பெரிதும் தேவைப்படும் பென்ஷன்

வாழ்க்கைத் தரம் உயர்வதால், இந்தியர்களின் ஆயுள் அதிகரிக்கிறது. இதன் நேரடி அர்த்தம்… ‘ரிட்டயரான பிறகு பென்ஷனை மட்டுமே நம்பி பல ஆண்டுகள் வாழ வேண்டியிருக்கும்’ என்பதுதான்! இந்தியா இப்போது இளைஞர் சக்தி நிறைந்த நாடாக இருக்கிறது. ஆனால் முதியவர்களின் எண்ணிக்கையும் இங்கு அதிகரிக்கிறது.

‘வரும் 2050ம் ஆண்டில் இந்திய மக்கள்தொகையில் 55 சதவிகிதம் பேர் 60 வயதைக் கடந்த முதியவர்களாக இருப்பார்கள்’ என்கிறது ஐ.நா அமைப்பு நடத்திய ஓர் ஆய்வு.

விழுதுகள் தாங்கிப் பிடிக்கிற முதிர்ந்த ஆலமரம் போல, பிள்ளைகளின் ஆதரவோடு வாழ்ந்து முடிக்கிற சுகம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அதனால் எதிர்கால வாழ்க்கை கௌரவமாக இருக்க, இளமையில் சேமிப்பது அவசியம்.

ஆனால், நம்மிடம் சேமிக்கும் பழக்கம் குறைவாக இருக்கிறது. உங்கள் ஓய்வுக்காலத்துக்காக நீங்கள் எவ்வளவு சேமிக்க வேண்டும்? எத்தனை ஆண்டுகள் சேமிக்க வேண்டும்?

30 வயதில் ஒருவர் தனது சிறிய குடும்பத்துக்கு உணவு, உடை, மருத்துவச் செலவு, வீட்டு வாடகை, பயணச் செலவுகள் என மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மாதம் சராசரியாக 25 ஆயிரம் ரூபாய் செலவழிக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவருக்கு 60 வயதில் இந்த அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே எவ்வளவு தேவைப்படும் தெரியுமா? தோராயமாக, அப்போதைய மதிப்பில் ஒன்றரை லட்சம் ரூபாய். அதற்காக நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?

இதோ சேமிப்பு தொடர்பான ஒரு கணக்கு… குழந்தைகளுக்கான கல்வி, கடன்களுக்கான மாதத் தவணைகள் போன்றவற்றை விட்டு விடுங்கள். மேலே சொன்ன அடிப்படைத் தேவைகளை மட்டுமே கணக்கிடுங்கள். உங்கள் மாத பட்ஜெட்டில் அதற்கு மட்டுமே எவ்வளவு ஆகிறது என்று பாருங்கள். அந்த செலவுகளையும், எதிர்காலத்துக்கான உங்கள் சேமிப்பையும் ஒப்பிடுங்கள். (சேமிப்பு என்பது அலுவலகத்தில் பிடித்தம் செய்யும் பி.எஃப் உள்ளிட்ட எல்லாமும் அடங்கியது!)

ஷ் உங்கள் அடிப்படைச் செலவுகளில் ஐம்பது சதவிகிதம் அளவே சேமிக்கிறீர்கள் என்றால், ஓய்வுக் காலத்தில் நீங்கள் சிரமத்தோடு குடும்பம் நடத்த வேண்டியிருக்கும்.

ஷ் 60 முதல் 70 சதவிகிதம் அளவுக்கு சேமிக்கிறீர்கள் என்றால், ஓரளவு சமாளிக்கலாம். ஆனாலும் மருத்துவச் செலவுகளுக்கு அல்லாட வேண்டியிருக்கும்.

ஷ் 80 முதல் 90 சதவிகித அளவுக்கு சேமிக்கிறீர்கள் என்றால், இப்போது போல சிரமம் ஏதுமின்றி இயல்பாக வாழ்ந்துவிடுவது சாத்தியம்.

ஷ் 100 முதல் 120 சதவிகிதம் சேமித்தீர்கள் என்றால், இப்போது வாழ்வதைவிட சொகுசாக முதுமையில் வாழலாம்.

பணத்தின் மதிப்பு ஆண்டுதோறும் குறைவதோடு, விலைவாசியும் தாறுமாறாக ஏறுகிறது. இதை சமாளிக்கும் அளவுக்கு நமது சேமிப்பும் வளர வேண்டும். 30 வயதில் உங்களது மாதாந்திர பட்ஜெட்டில் உங்கள் மருத்துவச் செலவு ஒரு சதவீதம்தான் இருக்கும். ஆனால் 60 வயதில் அதுதான் பெரிய செலவாக இருக்கும்.

‘‘இந்தியர்கள் 35 வயதில்தான் ஓய்வுக்காலம் பற்றிக் கவலைப்பட ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் சேமிக்கத் தொடங்குவதற்குள் 50 வயது ஆகிவிடுகிறது’’ என்ற உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறது ஒரு நிதி நிர்வாக நிறுவனம் எடுத்த ஆய்வு. 25 வயதுக்குள் ஒரு வேலையில் செட்டில் ஆகிறவர்கள் அப்போதே ஓய்வுக்காலத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் அப்போது சேமிக்கும் பணம், கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு வட்டி சம்பாதிக்கிறது என்றால், அதன் பலன் நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கும்.

அரசு ஊழியர்களுக்காக ‘நேஷனல் பென்ஷன் ஸ்கீம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2004ம் ஆண்டு அறிமுகம் செய்தது. அரசாங்க வேலை பார்க்காத சாதாரண இந்தியக் குடிமகன்களும் சேரும் வகையில் இதிலேயே இன்னொரு திட்டமும் உள்ளது. 18 வயதிலிருந்து 55 வயது வரையுள்ள யாரும் இந்தத் திட்டத்தில் சேரலாம். 

தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிறவர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் ‘பிராவிடண்ட் ஃபண்ட்’ நிதிகூட ஓய்வுக்காலத்துக்கு கணிசமாக உதவுகிறது. அடிப்படை சம்பளத்தில் 12 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும்; அதே அளவு தொகையை நிறுவனமும் செலுத்தும். சம்பளம் உயர உயர பி.எஃப்பில் சேமிக்கும் பணமும் உயரும். ஒரு நிறுவனத்தில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வேறொரு நிறுவனத்துக்கு மாறும்போது, பலரும் தங்கள் பி.எஃப் கணக்கை முடித்து பணத்தை வாங்கி செலவு செய்துவிடுகின்றனர். அது தவறான பழக்கம். 25 வயதில் மாதம் 2500 ரூபாய் என பி.எஃப் அக்கவுன்ட்டில் சேமிக்க ஆரம்பித்தால், சம்பளம் ஏறும்போதெல்லாம் அதுவும் ஏறும். ஓய்வுபெறும் நேரத்தில் அது கணிசமான தொகையாக இருக்கும். ஓய்வுக்காலம் மனநிம்மதியோடு கழியும்.

இதுதவிர ‘பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட்’ என்ற சிறந்த திட்டமும் உள்ளது. வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் இதற்கான கணக்கை நீங்கள் ஆரம்பிக்கலாம். குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் கட்ட வேண்டும். ஆண்டுக்கு 500 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டலாம். 15 ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் ஐந்து, ஐந்து ஆண்டுகளாக நீங்கள் முதிர்வுக் காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம். அது தொடர்ந்து வட்டியை ஈட்டிப் பெருகிக் கொண்டிருக்கும்.

உங்கள் ஓய்வுக்கால வாழ்க்கையைப் பற்றி உங்களைவிட அதிகம் அக்கறைப்படுபவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆகவே, அந்த அக்கறையை சேமிப்பில் காட்டுங்கள்!     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *