டாக்டரைக் கேளுங்கள்! 2
எனக்கு உடல் பருமன் பிரச்னை உள்ளது. ஆனால், உயர் ரத்த அழுத்தமோ, சர்க்கரை நோயோ கிடையாது. கடந்த ஒரு மாதமாக காலையில் வலது குதிகாலில் வலிக்கிறது. இது எதனால் வருகிறது? என்ன சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்? என் வலியை தீர்க்க வழி சொல்லுங்கள் டாக்டர்.- – திருமதி. சாந்தி, 50 வயது, சென்னை-14.
காலையில் ஏற்படும் குதிகால் வலிக்கு கால்கேனியல் ஸ்பர் (Calcaneal spur) என்னும் தொல்லைதான் முக்கிய காரணம் ஆகும். குதிகால் எலும்பில் கால்சியம் அதிகமாகப் படிந்து விடுவதால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. காலையில் எழும்போது ஊசி குத்துவது போல திடீரென வலி ஏற்படும். நேரம் ஆக ஆக, ஒரு மாதிரியான அசௌகரியமாக மாறும். நீண்ட நேரம் அமர்ந்திருந்து எழும்போதும் இந்த வலி ஆரம்பமாகும். குதிகால் எக்ஸ்ரே எடுத்து இந்நோயை உறுதி செய்யலாம்.
உடல் எடையை சற்று குறைத்தாலே குதிகால் வலியும் குறையும். மிருதுவான காலணிகளை அணிந்து கொள்ளுங்கள். பிசியோதெரபி நிபுணரிடம் சென்று இதற்கான உடற்பயிற்சியை செய்து பாருங்கள். வலி சற்று அதிகமாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளலாம். அல்லது எலும்பியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.
எனக்கு அடிக்கடி வாயில் வறட்சி உண்டாகிறது. அதனால் உணவை விழுங்குவது சிரமமாக உள்ளது. நீண்ட நாட்களாக சர்க்கரை நோய் உள்ளது. இன்னும் கட்டுப்பாட்டுக்கு வரவில்லை. நிறைய பற்கள் விழுந்துவிட்டன. செயற்கை பற்கள் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. வாய் வறட்சியை சரிசெய்ய என்ன வழி டாக்டர்? – திரு. அப்துல் காதர், 70 வயது, ராமநாதபுரம்.
நம் வாயை ஈரப்பதமாக வைத்திருக்க உமிழ்நீர் உதவுகிறது. சிலருக்கு வாயில் வறட்சி ஏற்பட காரணங்கள்:
* வாயால் சுவாசித்தல்
* பற்கள் இல்லாமல் இருத்தல்
* நீர் வறட்சி
* மருந்துகள் (உதாரணம்: அலர்ஜி, மனச்சோர்வு மற்றும் மனநோய்க்கு கொடுக்கும் மருந்துகள், சிறுநீரக பிரச்னைகளுக்கு சாப்பிடும் மாத்திரை, புற்றுநோய்க்குக் கொடுக்கும் கதிர்வீச்சு சிகிச்சை)
* நீரிழிவு நோய்
* தைராய்டு தொல்லை
வாய் வறட்சிக்கு மாத்திரைகள் காரணமாக இருந்தால், தேவையற்ற மாத்திரைகளை நிறுத்த வேண்டும். நிறைய திரவங்களை குடிக்க வேண்டும். உங்களுக்கு பற்கள் அதிகம் இல்லாமல் இருப்பதால், வாயால் சுவாசிப்பீர்கள். இதனால்தான் வாயில் வறட்சி ஏற்படுகிறது. அவசியம் செயற்கைப் பற்களை பொருத்திக் கொள்ளவேண்டும். இதனால் வாய் வறட்சி குறைவதோடு முகப் பொலிவும் ஏற்படும். செய்து பாருங்களேன்!
நான் எந்த நோயும் இல்லாமல் நன்றாகவே இருக்கிறேன். வயது ஆக ஆக நோய்கள் வராமல் இருக்க ஏதாவது ஒரு சத்து மாத்திரையை பரிந்துரை செய்யுங்கள் டாக்டர். – திரு. சுப்பிரமணியன், 70 வயது, பாளையங்கோட்டை.
இந்த வயதில் நீங்கள் எந்த நோயும் இல்லாமல் இருப்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி. கீழ்க்கண்ட தொல்லைகள் உள்ளவர்களுக்குதான் வயதான காலத்தில் சத்து மாத்திரைகள் தேவைப்படும்.
* சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்
* ஏதாவது நோயின் தாக்கத்துக்கு ஆளாகி, சில நாட்கள் சிகிச்சை பெற்று பழைய நிலைக்குத் திரும்பியவர்கள் (உதாரணம்: டைபாய்டு)
* நீரிழிவு நோய், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய்கள் மற்றும் உடல் சார்ந்த நோய் உள்ளவர்கள்
* மனம் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் (உதாரணம்: மனச்சோர்வு, மறதி நோய்)
* சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள்
* காசநோய் மற்றும் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள்
* பற்கள் இல்லாதவர்கள்
உங்களுக்கு மேற்கண்ட தொல்லைகள் ஏதுமில்லாததால், சத்து மாத்திரைகள் தேவையில்லை. ‘65 வயது தாண்டியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஏதாவது சத்து மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள். உண்மையில் அவர்களில் மிகச் சிலருக்கே சத்து மாத்திரைகள் தேவை’ என்ற உண்மை, அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு மருத்துவ ஆய்வில் தெரிய வந்தது. சரிவிகித சத்துள்ள உணவை சாப்பிட்டால், உங்களுக்குத் தேவையான எல்லா சத்துகளும் அதிலேயே கிடைத்துவிடும். தினமும் பால், பழம், தேன், பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், பாதாம் பருப்பு ஆகியவற்றை உட்கொண்டு முதுமையை நலமாகக் கடக்கலாம்.