டாக்டரைக் கேளுங்கள்!
மருத்துவம் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு முதியோர் நல மருத்துவர் டாக்டர் வ.செ.நடராசன் பதில் அளிக்கிறார்
கேள்வி: முதியோர்களுக்காக ஒரு மாத இதழ் ஆரம்பித்து இருக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி. என்னைப் போன்ற தனியாக இருக்கும் முதியவர்களுக்கு இது ஒரு துணையாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களை மனமார வாழ்த்துகிறேன். கடந்த சில மாதங்களாக எனக்கு உடல் முழுக்க வலியாக உள்ளது. குடும்ப டாக்டரிடம் கேட்டதற்கு, ‘வயதானால் இது எல்லாம் வருவது சகஜம்’ என்று சொல்லி, வலி நிவாரணி மாத்திரை கொடுத்து அனுப்பிவிட்டார். அதைத் தொடர்ந்து சாப்பிட எனக்கு விருப்பம் இல்லை. நான் என்ன செய்யலாம்? – திருமதி. சாந்தி, வயது 76, சென்னை – 20.
பதில்: உங்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் சிறுநீரக தொல்லைகள் ஏதுமில்லை என்றால் இது அநேகமாக வைட்டமின் டி குறைபாட்டினால் ஏற்பட்ட வலியாக இருக்கலாம். ரத்தத்தில் வைட்டமின் டி அளவை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அது குறைவாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி 2&3 மாதங்களுக்கு வைட்டமின் டி மாத்திரை சாப்பிட வேண்டியிருக்கும்.
வைட்டமின் டி குறைவதற்கு வெயிலில் உடல் படாமல் இருப்பதே காரணமாக இருக்கலாம். தினம் 30-60 நிமிடங்கள் உடலில் வெயில் படுமாறு பார்த்துக் கொள்ளவும். தினம் ஒரு கப் பால் அவசியம். மீன், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், காளான் முதலியவற்றை சாப்பிடவும்.
கேள்வி: கடந்த மூன்று மாதங்களாக கைகளில் நடுக்கம் ஏற்படுகிறது. குறிப்பாக மற்றவர்கள் முன்னிலையில் இருக்கும்போதோ அல்லது கையெழுத்து போடும்போதோ நடுக்கம் அதிகமாகிறது. இது எதனால் டாக்டர்? – திரு. சின்னசாமி, 61 வயது, காந்திபுரம், கோவை.
பதில்: கை, கால்களில் நடுக்கம் எந்த வயதிலும் வரலாம். ஆனால் 60 வயதைத் தாண்டியவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
இதற்குக் காரணங்கள்: தைராய்டு சுரப்பி அதிகமாகச் சுரத்தல் (Hyper thyroidism), சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழத்தல், நரம்பு சார்ந்த நோய்கள் – உதறுவாதம் (Parkinsonism), மனப்பதற்றம், ஆஸ்துமா மற்றும் மனநலப் பிரச்னைகளுக்குக் கொடுக்கப்படும் மருந்துகள்.
நடுக்கம் எதனால் வருகிறது என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். நோய்களால் நடுக்கம் ஏற்பட்டால், அதற்குத் தக்க சிகிச்சை அளிக்கவேண்டும். நடுக்கத்திற்கு மருந்து காரணமாக இருந்தால், அதைக் குறைக்கவோ அல்லது நிறுத்தவோ முயற்சிக்க வேண்டும். முதுமையில் நடுக்கம் வருவதற்குரிய எந்தக் காரணமும் தெரியவில்லை என்றால், அது வயதான காலத்தில் ஏற்படும் நடுக்கம் என்று கருதி அதற்கான சிகிச்சையைப் பெற வேண்டும்.
முக்கியமாக, உதறுவாதம் என்கிற பார்க்கின்ஸன்ஸ் நோயினால் இந்த நடுக்கம் ஏற்படுகிறதா என்பதை அறிய முதியோர் நல மருத்துவரையோ அல்லது நரம்பியல் மருத்துவரையோ அணுக வேண்டும்
கேள்வி: அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருப்பதால் டாக்டரிடம் சென்றேன். அவர் பரிசோதனை செய்துவிட்டு கிட்னி சார்ந்த அல்ட்ரா சவுண்டு சோதனையும், பி.எஸ்.ஏ ரத்தப் பரிசோதனையும் செய்து வருமாறு கூறினார். பி.எஸ்.ஏ ரத்தப் பரிசோதனை எதற்கு? விவரம் அறிய விரும்புகிறேன். – திரு. ராமச்சந்திரன், 80 வயது, திருநெல்வேலி.
பதில்: புரோஸ்டேட் சுரப்பியிலிருந்து பி.எஸ்.ஏ (Prostatic Specific Antigen) எனும் திரவம் சுரந்து ரத்தத்தில் கலக்கிறது. ஆரோக்கியமான ஆண்களின் பி.எஸ்.ஏ குறைவாக இருக்கும். பி.எஸ்.ஏ-வின் சரியான அளவு 0-6.5.ng/mL (இது வயதுக்கு ஏற்றவாறு சற்று மாறுபடக்கூடும்). புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்பட்டால் பி.எஸ்.ஏ-வின் அளவு மிக அதிகமாக இருக்கும்.
பி.எஸ்.ஏ அதிகமாவதற்கு வேறு காரணங்களும் உண்டு.
- புரோஸ்டேட் வீக்கம் அடைந்திருந்தால். (ஆசனவாயில் விரலை நுழைத்து பரிசோதனை செய்து இதை உறுதிப்படுத்துவார்கள்.)
- புரோஸ்டேட்டில் நோய்த் தொற்று (Prostitis) ஏற்பட்டால்.
- திடீரென்று சிறுநீர் அடைபட்டு விட்டால்.
- சிறுநீர்த் தாரையில் நீரை வெளியேற்றும் குழாயைப் பொருத்தினால் (Urinary Catheter), நுண்கருவியை செலுத்தும் பரிசோதனை செய்தாலோ இப்படி ஆகலாம். (Cystoscopy)
- புரோஸ்டேட் புற்றுநோய் மிகவும் மெதுவாக வளர்ந்து, இறுதிக் கட்டங்களில்தான் வெளிச்சத்துக்கு வருகிறது. எனவே சிறுநீர் மற்றும் புரோஸ்டேட் சார்ந்த தொல்லைகள் உள்ளவர்கள், தங்களுக்கு புற்றுநோய் அபாயம் இல்லை என்பதை பி.எஸ்.ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்துகொள்வது அவசியம்.