எங்களைப்பற்றி

இளமையைப் போல முதுமையும் ஒரு பருவமே! “இனிக்கும் இளமை” எனச் சொன்னவர்கள் “மகிழ்யூட்டும் முதுமை” எனச் சொல்வதற்கு மறந்து விட்டார்கள். குழந்தைப் பருவம், இளமைப் பருவம் என எல்லா பருவங்களிலுமே இனிமையான நிகழ்வுகளும் உண்டு. கசப்பான நினைவுகளும் உண்டு. கசப்புகளை யாரும் சுமந்து கொண்டிருப்பதில்லை. அதனால் பலருக்கும் ஞாபகம் இருப்பதில்லை. முதுமையின் நினைவுகள் அவ்வுளவு எளிதில் ஜீரணமாவதில்லை. அதனால் கசப்புகள் தான் அதிகம் தெரிகின்றன.

முதுமையும் ஒரு வசந்த காலம்தான்! எதையும் எதிர்கொள்ளும் மன உறுதி, சீரான உடல்நலம், ஆன்மீக ஈடுபாடு, தொண்டு, தியானம் இவற்றோடு சற்றே பொருளாதார வசதியும் இருந்தால் போதும்… பலருக்குப் புயலாய் கடக்கும் முதுமைக் காலம் ஒரு பூங்காற்றாக அமையும்.

எல்லா பருவத்தினருக்கும் வார மற்றும் மாத இதழ்கள் உண்டு. குழந்தைகளுக்கு, மகளிர்களுக்கு, ஆன்மீகத்திற்கு, ஜோதிடர்த்திற்கு, விவசாயத்திற்கு மற்றும் நாணயத்திற்கு என்று சொல்லிக் கொண்ட போகலாம். ஆனால் பெருகி வரும் முதியோர் சமுதாயத்தை இதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. அவர்களுக்கு தனியாக எந்த இதழும் கிடையாது. இந்த குறையைப் போக்கவே, டாக்டர் வி. எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளையின் மூலம் முதுமை எனும் பூங்காற்று என்னும் மாத இதழ் அக்டோபர் 2019 ஆம் ஆண்டிலிருந்து வெளி வந்து கொண்டு இருக்கிறது. இதில் முதியோர்களின் உடல் நலம், மனநலம்,  பெண்கள் நலம்,  நிதி மற்றும் கேள்வி – பதில் போன்ற பல செய்திகளைக் கொண்டு வெளிவரும் பல்சுவை மாத இதழாக அமைந்து வருகிறது. குறுகிய காலத்திலேயே முதியோர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.