முதியோர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளித்தல்

சாதாரண ஜுரம் என்றாலும், உயிருக்கே ஆபத்தான பிரச்னை என்றாலும், முன்பெல்லாம் முதலில் ஓடுவது குடும்ப டாக்டரிடம்தான். ஒவ்வொருவரின் உடல் இயல்பு முதல் அலர்ஜி வரை அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார் குடும்ப டாக்டர். அவசர தருணங்களில் வீட்டுக்கே வந்து சிகிச்சை கொடுப்பார்.

குடும்ப டாக்டர் முறை தற்போது முழுவதும் இல்லாமலேயே போய்விட்டது. டாக்டர்களின் அவசர வாழ்க்கையினால் முதியவர்களுக்கு வீட்டிற்கே சென்று சிகிச்சையளிப்பது என்பது கனவாகிவிட்டது. மருத்துவர்களின் வேலைப்பளு, நேரமின்மை மற்றும் வாகன நெரிசல் போன்றவையே இதற்கு முக்கிய காரணங்கள். உரிய நேரத்தில் தக்க சிகிச்சை பெறமுடியாமல் பல முதியவர்கள் அவதியுறுகிறார்கள். நெருக்கடியான சூழல்களில் சிலர் இறப்பைச் சந்திக்கவும் நேரிடுகிறது.

இதற்கெல்லாம் ஒரு தீர்வு காணப் பிறந்ததுதான், ‘முதியோர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கும் திட்டம்’. மூத்த குடிமக்கள் மன்றத்தின் தலைவராக நானும், செயலாளராக டாக்டர் கேப்டன் எம்.சிங்கராஜாவும் இருந்தோம். அப்போது, 17.02.2008 அன்று மேஜர் ஜெனரல் அபான் நாயுடு அவர்களால் இந்த அரிய திட்டம் தொடங்கப்பட்டது. முதியோர் நல மருத்துவத் துறையில் இந்த நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நாளாகும். பல முதியவர்களின் அவசர  சிகிச்சைக்கு பெரிதும் உதவியது மட்டுமின்றி, விலை மதிக்க முடியாத உயிர்களும் காப்பாற்றப்பட்டதுதான் இந்தத் திட்டத்தின் சிறப்பு.

இந்தத் திட்டத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் தெரிந்துகொள்ள என்னோடு சற்று பின்நோக்கி பயணம் செய்யுங்கள்:

பணி நிறைவு பெற்ற பின்பு, அரசுப் பணியிலிருந்து நான் 1997ம் ஆண்டு ஓய்வுபெற்றேன். முதியோர் நல மருத்துவப் பிரிவை தங்களுடைய மருத்துவமனையில் தொடங்கி பொறுப்பேற்குமாறு பல மருத்துவமனைகளிலிருந்து எனக்கு அழைப்புகள் வந்தன.  ‘அரசுப் பணி நிறைவுக்குப் பின்பு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில்தான் தொண்டு செய்வேன்’ என ஏற்கனவே நான் உறுதி எடுத்திருந்தேன். எனவே, அந்த அழைப்புகளை எல்லாம் மறுத்துவிட்டு, தனிப்பட்ட முறையில் முதியோர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் முழு நேர கவனத்தையும் செலுத்தினேன்.

மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறும் நிலையில் இல்லாத முதியோர்களுக்கு, அவர்களுடைய வீடுகளுக்கே சென்று அவசர சிகிச்சை அளிப்பதில் நான் அதிக நேரம் செலவழிக்க வேண்டிதாயிற்று. பணிகளை முடித்து இரவு உணவு சாப்பிட 10 மணிக்கு மேல் ஆகிவிடும். வேலைப்பளுவும் அதிகரிக்க, என் உடல்நலம் பாதிக்கப்பட ஆரம்பித்தது. சென்னை கீழ்பாக்கம் பிளவர்ஸ் சாலையில் உள்ள எனது கிளினிக்கில் நடைபெற்ற மூத்த குடிமக்கள் மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இதைப் பற்றி விவாதிக்கப்பட்டது. ‘முதியோர்களுக்கு வீடு தேடிச் சென்று சிகிச்சை அளிப்பதை ஒரு திட்டமாக உருவாக்கி, அதை செயல்படுத்துவது’ என்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு, அதன் பொறுப்பு என்னிடம் கொடுக்கப்பட்டது.

இந்தப் பணியைத் தொடங்குவதற்காக முதலில் எனது மருத்துவ நண்பர்களிடம் பேசினேன். ‘‘உங்களின் சேவை நேரத்தில் சுமார் 10 சதவிகிதத்தை முதியவர்களுக்கு அர்ப்பணிக்கலாமே’’ என்று கேட்டேன். தொடர்பு கொண்ட எல்லா மருத்துவர்களும் தங்களது சம்மதத்தை உடனே தெரிவித்தார்கள். திட்டம் ஒரு வடிவம் பெற்றது.

இத்திட்டத்தில் முதியோர் நல மருத்துவர்கள் மற்றும் பொதுநல மருத்துவர்கள் பணியாற்றுவார்கள். தேவைப்படும் முதியோர்களுக்கு இயன்முறை சிகிச்சை நிபுணர்கள் வீட்டிற்கே சென்று சிகிச்சை அளிப்பார்கள். தேவைப்படும்போது செவிலியர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் வீட்டிற்கே சென்று மருத்துவ உதவிகள் செய்வார்கள்.

ஓய்வூதியம் பெறும் முதியவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதுவும், தங்களின் கையெழுத்தை சரியாக இடமுடியாத ஓய்வூதியர்களுக்கு தேவையான சான்றிதழ்களும் மருத்துவர்களால் அளிக்கப்படும். இறப்புச் சான்றிதழும் வழங்க மருத்துவர்கள் முன் வந்தார்கள். முதியோரை இழந்த நிலையில் துன்பத்தில் தவிக்கும் உறவினர்களுக்கு இது மிகவும் உதவியாகவும் ஆறுதலாகவும் இருக்கும். 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு அவசர சிகிச்சை தரப்படும். நடக்க முடியாத நிலையில் உள்ள முதியவர்களும் இத்திட்டத்தின் மூலம் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் இணைந்து சேவையாற்றும் மருத்துவர்களின் தொலைபேசி எண் மற்றும் முகவரி அடங்கிய குறுநூல் வருடம் ஒரு முறை வெளியிடப்படும். ஆரம்பத்தில் 35 மருத்துவர்களும், 11 இயன்முறை சிகிச்சை நிபுணர்களும், செவிலியர்களும் இதில் இணைந்து பணியாற்றினார்கள். முதியோர் நலத்துறையில் நிகழ்ந்துவரும் நவீன மாற்றங்களை, இத்திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவர்கள் அறிந்து பயன்பெறும் வகையில் அவ்வப்போது கருத்தரங்குகளும் நடைபெற்றன.

நல்லபடியாக ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை தவிர்க்க முடியாத சில காரணங்களால், தொடர்ந்து சரிவர நடத்த இயலவில்லை. எங்களின் அறக்கட்டளை மூலம் இத்திட்டம் மறுபடியும் சிறப்பாக எப்படி செயல்பட ஆரம்பித்தது என்பதைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *