நலமாய் நரை திரை மூப்பு! – மருத்துவர் கு. சிவராமன்

“கீரைச்சோறு”என்றாலே காத தூரம் ஓடும் குழந்தைகள் அதிகம். முதுமையில் கீரை மீது மதிப்பு கொஞ்சம் கூடுதலாய் இருந்தாலும், கேள்விகளும் பயங்களும் கூடவே இருக்கும்.

“கீரை நம் உடம்புக்கு ஆகுமா? கொஞ்சம் குளிர்ச்சியோ? செரிக்காதோ?
மழைக் காலத்தில் சாப்பிடலாமா?”போன்ற குழப்பங்களுடன் கீரையை அணுகும் முதியோர் கூட்டம் இங்கு உண்டு.

“என்னை என்ன கிள்ளுக்கீரைன்னு நினைச்சியா?”என வழக்கு மொழியில்
எதற்கோ சொன்னதை தப்பாகப் புரிந்துகொண்டு, “கீரை ரொம்ப சாதாரணமானது” என்ற தவறான நினைப்பும் சிலருக்கு உண்டு.

உண்மையில், “பல வருடங்கள் வளர்ந்த மரங்கள் தரும் பயனை விட, 20 அல்லது 30 நாளில் வளரும் கீரை நம் உடலுக்குக் கூடுதல் பயன் தரும்”
என்பது பலருக்குத் தெரியாது. அப்படி கீரையில் என்ன இருக்கிறது? அம்மாவின் தாய்ப்பாலுக்குப் பின்னர், கூடுதல் உணவாக சோறூட்டத் துவங்கும் காலம் தொட்டு கீரைச்சோறு சாப்பிடலாம்.

எந்தக் குழந்தை திட உணவு துவங்கிய காலத்திலேயே கீரைச்சோறு சாப்பிடப் பழகுகிறதோ, அந்தக் குழந்தை வளர வளர எந்தக் காயையும் உணவில் வேண்டாமென ஒதுக்குவதில்லை” என்கிறார்கள் உணவு உளவியலாளர்கள்.

கீரை என்பது வெறும் உணவு அல்ல. அது, மருத்துவ உணவு. இவற்றில் செய்யும் உணவுகளை “Functional food” என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். கீரைகளில் இருந்து எடுக்கும் சத்துகளை என்று பெயரிட்டு விற்று, பல மில்லியன் டாலர்களை அள்ளுகிறார்கள்.
அப்படி இன்று அகில உலகிலும் கோலோச்சுவது, முருங்கைக் கீரை சத்து அடங்கிய கேப்ஸ்யூல்கள். “மொரீங்கா”என்பது வளர்ந்த நாடுகளின் முதியோர்கள் மத்தியில் மந்திரச் சொல். வெளிநாட்டு மொரீங்காவின் உள்ளிருப்பது என்னவோ நம் மேட்டுப்பாளையத்திலோ, சிவகிரியிலோ இருந்து செல்லும் முருங்கைக் கீரையின் சத்துதான்.

முதுமைக் காலத்தில் உணவில் அதிகம் தேவை நார்ச்சத்து. நோய் எதிர்ப்பாற்றல் தரும் புரதச்சத்து, குறைந்திடாத இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, மாங்கனீஸ் முதலான பல கனிமச் சத்துகள். சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு போன்றவற்றுக்கு பலர் தினமும் மருந்துகள் எடுத்துக்கொள்கிறார்கள். உணவிலிருந்து சில குறிப்பிட்ட உயிர்ச்சத்துகளை நம் உடல் சரியாக உட்கிரகிக்க முடியாதபடி மருந்துகள் தடையாக இருக்கின்றனவாம். அதைக் கீரைகள் ஈடுகட்டும். கனிமங்களுடன் சேர்த்து ஃபோலிக் அமிலம், பி 6 வகையறாக்களைத் தருவதோடு, கூடவே நினைவாற்றலும் உடல் வலிமையும் தருவது கீரைகளின் சிறப்பு.

“கேரட் கண்ணுக்கு நல்லது”என நாமெல்லாம் படித்திருக்கிறோம். ஆங்கிலேயன் வரும் வரை நமக்கு கேரட் தெரியாது. அதுவரை நமக்கு கண்பார்வை இல்லையா என்ன? தண்ணீரில் தெரியும் பிம்பத்தைப் பார்த்து, பின்னால் உள்ள உருவத்தை வில்லால் கொய்த வித்தை நமக்கு எப்படி வந்தது? அத்தனை நுணுக்கமாய் பிரமிப்பூட்டும் அழகுடன் அணிகலன் செய்வதிலும், தூரத்து விண்மீனின் போக்கைக் கணிக்கும் நுட்பமும், கேரட் வருவதற்கு முன் நம் கண்ணுக்கு எப்படி இருந்தது? நம் வீட்டுத்தோட்டத்து முருங்கைக் கீரை, கேரட்டைவிட பல மடங்கு கண்ணுக்கு நல்லது தரும் கரோட்டினாய்டுகளைக் கொண்டிருக்கிறது. “போன கண்ணும் திரும்புமாம் பொன்னாங்காணி கீரையாலே”என்று வழக்கு மொழி ஒன்று உண்டு. ஆம், பொன்னாங்காணி கீரை முதுமையில் குறைந்தபட்சம் கேட்ராக்டைத் தள்ளிப்போட உதவலாம். வெந்தயக் கீரையும் முள்ளங்கிக் கீரையும் கூட கண்ணுக்கு நல்லது. கண்பார்வையைத் துலங்கச் செய்யும் முருங்கைக் கீரை, ரத்தக் கொதிப்பு கூடாமல் தடுக்கவும் மருந்துகளோடு பக்கபலமாய் உதவும்.

வெந்தயக் கீரையோ சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அத்தோடு சரும ஆரோக்கியம் காக்கும் வைட்டமின் பி, நோய் எதிர்ப்பாற்றல் தரும் வைட்டமின் சி, ரத்தம் உறையாமல் தடுக்கும் வைட்டமின் கே இவையும் உண்டு. இந்த சத்தையெல்லாம் விலை உயர்ந்த டானிக்கில் வாங்கினால், அதில் சேர்க்கப்படும் ரசாயனங்களில் பெரும்பகுதி, மறுநாள் சிறுநீரில் மஞ்சளாய்க் கழியும். கீரையாக சாப்பிட்டால், உடல் அதன் கூறுகளை வீணாக்காமல் அப்படியே உட்கிரகிக்கும்.

எலும்புக்கு அதிகம் தேவை கால்சியம் சத்து. அது நிறைந்த கீரை அகத்திக் கீரை. வயிற்றுப் புழுக்களைக் கொல்லும் இந்தக் கீரை, இரும்பையும் சேர்த்துத் தரும். நம் பெண் குழந்தைகளில் 45 சதவிகிதத்துக்கு மேற்பட்டவர்கள் ரத்தசோகையுடன் உள்ளனர். இரும்புச்சத்து குறைவால் ரத்தசோகை வருகிறது. இதனால் மந்தத்தன்மை, நினைவாற்றல் குறைவு, நோய் எதிர்ப்பாற்றல் குறைவு என படிப்படியாக நோய்க் கூட்டம் நம்மைப் பிடித்துக் கொள்ளும். ரத்தசோகை வருவதைத் தடுக்க நல்ல வழி, கீரை சாப்பிடுவதுதான்.

கீரைகளில் இரும்புச்சத்துடன் நார்ச்சத்தும் சேர்ந்து இருக்கிறது. எனவே, இரும்புச்சத்து மாத்திரை போல இது மலச்சிக்கல் தராது. கீரையின் நார்ச்சத்து, நமக்கு மலச்சிக்கலைத் தவிர்க்க பெரிதும் உதவும். அதே நார்ச்சத்தில் உள்ள கரையும் நார்க் கூட்டம் (soluble fibre), நம் ரத்த சர்க்கரை மற்றும் ரத்தக் கொழுப்பு கூடாமலும் பார்த்துக்கொள்வது கூடுதல் சிறப்பு.

உடல்சூடு தணிய பசலைக் கீரை, வாய்ப்புண் வராமல் தடுக்கும் மணத்தக்காளிக் கீரை, மூட்டுவலிக்கு முடக்கறுத்தான் கீரை, வாயுத்தொல்லைக்கு லட்சக்கொட்டை கீரை, முடி உதிர்வைத் தடுக்கும் கரிசாலை, ஈரல் நோய்க்கு கீழாநெல்லி, ஆஸ்துமாவுக்கு தூதுவளை, பனிக்கால மூக்கடைப்பிற்கு முசுமுசுக்கை, மூல நோய்க்கு துத்திக் கீரை என கீரை உலகம் பல நோய்களிலிருந்து காக்கும்

ஆரம்ப கட்ட சிறுநீரக நோய் உள்ளவர்களும், ரத்தம் உறைதலுக்கான மருந்து எடுக்கும் நிலையில் இருப்பவர்களும் கீரைகளைத் தவிர்க்க வேண்டி வரலாம். அவர்கள் கீரைகளை எடுக்க, கண்டிப்பாய் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

“இரவில் கீரை வேண்டாம். கீரையுடன் தயிர், மீன் சேர்த்து சாப்பிடக் கூடாது” என்கிறது சித்த மருத்துவம்.

தினம் ஒரு கீரையை பொரியலாகவோ, கூட்டாகவோ, சூப்பாகவோ, ஸ்மூதியாகவோ சாப்பிடுவது நரை திரை மூப்பு பிணி அத்தனைக்கும் தடுப்பாகவும் மருந்தாகவும் நிச்சயம் இருக்கும். ரசாயனங்கள் கலக்காத நல்ல கீரையைப் பெற, வீட்டுத்தோட்டத்தில், மாடித்தோட்டத்தில் வளர்த்து, பறித்து, சமைத்துப் பரிமாறுங்கள். கீரை முதுமையின் நண்பன்!

(நலம் தேடுவோம்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *