தவிர்க்க வேண்டிய காலைநேரத் தவறுகள்!

உடலும் மனமும் உற்சாகமாக ஒரு தினத்தை எதிர்கொள்ள, ஒவ்வொரு நாளின் அதிகாலையிலும் சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

* படுக்கையிலிருந்து உங்கள் வலதுபுறமாகப் புரண்டு ஒருக்களித்து, அதன்பிறகு எழுவது நல்லது. ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்துவிட்டு சில நொடிகள் அமைதியில் கழிக்கவும். அமைதியாக, நிதானமாக செயல்களில் இறங்கவும். பிரஷ் செய்ததும், ஐஸ் வாட்டர், சுடுதண்ணீர் தவிர்த்து, சாதாரண தண்ணீர் குடிக்கவும்.

* காலையில் கண் விழித்ததும் பதற்றமாக படுக்கையிலிருந்து எழுந்து நடமாடக் கூடாது. தூங்கும்போது நம் தசைகளும் முதுகுத்தண்டும் சற்று இறுக்கமாகி இருக்கும். எழுந்ததும் லேசாக சோம்பல் முறித்து, கைகளையும் கால்களையும் நான்கைந்து முறை உதறிவிட்டு, மூச்சை ஆழமாக உள்ளிழுத்துவிட்டு, பிறகு எழுந்தால் அன்று முழுக்க சுறுசுறுப்பு நிச்சயம்.

* அதிகாலையில் முதல் உணவாக காபி அல்லது டீ சாப்பிடும்போது வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. பால் கலக்காத க்ரீன் டீ குடிக்கலாம்.

* காலையில் எழுந்ததும் சிலர் முதல் வேலையாக மொபைல் போனில் மெசேஜ் பார்க்கிறார்கள்; வந்திருக்கும் மெயில்களைப் படிக்கிறார்கள் பலர். இவற்றில் இருக்கும் தகவல்கள் நமக்குள் ஒரு பதற்றத்தை ஏற்படுத்திவிடலாம். அதனால், நாள் முழுக்கவே நம் மனநிலை கெடும். அதிகாலையிலேயே இந்த உலகத்தின் அத்தனை பிரச்னைகளையும் நீங்கள் தீர்த்துவிடப் போவதில்லை. அதனால், மற்ற விஷயங்களை நிதானமாக கவனியுங்கள். தூங்கி எழுந்ததும் 20 நிமிடங்களை உடற்பயிற்சிக்கும், 20 நிமிடங்களை யோகா மற்றும் தியானத்துக்கும், 20 நிமிடங்களை மனதை வளப்படுத்தும் நல்ல விஷயங்களைப் படிப்பதற்கும் செலவிடுங்கள்.

* இரவு உணவு சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் வயிறு காலியாக இருக்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து நமக்கு சோம்பல் ஏற்படுகிறது. எனவே கண்விழித்த அரை மணி நேரத்துக்குள் ஏதாவது சாப்பிட வேண்டும். சர்க்கரை கொட்டிய காபியோ, டீயோ, பிஸ்கெட்டோ சாப்பிடாமல், பாதாம் பருப்பு அல்லது பழங்கள் சாப்பிடலாம். இதனால் ரத்த சர்க்கரை அளவு நிதானமாகக் கூடி சுறுசுறுப்பைத் தருகிறது.

* காலை உணவைக் கண்டிப்பாகத் தவிர்க்காதீர்கள். காலையில் சாப்பிடத் தவிர்ப்பவர்கள், 11 மணிக்கு மேல் தப்பான நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டு உடலைக் கெடுத்துக்கொள்கிறார்கள்.

* ‘பெட் காபி’ என்பது பலரின் கெட்ட பழக்கமாக இருக்கிறது. பல் துலக்காமல் தண்ணீர்கூட குடிக்கக் கூடாது. பிரஷ் செய்ததும் முதலில் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும்.

* சிலர் காலையில் எழுந்ததுமே கோபத்தில் கொதித்து, தங்கள் சூழலையே சூடாக்கிவிடுகிறார்கள். வீட்டு வேலை செய்பவர்களைத் திட்டி, போனில் பேசுபவர்களிடம் கோபத்தோடு பதில் சொல்லி, சாலையில் போகிறவர்களிடம் சண்டை போட்டு, ஆபீஸ் போனதும் பலரிடம் முரண்டு பிடித்து, அந்த நாளை சபிக்கப்பட்ட தினமாக்கி விடுகிறார்கள். பறவைகளின் சத்தம், இனிமையான பாடல்கள் என அதிகாலையின் இயல்பான ஓசையைக் கேட்டு மனதை இதமாக்கிக்கொள்ளுங்கள். நாள்முழுக்க கோபம் உங்களிடமிருந்து விலகியிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *