முதியோருக்கான சேமிப்புத் திட்டம்!

வரும் 2050ம் ஆண்டில் இந்தியாவில் 30 கோடி முதியோர்கள் இருப்பார்கள் என அரசின் ஒரு கணிப்பு சொல்கிறது. எனவே அவர்களின் மருத்துவத் தேவைகள், சமூகப் பாதுகாப்பு போன்ற அம்சங்களை கவனத்தில் கொண்டு பல திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. முதியோர்களின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு உருவாக்கிய ஒரு திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizens Saving Scheme -SCSS).
இதன் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்…
* முதியோருக்கான நீண்ட கால சேமிப்புத் திட்டமாகவும், அதிக வட்டி தருவதாகவும் இது இருக்கிறது.  பணத்துக்கும் பாதுகாப்பு உண்டு.
*  60 வயதைத் தொட்ட இந்தியர்கள் இதில் பணம் சேமிக்கலாம். 55 வயதுக்கு மேல் தானாகவே முன்வந்து ஓய்வு பெறுவோரும் இதில் சேமிக்கலாம். (அவர்கள் தங்கள் ஓய்வுக்கால சலுகைகளைப் பெற்ற ஒரு மாதத்துக்குள் இந்தத் திட்டத்தில் சேர வேண்டும்.) 50 வயதுக்குப் பிறகு ஓய்வுபெற்ற ராணுவத்தினரும் இதில் சேர முடியும்.
* குறைந்தபட்சம் 1,000 ரூபாய், அதிகபட்சமாக 15 லட்ச ரூபாய் இதில் சேமிக்க முடியும். முதியோர் தனியாகவும், தம்பதியராக இணைந்தும் சேமிப்பு கணக்கு தொடங்கலாம்.
* ஒருவர் தன் ஓய்வுக்கால பணப்பலனாக எவ்வளவு பெற்றாரோ, அந்தப் பணத்தை மட்டுமே சேமிக்க முடியும். உதாரணமாக, ஒருவர் பணிக்கொடையாக ஐந்து லட்ச ரூபாய் பெற்றால், அவரால் அதிகபட்சம் ஐந்து லட்ச ரூபாய் மட்டுமே சேமிக்க முடியும்.
* ஒரு லட்ச ரூபாய் வரை பணமாகக் கட்டலாம். அதற்கு மேற்பட்ட சேமிப்பு என்றால், காசோலையாகவே தர வேண்டும்.
* மத்திய அரசின் முயற்சியில் உருவாக்கப்பட்ட திட்டம் என்பதால், இந்தியாவில் மிகவும் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டமாக இது கருதப்படுகிறது.
* அரசு வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் இந்தக் கணக்கைத் தொடங்கலாம். ஓய்வுக்காலத்தில் வேறு இடங்களில் குடியேறினாலும், இந்தியாவின் எந்த மூலைக்கும் இந்த சேமிப்புக் கணக்கை மாற்றிக்கொள்ள முடியும்.
* சுமார் 8.6 சதவிகிதம் என்ற அளவில் அதிக வட்டியும் கிடைக்கிறது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்பட்டு, கணக்கில் வரவு வைக்கப்படும்.
* ஐந்து ஆண்டுகளில் சேமிப்பு முதிர்வு பெறும். தேவைப்பட்டால், இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு சேமிப்பைத் தொடரலாம்.
* தவிர்க்க இயலாத காரணங்களுக்காக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே பணத்தைத் திரும்பப் பெற சில நிபந்தனைகள் உண்டு. முதல் ஓராண்டு காலத்துக்குள் திரும்ப பெற முடியாது. அதன்பிறகு டெபாசிட் பணத்தில் 1.5 சதவிகிதத் தொகை அபராதமாக பிடித்தம் செய்யப்படும். டெபாசிட் செய்தவர் திடீரென மறைந்துவிட்டால், வாரிசுதாரர் உடனடியாக பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அந்த சூழலில் அபராதம் விதிக்கப்படாது.
* இந்த சேமிப்புக் கணக்கை ஆரம்பிப்பது மிக சுலபம். போட்டோ ஒட்டிய அடையாள அட்டை, முகவரி ஆதாரம், வயதுச் சான்று, 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஆகியவையே தேவையானவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *