முதுமையை முடமாக்கும் பக்கவாதம்
முதுமையை முடமாக்கும் பக்கவாதம்
– டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன்
மூளை மற்றும் நரம்பியல் நிபுணர்
முதுமையில் பலரையும் அதிகமாக பாதிக்கும் ஒரு நோய், பக்கவாதம். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ரத்தம் உறைந்தாலோ, அல்லது அந்த ரத்தக் குழாய்களிலிருந்து ரத்தம் கசிந்தாலோ பக்கவாதம் ஏற்படும். மூளையின் வலது பக்கத்தில் இந்த பாதிப்பு ஏற்பட்டால், உடலின் இடது பகுதி செயலிழந்து போகும். மூளையின் இடது பகுதியில் பாதிப்பு ஏற்பட்டால், வலது பகுதி செயலிழக்கும். இந்தியாவில் அவசர சிகிச்சை பெறுவதில் மாரடைப்பு, தலைக்காயத்திற்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தை பக்கவாதம் வகிக்கிறது. உரிய நேரத்துக்குள் சிகிச்சை அளித்தால் மட்டுமே பக்கவாத பாதிப்புகளை முழுமையாக குணப்படுத்த முடியும். எனவே உடனடி சிகிச்சை அவசியம்.
காரணங்கள் என்னென்ன?
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருத்தல், இதயம் வலிமை இழத்தல், இதயம் சீராக இயங்காமல் விட்டு விட்டுத் துடிப்பது மற்றும் உடற்பருமன் போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு பக்கவாதம் தாக்கும் அபாயம் உண்டு. ஹார்மோன் சிகிச்சை பெறுவோருக்கும் இது தாக்கக்கூடும். புகை பிடிப்பவர்கள், மற்றவரின் புகையை சுவாசிக்க நேர்பவர்கள், அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்கள் மற்றும் உடல் உழைப்பின்றி இருப்பவர்களுக்கும் பக்கவாதம் தாக்கும் அபாயம் இருக்கிறது. சிறிய அளவில் பக்கவாதம் (mini stroke) வந்தவர்களுக்கு, மீண்டும் பெரிய அளவில் பக்கவாதம் வர வாய்ப்பு உள்ளது.
பொதுவாக 50 முதல் 60 வயது, அல்லது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பக்கவாதத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
அறிகுறிகள் இவைதான்:
* திடீரென்று முகம், கை, கால்கள் ஒரு பக்கம் வலிமை இழத்தல், மரத்துப் போதல் அல்லது செயலிழத்தல்.
* கண் பார்வையில் திடீரென்று மாற்றம் ஏற்படுதல், பார்வை மங்குதல், இரட்டைப் பார்வை, கண் பார்வை செயலிழத்தல்.
* திடீரென்று வாய் குழறுதல், மனக்குழப்பம், மற்றவர்களைப் புரிந்துகொள்ளாத நிலை.
* நடை தள்ளாடுதல், மயக்கம், எந்தக் காரணமும் இல்லாமல் தாங்க முடியாத தலைவலி, வாந்தி ஏற்படுதல்.
சிகிச்சை முறைகள்:
பக்கவாதத்தின் பாதிப்பு நிரந்தரமாக முடக்கிப் போடுவதைத் தவிர்க்க, சிகிச்சையை உடனடியாகத் தொடங்க வேண்டும். எனவே, பாதிக்கப்படுபவர்கள் இதன் அறிகுறிகளை உடனே அடையாளம் காண்பது அவசியம். மூளையில் ஏற்படும் ரத்தக் கட்டினால் 80 சதவிகித பக்கவாதமும், மூளை ரத்தக் குழாயில் ஏற்படும் ரத்தக் கசிவினால் 20 சதவிகிதம் பக்கவாதமும் ஏற்படும்.
பக்கவாதம் வந்தவுடனே முதலில் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரையின் அளவு, ஈ.சி.ஜி போன்ற அடிப்படை பரிசோதனைகளைச் செய்வார்கள். மிகவும் முக்கியமான பரிசோதனை, மூளை ஸ்கேன். இதன் மூலம் ‘மூளையில் ரத்த ஓட்டம் குறைந்துள்ளதா, அல்லது ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதா’ என்று உறுதியாகக் கண்டறிய முடியும்.
சமீபகால உயரிய சிகிச்சை முறைகளின் மூலம் பக்கவாத பாதிப்பைக் குறைத்து, பழைய நிலைக்கே மீண்டு வரமுடியும். இதற்கு வேண்டியது இரண்டு. ஒன்று, பக்கவாதத்தின் அறிகுறிகளை உடனே தெரிந்து கொள்ளுதல். இரண்டு, மிக விரைவில் சிகிச்சையை ஆரம்பித்தல். பக்கவாதம் ஆரம்பித்த நான்கு முதல் ஐந்து மணி நேரத்துக்குள் சிகிச்சை பெற்றால் நல்ல பலன் கிடைக்கும். அதனால்தான் இந்த நேரம் ‘கோல்டன் ஹவர்’ எனப்படுகிறது. உரிய நேரத்தில் சிகிச்சை பெறவில்லை என்றால், செயலிழந்த உடல் பகுதியை பழைய நிலைக்குக் கொண்டு வருவது சிரமம்.
ரத்தக் கட்டிகளைக் கரைத்தல்: மூளை ரத்தக் குழாய்களில் ரத்தக் கட்டினால் ஏற்பட்ட அடைப்பை ஊசி மூலம் மருந்தை செலுத்திக் கரைப்பார்கள். தடைபட்ட ரத்த ஓட்டத்தை இதன்மூலம் சீர்செய்து பழைய நிலைக்கே கொண்டு வரமுடியும். இதை பக்கவாதம் ஆரம்பித்த 4&5 மணி நேரத்திற்குள்ளேயே தொடங்க வேண்டும்.
ரத்தக் கட்டியை அகற்றுதல்: ரத்தக்கட்டிகள் சற்று பெரிதாக இருந்தால், இப்படி மருந்தின் மூலம் கரைக்க இயலாது. அப்படிப்பட்ட சூழலில், பாதிக்கப்பட்ட ரத்தக் குழாயில் சிறு குழாயை நுழைத்து ரத்தக் கட்டியை நீக்குவார்கள்.
இத்துடன் கூடுதலாக பிசியோதெரபி சிகிச்சையும் கொடுக்க வேண்டும். பழையபடி இயல்பாகப் பேசுவதற்காக பேச்சுப் பயிற்சி (Speech therapy) சிகிச்சையும் கொடுக்க வேண்டும். செய்யும் வேலை அல்லது தொழிலை பழையபடி இயல்பாகச் செய்வதற்கு ஏதுவாக அதற்கான சிறப்பு சிகிச்சையும் (Occupational therapy) கொடுக்க வேண்டும்.
தடுப்பது எப்படி?
* நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மிகை கொழுப்பு ஆகிய பிரச்னைகள் இருந்திருந்தால், முறையாக மருந்துகள் எடுத்துக்கொண்டு அவற்றைக் கட்டுக்குள் வைத்திருங்கள்.
* புகைப்பதையும், மது அருந்துவதையும் நிறுத்தவும்.
* ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுங்கள். சமச்சீரான உணவு சாப்பிடுங்கள். வழக்கமான நடைப்பயிற்சி, யோகா ஆகிய உடற்பயிற்சிகள் உங்களை ஆரோக்கியமாக வைத்திருந்து, பிற்கால அபாயங்களான இதய தாக்குதலையும், பக்கவாத நோய்களையும் தடுக்கும்.