நூல் விமர்சனம்:

‘வளமான முதுமைக்கு எது மிக அவசியம்… போதுமான நிதிவசதியா? நல்ல உடல்நலமா? உண்மையான உறவுகளா?’ என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கிறது இந்த நூல். ‘உண்மையில் இந்த மூன்றுமே அவசியம். அப்படி மூன்றும் கிடைக்கப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஆனால், அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலிகள் மிகவும் குறைவே’ என வேதனையுடன் குறிப்பிடுகிறார் டாக்டர் வ.செ.நடராசன். முதியோர் மருத்துவம் தொடர்பாக 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவரின் வித்தியாசமான நூல் இது.

தலைமுறை இடைவெளி என்பது சிறிய பள்ளமாக இல்லாமல், பெரும் பள்ளத்தாக்காக ஆகிவிட்ட இன்றைய சூழலில் முதியோர்களுக்கு நேரும் அநீதிகள் பற்றிய அதிர்ச்சி செய்திகளை தினம் தினம் படிக்கிறோம். உறவுகளிடம் சொத்துகளை இழந்துவிட்டு வீதியில் நிர்க்கதியாக நிற்கும் முதியோர்கள் ஏராளம். பணிவிடை செய்ய வந்த வேலைக்காரப் பெண்ணே, முதியோர்களை பணயக் கைதிகள் போல மிரட்டிய சம்பவம் நமக்கெல்லாம் அதிர்ச்சி தரலாம். இதுபோன்ற உண்மைக் கதைகளைச் சொல்லி, இதற்கான தீர்வுகளையும் அலசுகிறார் ஆசிரியர். இதேபோல இளைஞர்களின் கோணத்திலிருந்தும் முதியோர்களை அணுகிப் பார்க்கிறார். குடும்பங்களில் தலைமுறை இடைவெளியைக் குறைக்க நினைக்கும் முதியோர்களும் இளைஞர்களும் உணர்ந்து படிக்க வேண்டிய உன்னத நூல் இது.

(ஏன் இந்த இடைவெளி – முதியோர்களின் குடும்பப் பிரச்னைகளும் தீர்வுகளும் – பத்மஸ்ரீ டாக்டர் வ.செ.நடராசன், விலை: ரூ.120/-, வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. போன்: 044-2434 2810.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *