படிப்பினை!

முதிய தந்தையும், அவரின் இளம் வயது மகனும் அந்த உயர்தர உணவகத்துக்கு உணவருந்த வந்தனர். ‘‘எங்க அப்பாவுக்கு பிடித்த உணவைக் கொடுங்கள்!’’ என்று அவரிடம் கேட்டுக் கேட்டு ஆர்டர் கொடுத்தான் மகன். சில நிமிடங்களில் சுடச்சுட உணவு வந்தது.

தம்பதிகளாகவும் குடும்பங்களாகவும் சாப்பிட வந்திருக்கும் பலருக்கு மத்தியில் இந்த இருவரும் விநோதமாகத் தெரிந்ததால், எல்லோருமே இவர்களை கவனித்தபடி இருந்தனர். முதுமையின் உச்சத்தில் இருந்த அந்தத் தந்தையால் தனது கைநடுக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவரால் உணவை எடுத்து சாப்பிட இயலவில்லை. இலையைத் தாண்டி டேபிள் முழுக்க சிந்தியது உணவு. மகன் ஊட்டி விட முயற்சித்தான். அதையும் அவர் அனுமதிக்கவில்லை. ‘‘நீ சாப்பிடுப்பா! நான் பார்த்துக்கறேன்” என்றார். ‘சரி’ என்று மகனும் சாப்பிட ஆரம்பித்தான்.

தந்தை நிதானமாக சாப்பிட முற்பட்டு, உணவை டேபிளிலும் கீழேயும் சிந்திக்கொண்டு அந்த பகுதியையே அசுத்தப்படுத்தி இருந்தார். அது மட்டுமில்லை… முகத்திலும் உடையிலும்கூட உணவுப் பொருட்கள் சிதறி இருந்தன. அவர் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்த மகன், அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று கை கழுவச் சொல்லி, முகம் துடைத்துவிட்டு, அவரது உடைகளையும் சுத்தம் செய்து அழைத்து வந்தான். வெயிட்டர்களைக் கூப்பிட்டு டேபிளை கிளீன் செய்யச் சொன்னவன், அவர்களை சிரமப்படுத்தியதற்காக கனிவான குரலில் மன்னிப்பு கேட்டான்.

எல்லாவற்றையும் அங்கிருந்த பலரும் அருவருப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர். சிலர் வெளிப்படையாக முணுமுணுக்கவும் செய்தனர். வேறு சிலரோ அந்த இளைஞனை கிண்டலாக பார்த்து சிரித்தவாறு இருந்தனர்.

எதையும் அவன் பொருட்படுத்தவில்லை. பில் வந்ததும் பணம் செலுத்திவிட்டு, ‘‘வீட்டுக்குப் போகலாமாப்பா?’’ என அப்பாவிடம் கேட்டு, அவரைக் கூப்பிட்டுக்கொண்டு கிளம்பினான்.

வாசல் வரை வந்தபோது ஒரு கணீரென்ற குரல் அவனைத் தடுத்து நிறுத்தியது.

‘‘தம்பி! நீ சிலவற்றை இங்கே விட்டுச் செல்கிறாய்…’’

அவன் திரும்பிப் பார்த்தான். கூப்பிட்டது ஒரு நடுத்தர வயது நபர். அவன் குழப்பத்தோடு தனது பாக்கெட்களைத் தொட்டுப் பார்த்தான். தாங்கள் சாப்பிட்ட டேபிளைப் பார்த்தான். ‘‘நான் எதையும் விட்ட மாதிரி தெரியலையே?’’ என்று கேட்டான்.

கூப்பிட்டவர் மீண்டும் சொன்னார்… “ஆமாம்! நீ இங்கே இரண்டு விஷயங்களை விட்டு விட்டுச் செல்கிறாய். ஒன்று, இங்கே இருக்கும் இளைஞர்களுக்கு படிப்பினை. இரண்டு, முதுமையை நெருங்கிக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு நம்பிக்கை!’’

அங்கிருந்த அத்தனை பேரும் வாயடைத்துப் போனார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *