நலமாய் நரை திரை மூப்பு! – மருத்துவர் கு. சிவராமன்

திருநெல்வேலி பக்கம் நம்பிக்குறிச்சி என்றொரு கிராமம். மன்னாபுரம் விலக்கில் இறங்கி நடந்து எங்கள் வயலுக்குச் செல்ல வேண்டும். 3&4 கி.மீ நடந்து வயலுக்கு வந்து, வரப்பில் ஏறி, வலது கையில் குடையைப் பிடித்துக்கொண்டு என் தாத்தா பின்னால் வர, அவருக்கு முன்னதாக நான் வரப்பில் நடந்த ஞாபகம் இன்றும் பசுமையாக உள்ளது. எனக்குப் பரிச்சயமான முதல் முதுமை அது. நான் பழகிய முதல் முதியவர், என் தாத்தா. பள்ளிக் காலம் முழுக்க காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு முடிந்ததும், முத்து பேக்கரியில் ஒரு தேங்காய் பன் வாங்கிக் கொண்டு, அடுத்து வரும் பஸ்ஸில் நெருக்கி அடித்துக் கொண்டு ஏறி, சென்று இளைப்பாறிய இடம் தாத்தா&பாட்டி வீடுதான். ‘‘வெகேஷனுக்கு இந்த வருஷம் எங்கே?’’ என்ற கேள்வியே இல்லாத உலகம் அது.

தாத்தா&பாட்டி வீட்டில் கற்றவையும் பெற்றவையும், சுகித்ததும் வலித்ததும்தான் என்னைப் போன்ற நடுத்தர வயதுக்காரர்களை இன்னமும் முழுமூச்சுடன் ஓடி அறத்தோடு பணி செய்ய வைக்கிறது. அகமகிழ்வாய் வாழவைத்தும் கொண்டிருக்கிறது. அந்த முதுமை எனக்குக் கற்றுக் கொடுத்தவற்றை, அரவணைத்துச்  சொன்னவற்றை, இன்று அகிலமெல்லாம் எடுத்துச் சொல்கிறேன். இப்பயணத்தில், முதுமை நலத்தில் உணவு குறித்தும், முதுமையில் நோயின்றி வாழ சித்த மருத்துவம் சொல்லும் சூத்திரங்கள் குறித்தும் இந்த இதழில் எழுத வாய்ப்பளித்த முதுமையியல் பேராசிரியர் மருத்துவர் நடராசன் ஐயா அவர்களுக்கு நன்றி. மகிழ்வான முதுமைக்கு இந்த மண் சொன்ன விஷயங்களை, ஒவ்வொரு இதழிலும் விரித்தும் ஆய்ந்தும் வியந்தும் வாசிப்போம்…

உணவு என்பது பசிக்குச் சாப்பிடுவதும், ருசிக்குக் களிப்பதும் மட்டும் அல்ல. அது ஒரு நலவாழ்வுச் சூத்திரம். பசியையும் ருசியையும் தாண்டி, நம் பண்டைய தமிழ் உணவுக்கு இன்னொரு முக்கியமான பணி உண்டு. அது, ‘மருந்தென வேண்டாவாம்’ என நம்மை நலவாழ்வுக்கு நகர்த்தும் பணி. பொழுதுக்கு ஓர் உணவு, திணைக்கு ஓர் உணவுக் கலாசாரம், பணிக்கு ஓர் உணவுக் கூட்டம், வயதுக்கு ஓர் உணவு வகை என உணவை மாமருந்தாக்கிய சமூகம் தமிழ்ச்சமூகம் மட்டுமே.

இன்றைய நலவாழ்வுக்கு சவாலாக இருப்பது, உணவும் சூழலும் மனமும் மாசுபட்டு முடக்கப்பட்டுவிட்டதுதான். அறம் தொலைத்த ஆதிக்க சக்திகள் இம்மூன்றிலும் ஆக்கிரமித்துவிட்டதுதான் நம் மிகப்பெரிய பிரச்னை. நவீன தொழில்நுட்பம் நம் விரல் நுனிக்குள் உலகை அடக்கிவிட்டது. ஆனால், ‘இந்த தொழில்நுட்ப வீச்சில் நாம் நெருங்கி இருக்கிறோமா, விலகி விட்டோமா?’ என்பதுதான் கேள்வி.

சிவப்பு தபால் பெட்டி தொங்கும் அஞ்சல் நிலைய சுவரில் சைக்கிளோடு சாய்ந்து, எச்சில் ஒட்டி அனுப்பிய இன்லாண்டு கடிதமும், காத்திருந்து பெறும் அதன் பதில் கடித மடிப்பை கவனமாய்ப் பிரிப்பதற்குள் எகிறும் இதயமும், கடிதத்தின் ஒவ்வொரு மடிப்பின் வெற்றிடத்தையும் வீணாக்காது எழுதி மனசு முட்ட பரிமாறிய உறவும் மட்டும்தான் பெரும்பாலும் அன்று ஊசலாடும் உயிருக்கான ஒரே மருந்துச்சீட்டு. இன்று முகநூல், வாட்ஸ்அப் வாழ்த்துகளில் என்னதான் எமோஜி புன்னகையுடன் பரிமாறினாலும், தொலைவும் காத்திருப்பும் தந்த உயிர்ப்பசை உலர்ந்துவிட்டது என்பதே உண்மை. இப்படியான எல்லாவற்றிலும் முதுமை நலம் தொலைந்து வருகிறது என்பதுதான் மிக மிகக் கசப்பான உண்மை. என்ன செய்யப் போகிறோம்?

உணவிலிருந்தே துவங்குவோம். ‘எதிர்கால உணவு எப்படி இருக்க வேண்டும்’ என உலகெங்கும் யோசனைகள் துவங்கியுள்ளன. ‘‘EAT Lancet Global Commission’ எனும் அமைப்பு, ‘2050ம் ஆண்டுக்குள் உணவில் பெருமாற்றம் கொண்டுவர வேண்டும்’ என ஓர் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. 16 நாடுகளைச் சார்ந்த 37 மருத்துவ, உணவியல் மற்றும் சூழலியல் அறிஞர்களின் மிக முக்கியக் கூட்டறிக்கை அது. நம் நாட்டில் செயற்கை குளிர்பானங்களுக்கும் ரசாயன பூச்சிக்கொல்லிகளுக்கும் எதிராக முதலில் அறிவியல் குரல் கொடுத்த, ‘Centre for Science and Environment’ அமைப்பின் தலைவர் டாக்டர் சுனிதா நாராயண் அக்குழுவில் இருக்கிறார்.

அந்த அறிக்கையின் சாரம்சம் இதுதான். ‘உங்களையும் காப்பாற்ற வேண்டும்; இந்த உலகையும் காப்பாற்ற வேண்டும். இரண்டுக்குமான கொள்கையை ஒவ்வொரு நாடும் முன்னெடுக்க வேண்டும். இல்லாவிட்டால், ஐ.நா அமைப்பின் பாரிஸ் ஒப்பந்தப்படி நிலையான வளர்ச்சியைப் பெற முடியாது’ என்கின்றது அந்த அறிக்கை. ‘அதிகம் தாவர உணவுகள் பரிமாறப்படவேண்டும். நேரடியாக உடலில் சர்க்கரையை அதிகரிக்கும் தானியங்கள், சிவப்பு புலால் எனும் இறைச்சி ஆகியவை குறைக்கப்பட வேண்டும். உலகின் எல்லா பகுதிகளுக்கும் பொதுப்படையான உணவு என்கின்ற வணிகச் சிந்தனை முற்றிலும் தவறானது. ஒருவர் வாழும் நிலம், செய்யும் உழைப்பு, மரபு, தட்பவெப்பம் ஆகிய எல்லாவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்கிறது அந்த அறிக்கை.

இப்படி பல விஷயங்களை இது மிக முக்கியமாகப் பரிந்துரைக்கிறது. எனினும், இதுபற்றி சர்ச்சைகளும் எழுந்துள்ளது. ‘இது சைவ உணவுப் பழக்கத்தையும், பாலைக்கூட தவிர்க்கச் சொல்லும் ‘வேகனிசம்’ எனும் டயட்டையும் ஆதரிக்கிறது. மீனைத் தவிர பிற இறைச்சிப் புரதங்களின் பயனை இவர்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள் சிலர். சர்ச்சைகள் இருந்தாலும், இந்த EAT lancet அறிக்கை பல நாடுகளின் உணவுக்கொள்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை.

அந்தத் தாக்கம் வரும்போது வரட்டும். அதற்கு முன்பாக நாம் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம். உணவு பரிமாறும் தட்டு, கரண்டி பயன்பாட்டிலிருந்து அதை ஆரம்பிக்கலாம். வீடுகளில் சாதம் பரிமாறும் அன்னக்கரண்டி, படு அகலமான சின்ன சைஸ்  முறம் போல இருக்கும். அந்தக் கரண்டியால் சோறு பரிமாறும் ஸ்டைலைப் பார்த்தாலே சில நேரங்களில் திகிலாக இருக்கும். பொக்லைன் எந்திரத்தைக் கொண்டு மண் அள்ளுவது போல சாதத்தைக் குவியலாக அள்ளிப் பரிமாறி மகிழ்வார்கள் அன்பானவர்கள்.

இனி அப்படிப் பரிமாறாதீர்கள். அன்னக்கரண்டி டேபிள் ஸ்பூனாக மாறட்டும். ஸ்பூனில் துளித்துளியாக சோறை பரிமாறிக் களைத்தோ, அதனால் கையில் ஏற்படும் வலியிலோகூட சோறு அளவு குறையும். முட்டைக்கோஸ், பீன்ஸ் பொரியலுக்கு சாம்பார் ஊற்றிப் பிசைந்து, தூய மல்லி சம்பா சோறைத் தொட்டு சாப்பிடலாம். முளை கட்டிய பாசிப்பயறு சுண்டலுக்கு, அயிரை மீன் குழம்பினை அளவாய் ஊற்றி சாப்பிடலாம். ஆம், இனி இப்படிப் பரிமாறிப் பாருங்கள்.

25 வயதுக்கு மேல் இப்படித்தான் பரிமாற வேண்டும். சோறை காய்கறி வைக்கும் சின்ன கிண்ணத்திலும், கீரையையும் காயையும் அளவுச்சாப்பாடு எடுத்துவரும் குழித்தட்டிலும்தான் பரிமாற வேண்டும். சாதத்தை சீண்டாமல், காய்கறியை மட்டும் சாப்பிட்டு எழுந்தால் நீங்கள் ரொம்ப சமர்த்து. ‘அப்ப சர்க்கரைச் சத்துக்கு?’ என அவசரமாய் கேட்க வேண்டாம். அத்தனை காய்கறியிலும் கணிசமாய் சர்க்கரை உள்ளது. நாரோடு நாராக இருக்கும் அந்த சர்க்கரைச் சத்து, மெல்ல மெல்ல உடலினுள் உட்கிரகிக்கப்படும். இதனை ‘லோ கிளைசிமிக் உணவு’ என்கிறது நவீன உணவு அறிவியல்.

முதுமையில் இருப்போரும், முதுமைக்குச் செல்ல காத்திருப்போர் பட்டியலில் உள்ளோரும், இனி உணவினை லோ கிளைசிமிக் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுப்பதுதான் மிக மிகச் சிறப்பு. சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, புற்றுநோய் என ஏதேனும் பரம்பரைச் சொத்தாக வந்துவிடுமோ எனும் பயம் இருப்பவர்களுக்கு இப்படியான உணவுத் திட்டம் மட்டுமே சரியான தேர்வாக இருக்கும். நோயில்லா முதுமைக்கான உணவுப் பரிமாறல் இனி இப்படித்தான் இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *