சொத்து தந்த தந்தை… சிறுநீரகம் தந்த தாய்!
பெற்றோரை பட்டினி போட்டு தவிக்க விடும் பிள்ளைகள்… சொத்துகளை எழுதி வாங்கிக் கொண்டு வீதியில் விரட்டிவிடும் மகன்கள்… இப்படி தொடரும் கொடுமைகள் தொடர்பாக பெற்றோர்கள் புகார் செய்தால், பிள்ளைகளைக் கைது செய்து சிறையில் அடைக்கவும், சொத்துகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கவும் சட்டம் கொண்டு வரப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சட்டம் வந்தபோது, ‘பெற்றோர் மீதான பாசத்தை சட்டம் போட்டு நிலைநிறுத்த வேண்டியிருக்கிறதே’ என எல்லோரும் வேதனைப்பட்டார்கள். ஆனால், இந்த சட்டத்தின் தேவையை உணர்த்தும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன. அப்படி கிருஷ்ணகிரியில் நடந்த சம்பவம் இது…
கிருஷ்ணகிரியில் வசித்து வருபவர் கிட்டு (எ) பெரியசாமி. 67 வயதாகும் இவர், வணிகவரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சகுந்தலா. இவர்களது மகன் அருண்குமாருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். அருண்குமாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு செயலிழந்த நிலையில், அவரது அம்மா சகுந்தலா தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கி காப்பாற்றினார். வீடு, கடைகள் என சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான சொத்துகளை அருண்குமாருக்குத் தந்தார் அப்பா கிட்டு.
அதன்பின் காலப்போக்கில் பெற்றோரை பராமரிக்காமல் கைவிட்டு வீட்டை விட்டு வெளியேற்றினார் அருண்குமார். கிட்டுவுக்கு மாத ஓய்வூதியமாகக் கிடைக்கும் ரூ.6 ஆயிரத்தை வைத்துக் கொண்டு வாழ முடியாமல் தடுமாறினர் அந்த முதிய தம்பதியினர்.
சில மாதங்களுக்கு முன்பு வருவாய் கோட்டாட்சியரிடம் ‘முதியோர் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு திட்டத்தின்’ கீழ் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கிட்டுவும் சகுந்தலாவும் மனு அளித்தனர். விசாரணை நடத்திய வருவாய் கோட்டாட்சியர், ‘கடைகளில் கிடைக்கும் வாடகையிலிருந்து பெற்றோருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்’ என அருண்குமாருக்கு உத்தரவிட்டார். ஆனால், மகன் அருண்குமார் அப்படிப் பணம் வழங்கவில்லை.
இதைத் தொடர்ந்து கிட்டுவும் அவர் மனைவி சகுந்தலாவும் மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி மீண்டும் விசாரணை நடத்தினார். பெற்றோரிடமிருந்து அருண்குமார் தானமாகப் பெற்ற ரூ.3 கோடி மதிப்பிலான சொத்துகளைத் திரும்பவும் பெற்றோருக்கே வழங்க உத்தரவிட்டார். அதற்கான ஆவணங்களை கிட்டு மற்றும் சகுந்தலாவிடம் வழங்கிய வருவாய் கோட்டாட்சியர், ‘அருண்குமார் மீண்டும் பெற்றோரிடமிருந்து சொத்துகளைப் பெற முயற்சிக்கக் கூடாது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரிக்கை விடுத்தார்.
சில நேரங்களில் கசப்பு மருந்துகளே நிவாரணம் தருவதாக இருக்கின்றன.