முதல் தொடர்

இந்தியாவில் முதன்முதலில் ‘முதியோர் நல மருத்துவம்’ என்கிற சிறப்புத் துறையை உருவாக்கியவர்…

இதற்காக இங்கிலாந்து சென்று முதன்முதலாக முதியோர் நல மருத்துவத்தைப் படித்த இந்திய டாக்டர்…

முதியோர் மீதான அக்கறைக்கு அங்கீகாரமாக ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றவர்…

40 ஆண்டுகளுக்கும் மேலாக முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவத் துறையில் பணிபுரிந்து வருபவர்…

இந்த அடையாளங்கள் எல்லாவற்றையும்விட, 79 வயதிலும் முதியோர் நலவாழ்வுக்காக தினம் தினம் இயங்கிவருகிறேன் என்பதில்தான் எனக்குப் பெருமிதம் கிடைக்கிறது. நான் பணியிலிருந்து ஓய்வு பெற்று 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. உடலளவிலும், மனதளவிலும் நான் இன்னமும் இளமையாக இருப்பதாகவே உணர்கிறேன்.

கடந்து வந்த பாதையை மகிழ்ச்சியும் மன நிறைவுமாக அசைபோட்டுக் கொண்டிருக்கும் வேளையில் திரு. இராஜசேகரன் மணிமாறன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. பழகிய குறுகிய காலத்திலேயே அவருடைய அறிவு, நேர்மை, கடின உழைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. இந்த வேளையில் எனக்கு என்ன தேவை என்று எண்ணிக்கொண்டிருந்தேனோ, அது அவர் மூலம் கிடைக்கப் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

இந்த காலகட்டத்தில்தான் திரு. எம்.ஆர் (திரு. இராஜசேகரன் மணிமாறன்) எனது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கிய நிகழ்வுக்காக என் கதவை தட்டினார். ஆம். ‘இந்தியாவிலேயே முதன்முதலாக முதியோர்களுக்காக கண்காட்சி ஒன்றை ஏன் நடத்தக்கூடாது’ என்று கேட்டார். முதலில் சற்று தயங்கினேன். ‘‘செல்ல வேண்டிய இடங்களுக்குக்  கையைக் காட்டுங்கள். மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்று கூறினார். 

அதன்படியே 30.09.2016 அன்று நடைபெற்ற முதியோருக்கான கண்காட்சி மாபெரும் வெற்றியாக அமைந்தது. இந்நிகழ்ச்சி எனக்கு ஒரு புத்துணர்வை அளித்தது.

இந்த வேளையில் திரு. எம்.ஆர். அவர்கள் மறுபடியும் கதவைத் தட்டினார். ‘உங்கள் பெயரில் ஏன் ஓர் அறக்கட்டளை தொடங்கக்கூடாது’ என்றார். ‘எனக்கு வயது 77 ஆகிவிட்டது. இனிமேல் இதெல்லாம் எதற்கு?’ என்று சற்று பின்வாங்கினேன். அவர் அழுத்தமாக வலியுறுத்தவே, அரைமனதுடன் சம்மதித்தேன். அறக்கட்டளை தொடக்க விழாவை ஓர் ஐம்பெரும் விழாவாக 06.02.2017 அன்று நடத்தி, முதியோர் நல மருத்துவ வரலாற்றில் ஒரு மைல் கல்லை நாட்டினார் திரு. எம்.ஆர். 

‘முதுமையை முறியடிப்போம்’ என்ற முனைப்புடன் என் வழிநடத்தலில் இந்தியாவிலேயே முதன்முறையாக முதியோர் நலம் குறித்த முழுமையான விழிப்பு உணர்வு விழா சென்னை வித்யோதயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 08.10.2016 அன்று மிகச் சிறப்பாக நடந்தது. 

இவ்விழாவில் சிறுநீரகம், மூப்பியல், மூட்டு எலும்பு இயல், நரம்பியல், இதயவியல் மற்றும் மகளிர் மருத்துவம் சார்ந்த மருத்துவ நிபுணர்கள் பங்கேற்ற கேள்வி&பதில் நிகழ்ச்சி அனைவரையும் மிகவும் ஈர்த்தது. பிற்பகல் இடைவெளியில் தேன்கிண்ணம் நிகழ்ச்சி. நெஞ்சைவிட்டு அகலாத நேற்றைய திரைப்பாடல்கள், முதியவர்களை இளைஞர்களாக மாற்றியது. 

அந்த விழாவில் சுமார் 20க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைந்திருந்தன. முதியோருக்கான தடுப்பூசி, சத்துணவு, கீழே விழுதல் பிரச்னை, மறதி சார்ந்த தொல்லைகள், இயன்முறை சிகிச்சை, முழுஉடல் பரிசோதனை, கண், பற்கள், சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம், முதியோர் நலம் சார்ந்த நூல்கள் போன்ற பல அரங்குகளில் முதியோர் கூட்டம் அலைமோதியது.  முதியவர்கள் தங்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் ஓரே குடையின் கீழ் தீர்வு பெற்றது பற்றி பலர் மிகவும் பாராட்டினார்கள். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ‘முதுமையை முறியடிப்போம்’ என்ற குறு நூலும், மதிய உணவும் இலவசமாக வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ‘முதுமையில் மிகவும் தேவையானது உடல்நலமா அல்லது பொருள் நலமா’ என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. அன்று மாலையில் ‘முதுமை ஒரு முழு நிலா’ என கேள்வி&பதில் நடையில் அடங்கியிருக்கும் எனது நூலை பத்மஸ்ரீ திரு. நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் வெளியிட்டார். நான் ஏற்புரை வழங்கினேன். 

விழாவில், ‘அகவை முதிர்ந்தும் அயராது உழைத்து வரும்’ 10 பேருக்கு சிறப்பு செய்யப்பட்டது. இந்த நல விழா, ‘முதுமையிலும் இனிமையுடன் வாழலாம்’ என்ற மனோபலத்தை பங்கேற்ற அனைவருக்கும் ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *