சிலிண்டரை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்!

இப்போது ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள்தான் மானிய விலையில் தருகிறார்கள். அதிலும் மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் வந்துவிட்டதால், எத்தனை பேருக்குக் கிடைக்கும் என்பது தெரியாது. அதற்குமேல் வாங்கும் சிலிண்டருக்கு முழுவிலை கொடுத்தாக வேண்டும். சிக்கனமாகப் பயன்படுத்தினால் கையை சுட்டுக் கொள்ளாமல் சமைக்கலாம்.

சிலிண்டரையும் கேஸ் அடுப்பையும் எப்படிப் பராமரிப்பது? சிக்கனமாக எப்படிப் பயன்படுத்துவது? 

 • சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைக்க வேண்டும்
 • ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ள அடுப்புச் சாதனங்களையும், ரப்பர் குழாய்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். கம்பி வலை கோர்த்த ரப்பர் குழாய்களைப் பயன்படுத்துவது இப்போது கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. அதுவே பாதுகாப்பானது.
 • எப்போதுமே ஸ்டவ்வை அணைக்கும்போது முதலில் ரெகுலேட்டர் வால்வை மூடிவீட்டு, பிறகு ஸ்டவ்வின் வால்வை மூடுவது நல்லது.
 • கேஸ் ஸ்டவ் எப்போதும் தரை மட்டத்திலிருந்து இரண்டடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்க வேண்டும். எப்போதும் சிலிண்டரைவிட ஒரு அடி உயரமாகத்தான் கேஸ் ஸ்டவ் இருக்க வேண்டும். நின்றபடி சமைத்தால் கால் வலிக்கிறது என்று ஸ்டவ்வை தரையில் வைத்து சமைப்பது தவறு. எதிர்பாராவிதமாக கேஸ் கசிவு ஏற்பட்டால், சட்டென்று தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது.
 • பர்னர் சரியாகப் பொருந்தியிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டே ஸ்டவ்வைப் பற்ற வைக்க வேண்டும். இல்லையெனில் அந்த இடைவெளி வழியாக கேஸ் கசியும், ஜாக்கிரதை!
 • ஸ்டவ் எரியும்போது கவனக் குறைவாக இருக்கக்கூடாது. கவனிக்காமல் இருந்தால் பொங்கி வழியும் பால் போன்ற திரவங்கள் அடுப்பை அணைத்து, அதனால் வாயுக் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நிகழும் ஆபத்து உள்ளது.
 • குழந்தைகள் கேஸ் ஸ்டவ் குழாயைத் திருப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கேஸ் ஸ்டவ்வில் குழந்தைகள் விஷமம் செய்வதால் பல ஆபத்துகள் ஏற்படுகின்றன. ஸ்டவ்வின் வால்வோடு ரெகுலேட்டர் வால்வையும் சேர்த்து அணைக்க வேண்டும். குழந்தைகள் தனியாக கிச்சனுக்குள் போக விடக்கூடாது.
 • அடுப்பின் வால்வையும், சிலிண்டர் வால்வையும் மூடிய பிறகே சிலிண்டரை மாற்ற வேண்டும்.
 • கேஸ் விஷயத்தைப் பொறுத்தவரை சுய ரிப்பேர் வேலை ஆபத்தானது. வெளியாட்கள் யாரையும் கேஸ் உபகரணங்களைப் பழுது பார்க்க அனுமதிக்கக் கூடாது. கேஸ் ஏஜென்சியிலிருந்து வரும் மெக்கானிக்குகளிடம் மட்டுமே இந்தப் பொறுப்பை விட வேண்டும்.
 • சிலிண்டரை மாற்றும்போது வீட்டில் பூஜை விளக்குகள், ஊதுவத்தி எதுவும் எரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மின்சார இணைப்புகள் இயங்க கூடாது.
 • ரப்பர் குழாயில் வெடிப்பு, துளை இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். சிலிண்டரிலோ, ரப்பர் குழாயிலோ கசிவு இருப்பதாக சந்தேகம் தோன்றினால் உடனடியாகக் கதவுகள், ஜன்னல்கள் அனைத்தையும் திறந்துவிட வேண்டும். எரிந்து கொண்டிருக்கும் அடுப்பு, விளக்கு முதலியவற்றை அணைக்க வேண்டும்.
 • கேஸ் ஸ்டவ்வை துடைக்கிறேன் என நீங்களாக ரப்பர் டியூபை தனியாகக் கழற்றி மாட்டாதீர்கள். கேஸ் ஏஜென்சி ஆட்களால் மட்டுமே முறையாக ரப்பர் டியூபைப் பொருத்த முடியும். மூன்று பாயின்ட்டுகள் வரை உள்ளே முழுதுமாக மாட்டினால்தான் பாதுகாப்பு. முடியவில்லை என அரைகுறையாக மாட்டி பயன்படுத்துவது ஆபத்து.
 • தேவையான அனைத்து பொருட்களையும் ரெடியாக எடுத்து, நறுக்கி, கழுவி, தயார்நிலையில் மேடையில் வைத்துக்கொண்டு, அதன்பிறகு சமையலை ஆரம்பிக்கலாம்.
 • பால், பழைய குழம்பு என எதையும் ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து அப்படியே ஸ்டவ்வில் வைக்க வேண்டாம்; தண்ணீரில் கொஞ்ச நேரம் பாத்திரத்தோடு வைத்து, அதன் குளிர்ச்சி குறைந்ததும் அடுப்பில் வைக்கலாம்.
 • எல்லா அயிட்டங்களையும் முழு தீயில் சமைக்க வேண்டும் என்பதில்லை; குழம்பு, சாம்பார் எல்லாம் கொதிக்க ஆரம்பித்ததும் ஸ்டவ்வை மிதமான தீயில் எரிய விட்டாலே போதும். எல்லா அயிட்டங்களுக்குமே இது பொருந்தும்.
 • பாத்திரத்தை மூடி வைத்து சமைத்தால், சீக்கிரமே சமையல் முடிந்துவிடும். எண்ணெயில் செய்யும் சமையல் தவிர இதர நேரங்களில், வாணலியைக் கூட தட்டு போட்டு மூடி சமைக்கலாம்.
 • அதிக ஆழம் மற்றும் அதிக அகலம் இல்லாத பாத்திரங்களைப் பயன்படுத்திப் பாருங்கள். எப்போதையும்விட கூடுதல் நாட்களுக்கு சிலிண்டர் வரும்.
 • அரிசி, பருப்பு, முட்டை என வேக விட வேண்டிய அயிட்டங்களை ஒரே நேரத்தில் பெரிய குக்கரில் ஒன்றாகப் போட்டு அடுப்பில் வைக்கலாம். முடிந்தவரை எல்லாவற்றையும் பிரஷர் குக்கரிலேயே சமைத்துவிட்டால், நேரம், கேஸ் இரண்டுமே மிச்சம்.
 • வீட்டில் இருக்கும் அனைவரும் ஒரே நேரத்தில் உட்கார்ந்து சாப்பிட்டால், அடிக்கடி உணவை சூடு செய்யும் வழக்கத்தைத் தவிர்க்கலாம்.
 • சாம்பார், குழம்பு, சட்னி போன்ற அயிட்டங்களை ஒரு வேளைக்கு மட்டும் செய்வதற்குப் பதிலாக, மதியம் செய்வதையே இரவுக்கும், காலையில் செய்வதே மதியத்துக்கும் என்பதுபோல மொத்தமாக சேர்த்து செய்தால் கேஸ் சிக்கனமாக செலவாகும்.
 • பெரிய பர்னரை பயன்படுத்துவதற்குப் பதிலாக, முடிந்தவரை சிறிய பர்னரைப் பயன்படுத்தினால் கேஸ் அதிகம் செலவாகாது.
 • கேஸ் ஸ்டவ்வை & குறிப்பாக பர்னரை & சுத்தமாக வைத்திருந்தாலே, பாதியளவு எரிபொருள் மிச்சமாகும்.
 • கேஸ் ஸ்டவ்வை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். தினமும் இரவு துடைப்பது நல்லது.
 • பர்னரை 10 நிமிடம் மண்ணெண்ணெயில் ஊற வைத்து, பிறகு பழைய டூத்பிரஷ் மூலம் சுத்தம் செய்யலாம். சலவை சோடா சேர்த்த வெது வெதுப்பான தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்து சுத்தப்படுத்தி உலரச் செய்த பிறகு பொருத்தலாம்.
 • குரோமிய கோட்டிங் கேஸ் ஸ்டவ்வை சூடாக இருக்கும்போது துடைத்தால் பளிச்சென்று இருக்கும். பெயின்ட் அடுப்பாக இருந்தால் சூடாக இருக்கும்போது நனைந்த துணியால் துடைக்கக் கூடாது. திடீர் வெப்ப மாறுதலால் வண்ணம் போய்விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *