சிறுதானியங்களின் பெருமை உணர்வோம்!

சிறுதானியங்களின் பெருமை உணர்வோம்!

மருத்துவர் கு.சிவராமன்

முதுமையில் எந்தெந்த தானியங்களை சாப்பிடலாம்? சர்க்கரை நோயா? ‘அரிசியைக் குறை’ என்கின்றார்கள். கோதுமையும் கிட்டத்தட்ட அரிசி போன்றதுதானாம். மைதா வேண்டவே வேண்டாம். சிறுதானியங்கள் பக்கம் போகலாம் என்றால், ‘பழக்கம் இல்லையே’ என்பவரா நீங்கள்? உங்களுக்காகவே இந்தக் கட்டுரை.

உடைகளில் பட்டு உயர்வானதாக நினைக்கப்படுவது போல, அரிசியும் கோதுமையும் தானிய சமூகத்தில் மேல்தட்டு மக்கள் எனலாம். அன்றாட உணவாக அரிசியும் கோதுமையும் ஆக்கப்பட்டதன் பின்னணியில் உணவு அரசியலும் இருந்தது. இதனால் சிறுதானியங்களின் பயன்பாடு சுருங்கிப் போய்விட்டது. ஓடியாடி உழைத்த ஏழை ஒருவன், முதலாளி முன் கூனிக் குறுகி உட்கார்வது போல் ஆகிவிட்டது அவற்றின் நிலை. இந்த மண்நலம் காத்து பயிர்ச்சுழற்சி (crop diversity) உயிர்ச்சுழற்சி (bio diversity) போற்றிய தினை, கேழ்வரகு, வரகு, கம்பு, சாமை, குதிரைவாலி, காடைகண்ணி முதலான சிறுதானியங்கள் ஏழை வீட்டுக்கு இடம்பெயர்ந்தன. ‘அட, அவருக்காவது ஆரோக்கியம் நிலைக்கட்டுமே’ என்றால், அதுவும் போய்விட்டது. ஒரு ரூபாய் அரிசிக்கு ஏழைக் குடியானவனும் சிறுதானியங்களை மறக்கத் துணிந்து விட்டது இன்னுமொரு துயரம்.

சிறுதானியங்களை விளைவிக்க அதிக தண்ணீர் தேவையில்லை. உரமோ, பூச்சிக்கொல்லியோ ஒருபோதும் தேவையில்லை. அதனால் எல்லா சிறுதானியங்களும் ரசாயனக் கலப்பில்லாத ஆர்கானிக் உணவுகளே! ரசாயனங்கள் நம்மைச் சூழ்ந்திருக்கும் இந்தக் காலத்திலும், நமக்குப் பசியாற்றும்போதே நோய் தீர்க்கும் மகத்தான பணியைச் செய்யும் இயற்கை உணவே சிறுதானியங்கள். தினையின் பீட்டா கரோட்டின் சத்து, கண் பார்வையை சீராக வைத்திருக்க உதவும். வரகரிசியின் ‘லோ கிளைசிமிக்’ தன்மை, சர்க்கரை நோயாளிக்கு நற்பயன் அளித்திடும். உடலை உறுதியாக்கி, சற்றே கூட்டிடவும் பயன்படுகிறது கேழ்வரகு. இரும்புச்சத்து அதிகம் கொண்ட ஒரே தானியம் கம்பு. அரிசியைவிட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்து இதில் உள்ளது. சிறுசோளம், சாமையரிசி ஆகியவை நார்ச்சத்தும் புரதச்சத்தும் நிறைய கொண்ட சிறுதானியங்கள். வெயில் நாட்களில் வெங்காயத்தைக் கடித்துக்கொண்டு கம்பங்கூழ் சாப்பிடுவது என்பது, அயர்ன் டானிக் கலந்த கூல் ட்ரிங்க்ஸ் சாப்பிடுவது போன்றது! குதிரைவாலியோ இரும்பும் புரதமும் நிறைந்த அற்புதமான ஊட்ட தானியம்.

ஆனால் பல முதியோர்கள் இன்று தேடுவது ஓட்ஸை! எங்கிருந்து வந்தது இது? நமது முந்தைய தலைமுறையில் அநேகமாக யாருக்கும் ஓட்ஸ் பற்றி தெரியாது. இப்போது ஓட்ஸை அறியாதவர்கள் இருக்க முடியாது. சில குதிரை முதலாளிகளைத் தவிர, ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் அமெரிக்காவிலும் யாருக்கும் ஓட்ஸ் பற்றி அதிகம் தெரியாது. ஆனால், உலக உணவுச் சந்தையில் ஓட்ஸுக்கு இன்று கொஞ்சம் உசத்தியான இடம்தான். காரணம், ஐரோப்பிய உணவு வணிக ஜாம்பவான்கள்.

ரஷ்யா, கனடா, ஜெர்மனி, பின்லாந்து, ஆஸ்திரேலியா முதலான நாடுகளில் குளிரைத் தாங்கி நின்று வளரும் பயிர்தான் ஓட்ஸ். ஒரு சில ஆண்டுகளாக இங்கே ஒன்பது மணி அழுவாச்சி சீரியலில் தொடர்ந்து விளம்பரப்படுத்தியதில், நம் ஊர் மளிகை லிஸ்ட்டில் முக்கிய இடம் பிடித்துவிட்டது. ‘‘சாப்பாட்டு விஷயத்தில் நான் ரொம்ப கறார். சுகர் வரக் கூடாதுன்னு காலையில் ஓட்ஸ் கஞ்சி, சாயந்திரம் ஓட்ஸ் பிஸ்கட்தான் சாப்பிடுகிறேன்’’ என்று சொல்வது நாகரிக அடையாளமாக ஆகிவிட்டது. குறிப்பாக ‘குண்டு அம்மணிகள்’, ‘‘ஓட்ஸ் சாப்பிட்டு ஒல்லியாவேன்’’ என பகல் கனவுடன் இருக்கிறார்கள்.

ஓட்ஸில் கூடுதல் புரதமும், பீட்டா குளுக்கானும் இருப்பது உண்மைதான். ஆனால் ஓட்ஸ் விளைந்து, கதிரறுத்து, உமி நீக்கி, நேராக நம்ம கடைக்கு வருவது கிடையாது. அதன் தோடு நீக்கி, நீராவியில் வேக வைத்து, அப்புறமாக உலர்த்தி, இயந்திரத்தில் விட்டு நசுக்கி அவலாக்கி, ஈரத்தை எல்லாம் உறிஞ்சி, அப்புறமாய் உங்கள் வீடு வந்து சேரும் வரை கெட்டுப் போகாமலும் கட்டியாகாமலும் இருக்க பல ரசாயனங்கள் கலந்து அனுப்புகிறார்கள். நாம் புழுங்கல் அரிசிக்காக நெல்லை வேக வைத்தாலும், தோல் நீக்காமல்தான் வேக வைக்கிறோம். ஆனால், இவ்வளவு கட்டங்களைக் கடந்துவரும் ஓட்ஸில் கூடுதல் புரதமும், பீட்டா குளுக்கானும் அப்படியே இருக்குமா, மாறுமா? யாருக்கும் தெரியாது. தெரிந்தாலும் பெரிதாகப் பேச மாட்டார்கள். ஏனென்றால் ஓட்ஸின் இன்றைய இந்திய வணிகம் 50 லட்சம் டாலர்களைத் தாண்டிக் கொண்டிருக்கிறது.

ஓட்ஸை சமைத்து தட்டில் பரிமாறுகையில், ‘ஒரு வேளைக்கு 1.4 கிராம் அளவு இந்த பீட்டா குளுக்கான் கிடைக்கும்’ என இந்தியாவில் மிகப்பெரிய அளவில் இதை வணிகம் செய்யும் நிறுவனம் கணக்கிட்டுச் சொல்கிறது. ஆனால், கால் டீஸ்பூன் வெந்தயத்தில் இதற்கு இணையான பீட்டா மானான் பெற முடியும். இதில் பீட்டா குளுக்கானைவிட கூடுதலாக, சர்க்கரைக்கு, ரத்தக் கொதிப்புக்கு, பெண்களின் மாதவிடாய் பிரச்னைக்கு, பாலூட்டும் நேர பிரச்னைகளுக்கு பயன் உண்டு. பாதுகாப்பும் உண்டு.

ஓட்ஸை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, நம் ஊர் சிறுதானியங்களை உற்றுப் பார்ப்போமா? கம்பு, நெல்லரிசி போலவே சாதமாக, கஞ்சியாக, அவலாக, பொரியாக, பிரியாணியாக, கூழாக சாப்பிட ஏற்றது. அரிசியைவிட புரதச் சத்து, இரும்புச் சத்து, கால்சியச் சத்து, கனிமச் சத்து என அனைத்தும் அதிகம் கொண்ட தானியம்.

சோளம் என்றால் பலருக்கு நினைவில் வருவது மக்காச்சோளம் மட்டுமே. உண்மையான சிறு வெள்ளைச்சோளத்தை மறந்து வெகு நாளாயிற்று. அதுதான் வெகுகாலமாக நாம் சாப்பிட்டுவந்தது. புதிய மக்காச்சோள உற்பத்தியில் இன்று நாம் உலகில் ஐந்தாவது இடத்தில் இருந்தாலும், அது அந்நியப் பயிர்தான். மக்காச்சோளம் இளசாய் இருக்கும்போது மட்டும் கார்போஹைட்ரேட் குறைவான, புரதமும் நாரும் அதிகம் உள்ள தானியம். நம் ஊர் பாரம்பரிய சிறுசோளத்தையும், மக்காச்சோளத்தையும் ஒப்பிட்டால், உயிர்ச்சத்துகள், நார், கனிமங்கள் நிறைந்த சிறுசோளமே சிறப்பானதாகத் தெரிகிறது.

ராகி. ஒருவேளை சர்க்கரை நோய் சகட்டு மேனிக்கு இந்தியாவைப் பந்தாட வந்திராவிட்டால் இந்த சிறுதானியத்துக்கு இவ்வளவு தேடல் இருந்திருக்காது. அரிசிக்கு பதில் எதைச் சாப்பிடலாம்? என்ற தேடலில், இன்று ராகியே ஆபத்பாந்தவன். கேழ்வரகு, கேவுரு, ராகி, கேப்பை இப்படி பல செல்லப்பெயர்களுடன் உள்ள சிறுதானியம். இது மெல்ல மக்கள் ஆதரவைப் பெற்றுவருவது ஆறுதலான விஷயம்.

ராகியும் கார்போஹைட்ரேட் நிறைந்த தானியம். இட்லி, தோசை, இடியாப்பம் என நெல்லரிசியில் செய்யும் அத்தனையும் இதிலும் செய்ய முடியும். உரமும் பூச்சிக்கொல்லியும் இல்லாமல் வளரும் என்பதால், உருக்குலைக்காத உணவுச்செறிவைப் பெற்றிருக்கிறது. ஏறத்தாழ 60 வகை நாட்டு ராகி வகைகள் இங்கு உள்ளனவாம். வெண்ணிற ராகி, கறுப்பு ராகி, நாகமலை ராகி, மூன்று மாத ராகி, தேன்கனிக்கோட்டை ராகி என பல ரகங்கள் உண்டு. ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் ராகித்திருவிழா எனும் விழாவே ராகி அறுவடையின்போது கொண்டாடுகிறார்கள்.

மற்ற தானியங்களை விட ராகியில் கால்சியமும் இரும்புச் சத்தும் அதிகம். வளரும் குழந்தைக்கும், மாதவிடாய் துவங்கிய பெண்ணுக்கும், பாலூட்டும் அன்னைக்கும், இறுதி மாதவிடாயை எதிர்கொள்ளும் நடுத்தர வயதிலுள்ள மகளிருக்கும் ராகி மிக அவசியமான உணவு. பாலைவிட மூன்று மடங்கு கால்சியமும், அரிசியைவிட 10 மடங்கு கால்சியமும் ராகியில் உண்டு. கேழ்வரகை அடையாக கீரை வெங்காயம் சேர்த்து சாப்பிடுவதே நல்லது. கஞ்சியாகவோ, கூழாகவோ குடிப்பது சர்க்கரை நோயாளிக்கு நல்லதல்ல. (சிறுகுழந்தைகளுக்கு மட்டும் அப்படிக் கொடுக்கலாம்!) முதியோருக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் அடை அல்லது காய்கறிகளோடு சேர்த்து உப்புமாதான் சிறப்பு. சர்க்கரை நோயில்லாதவர்கள் களியாக சாப்பிடலாம்.

குழந்தைக்கு தாய்ப்பாலுடன் ஏழாம் மாதத்தில் திட உணவு துவங்குவது வழக்கம். ராகியை ஊற வைத்துப் பாலெடுத்து, அதில் சர்க்கரை சேர்த்து கஞ்சி காய்ச்சி, அதில் துளி நெய்யோ அல்லது தேங்காய் எண்ணெயோ சேர்த்துக் கொடுப்பது சிறப்பான உணவு. ஒரு வயதைத் தொடும்போது ராகியை ஊற வைத்து முளைகட்டி, பின் உலர்த்தி பொடி செய்து அதில் கஞ்சி காய்ச்சிக் கொடுக்கலாம். குழந்தை போஷாக்காக வளரும். மிகக் குறைந்த விலையில் சத்தான, சுவையான ஊட்டச்சத்து ராகியைத் தவிர வேறெதுவும் தராது.

ராகியில் மித்தியானைன் எனும் ஒரு முக்கிய அமினோ அமிலம் இருப்பது இதன் கூடுதல் சிறப்புக்குக் காரணம். இது குறித்த ஆய்வுகள் இப்போது கொடிகட்டிப் பறக்கின்றன. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம் மற்றும் முடியின் அழகைப் பேணவும் இந்த புரதச்சத்து மிக அவசியமாம். இந்த மித்தியானைன் அதிகமுள்ள ஒரே தானியம் ராகி. ஈரலில் படியும் கொழுப்பை விரட்டை இந்த மித்தியானைன் கொண்ட ராகி பெரிதும் உதவும்.

வரகரிசி, அரிசி ரகங்களில் புரதம் மிகுந்த அரிசி. சுவையிலும் மருத்துவத் தன்மையிலும் இதில் வடிக்கும் சோறு இணையற்றது. அதே போல், சாமையரிசி இரும்புச்சத்து அதிகம் நிறைந்த பாரம்பரிய அரிசி.

இத்தனை சிறுதானியங்கள் மருத்துவ குணங்களோடு நம் நிலத்தில் கொட்டிக் கிடக்க, நமக்கு ஏன் வெளிநாட்டு ஓட்ஸ்? அதுவும் பல ரசாயனங்களோடு? முதுமையில் நாம் விலகி இருக்க வேண்டியது புற்றுநோயிடமிருந்துதான். அந்த நோயைத் தூண்டும் ரசாயனங்கள் நமக்கு அவசியமா என்ன? சிந்திப்போம். உங்கள் சிந்தனையில் உங்களுக்கு மட்டுமல்ல, நம் ஊர் விவசாயிக்கும் நலம் கிட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *