பெண்களை வதைக்கும் தைராய்டு தொல்லை!

பட்டாம்பூச்சியை எல்லோருக்கும் பிடிக்கும். அதுபற்றி ஆர்வத்துடன் பேசுவோம். ஆனால், அந்தப் பட்டாம்பூச்சியின் வடிவத்தில் நம் உடலில் இருக்கும் ஒரு சுரப்பி பற்றி பலரும் கவலையுடன் பேசுவார்கள். நமது கழுத்தின் முன்பகுதியில் இரு பக்கங்களிலும் இருக்கும் தைராய்டு சுரப்பிதான் அது. இந்த சுரப்பி அதிகமாகவோ, அல்லது குறைவாகவோ சுரக்கும்போது, தைராய்டு தொல்லை பெண்களை வதைக்கிறது. குறிப்பாக முதுமையில் பெண்களைத் தாக்கும் முக்கிய நோயாக இது இருக்கிறது. தைராய்டு பற்றிய அடிப்படைகளை நாம் புரிந்துகொண்டால், இந்தத் தொல்லையை சமாளிப்பது சுலபம். 

நமது உடலில் சில சுரப்பிகள் உள்ளன. அவற்றில் சுரக்கும் ஹார்மோன்கள் நேரடியாக ரத்தத்துடன் கலந்து, உடல் இயக்கத்துக்குத் துணை புரிகின்றன. இப்படி ஹார்மோன்களை சுரப்பவை நாளமில்லாச் சுரப்பிகள் எனப்படுகின்றன. அவற்றுள் பிட்யூட்டரி, கணையம், தைராய்டு ஆகிய சுரப்பிகள் மிகவும் முக்கியமானவை.

இவற்றில் தைராய்டு சுரப்பி, ‘தைராக்சின்’ எனும் ஹார்மோனை சுரக்கிறது. தைராய்டு சுரப்பி சிறியதுதான். ஆனால் இது சுரக்கும் ஹார்மோன், நம் உடலின் இயக்கத்தில் மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. இது சுரக்கும் நீர் நம் உடலில் உள்ள செல்களுக்குச் சென்று, அவை சரியாகச் செயல்பட உதவுகிறது. வாகனத்துக்கு பெட்ரோல் போல, மனித உடலுக்கு தைராக்சின் அவசியம். கிட்டத்தட்ட நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் இது தேவை.

தைராய்டு சுரப்பி தைராக்சின் ஹார்மோனை அதிகமாகச் சுரந்தால் ‘தைரோடாக்சிகோஸிஸ்’ என்னும் தொல்லையும், குறைவாகச் சுரந்தால் ‘மிக்ஸ்சோடிமா’ என்னும் தொல்லையும் ஏற்படும்.

வயதான காலத்தில் பலருக்கு தைராக்சின் ஹார்மோன் குறைவாகச் சுரப்பதால் மிக்ஸ்சோடிமா (Myxoedema) என்ற நோய் ஏற்படுகிறது. இந்த நோயின் பல தொல்லைகள் முதுமையின் விளைவாக இருப்பது போலவே தோன்றும். உதாரணம்: உடல் சோர்வு, மந்த நிலை, மனச் சோர்வு, சதை வலிமை இழத்தல், மலச்சிக்கல், காது கேளாமை. இதனால் இத்தொல்லையை எளிதில் கண்டறிய முடியாது.

இந்த நோய் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகமாக வரும்.  உடல் சற்று பருமன் அடையும்.  தோல் கடினமாகவும் வறட்சியாகவும் மாறும். வியர்வையும் குறையும். நாக்கு சற்று தடித்துக் காணப்படும். அதனால் பேச்சு இயல்பான நிலையிலிருந்து மாறி கரகரப்பாக இருக்கும். மந்த நிலை உருவாவதால் எல்லா வேலைகளையும் மெதுவாகச் செய்வார்கள். கை, கால்களில் மரத்த உணர்ச்சியும், நடை தள்ளாடுவதும் ஏற்படும். இவர்களால் குளிர்காலத்தில் குளிரைத் தாங்க முடியாது. முகமும் பருத்துக் காணப்படும். கை, கால் தசைகளில் இறுக்கமான பிடிப்பும் தோன்றும். மூட்டுவலியும், மலச்சிக்கலும் வரும் வாய்ப்பு அதிகம் உண்டு. இவர்களுக்கு மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை, இதயம் வலிமை இழத்தல் போன்ற தொல்லைகள் வரலாம்.

தைராய்டு கோளாறு இல்லையென்றாலும் இந்தப் பிரச்னைகள் முதுமையில் எல்லோருக்கும் வரும் என்றாலும், குறிப்பிட்ட சில வித்தியாசங்களை பெண்கள் உணர முடியும். குறிப்பாக நாக்கு தடிப்பது, பேச்சு மாறுவது, முகம் பருத்துவிடுவது போன்ற தொல்லைகள் பெண்களுக்கு ஏற்பட்டால், இது மிக்ஸ்சோடிமாவாக இருக்கலாம் என்று சந்தேகப்பட வேண்டும். உடனடியாக மருத்துவரின் உதவியை நாடவேண்டும். 

இந்த நோயை உறுதி செய்ய சில ரத்தப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும், உதாரணம்: T3, T4, TSH. கழுத்துப் பகுதியில் தைராய்டு கட்டி வீக்கம் இருந்தால் அதை கண்டறிய ஸ்கேன் மற்றும் பயாப்சி போன்ற பரிசோதனைகள் தேவைப்படலாம்.

இந்த நோயைச் சரிப்படுத்த தைராக்சின் என்னும் மாத்திரையைத் தொடர்ந்து நிறுத்தாமல் சாப்பிட வேண்டும். இந்த மாத்திரையை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளவேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்றி மாத்திரையின் அளவை மாற்றக்கூடாது. ரத்தப் பரிசோதனையின் முடிவுகளை வைத்து, மருத்துவர்களை தேவைப்படும்போது மாத்திரையை குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ செய்வார்கள். தைராக்ஸின் மாத்திரையை பல வருடங்களுக்கு தொடர்ந்து எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

சிலருக்கு தைராய்டு சுரப்பி தைராக்சின் ஹார்மோனை அதிகமாகச் சுரக்கும். இதனால் ‘தைரோடாக்சிகோஸிஸ்’ எனும் தொல்லை ஏற்படும். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் மிகவும் மெலிந்து இருக்கும். பசி அதிகமாக எடுக்கும். ஆனால் உடல் மட்டும் இளைத்துக் கொண்டே போகும். அடிக்கடி வயிற்றுப்போக்கும் ஏற்படும். எப்பொழுதும் ஒருவித பதற்றத்துடனே இருப்பார்கள். அதிகமாகப் பேசுவார்கள். கண்கள் இரண்டும் வெளியே தள்ளியது போல் பெரிதாகக் காணப்படும். கைகளில் நடுக்கம் அதிகம் இருக்கும். உடல் வெப்பம் சற்று மிகுதியாக இருக்கும். இவர்களால் கொஞ்சம் வெப்பம் அதிகரித்தாலும் தாங்க முடியாது. கோடைக்காலத்தில் தவித்துவிடுவார்கள். உடல் அடிக்கடி வியர்த்துக் கொட்டும்.

இந்நோய் உள்ளவர்களுக்கு தைராய்டு சுரப்பி (கழுத்தின் முன்பகுதி) சற்று வீங்கி இருக்கும்; அல்லது அந்த சுரப்பியில் பல கட்டிகள் இருக்கலாம். சிலருக்கு தைராய்டு சுரப்பி வீக்கம் ஏதும் இல்லாமலேயே தைரோடாக்சிகோஸிஸ் தொல்லை இருக்கலாம்.  இந்நோயை ரத்தப் பரிசோதனை மூலமும், தைராய்டு ஸ்கேன் பரிசோதனை மூலமும் எளிதில் கண்டறிய முடியும்.

இந்தப் பிரச்னை இருக்கும் பலருக்கு மருந்துகள் மூலமே குணமளிக்க முடியும். சிலருக்கு மட்டும் அறுவை சிகிச்சை அல்லது ரேடியம் அணுக் கதிரியக்க சிகிச்சை தேவைப்படும்.

தைராய்டு கோளாறுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அதற்கு தரமான சிகிச்சையை மருத்துவரால் தற்போது அளிக்க முடியும். அந்த அளவுக்கு சிகிச்சைகள் மேம்பட்டுள்ளன. எனவே, தைராய்டு தொல்லையை பற்றி இனி பெண்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. அறிகுறிகளை உணர்ந்துகொண்டு, உடனடியாக மருத்துவரை அணுகும் விழிப்பு உணர்வே

நமக்குத் தேவை.                            

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *