி.எஸ்.நடராசன். திரு. கே.வி.இராஜகோபாலுக்கு புகழ்பெற்ற மருத்துவர் பி.சி.ராஜு பூச்செண்டு கொடுத்து வாழ்த்தினார்.
சொல்வேந்தர் திரு.சுகி சிவம், வயோதிகத்தை வெல்லும் வழிகள் பற்றி சுவாரசியமான உரை நிகழ்த்தினார். ‘முதுமையில் மறதி நோய்’ என்ற தலைப்பில் சென்னை நரம்பியல் நிபுணர் டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரனும், ‘வலியைத் தீர்க்கும் வழிகள்’ என்ற தலைப்பில் சென்னை இயற்கை மற்றும் யோகா மருத்துவர் அபிராமி பிரேம்நாத்தும் பேசினார்கள். வெற்றி நலவாழ்வு மையத்தின் செயலாளர் திரு. மு.கணேசன் நன்றி கூறினார்.
ராம்ராஜ் காட்டன் நிறுவனர் திரு. கே.ஆர்.நாகராஜன், தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர்கள் திரு. பி.கே.ஆறுமுகம், திரு. வினாயகம், ‘ஷைனி’ திரு. ஈஸ்வரன் மற்றும் வெற்றி நலவாழ்வு மைய இணைச் செயலாளர் திரு. துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேடையில் கூற மறந்த செய்தி: இந்த இதழ் சுமார் 150 முதியோர் இல்லங்களுக்கு இலவசமாக அனுப்பப்படுகிறது. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் அல்லவா?