முதுமை ஒரு தவம் – சொல்வேந்தர் சுகி சிவம்

மாற்றத்தை ஏற்றால் மகிழ்ச்சி!

ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவை அறியாதவர்கள் இருக்க முடியாது. எழுத்தாளர், நாடக ஆசிரியர், தத்துவ மேதை என பல பரிமாணங்கள் கொண்டவர். 94 வயது வரை வாழ்வாங்கு வாழ்ந்தவர்.

அவரைப் பற்றி ஒரு செய்தி உண்டு. தன் நிறைவுக் காலத்தில் பெர்னார்ட் ஷா கிராமம் கிராமமாகப் போய் கல்லறைகளைப் பார்த்தாராம். உள்ளே உட்கார்ந்து ஒவ்வொரு கல்லறையிலும் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களைப் படித்தாராம். ஒரு கிராமத்தில் ஒருவரின் கல்லறையில், ‘இவர் 90 வயதில் அகால மரணமடைந்துவிட்டார்’ என வாசகம் எழுதியிருந்ததாம். அதைப் படித்த பெர்னார்ட் ஷா, ‘‘நான் இந்த கிராமத்தில் வாழ விரும்புகிறேன்’’ என்றாராம். ‘‘90 வயதில் இறப்பதை ‘அகால மரணம்’ என்று கூறும் மனம் இருக்கிறதே… அதுதான் பொதுமனம். இப்படிப்பட்ட மக்கள் வாழும் ஊரில்தான் வாழவேண்டும்’’ என்று அவர் வாழ்ந்தார் என்பார்கள்.

பெர்னார்ட் ஷாவிடம், ‘How old are you Shaw?’ என்று யாராவது கேட்டால் அடிக்க வந்துவிடுவார், ‘வயது என்ன?’ என்று கேட்கும்போதுகூட ‘ஓல்டு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது என்று எண்ணுபவர் அவர். மனதில் இருக்கும் எண்ணங்களுக்கும் சொற்களுக்கும் பலமும் வலிமையும் உண்டு.

நலமுடன் நீண்ட ஆயுள் வாழ்வதற்கு பெர்னார்ட் ஷா சில வழிகளைச் சொல்கிறார்… எவ்வளவு பணம் இருந்தாலும் அது நம்மைப் பாதுகாக்காது. நம் உடல்நலம்தான் நம்மைப் பாதுகாக்கும். நமக்கு வயதாக வயதாக ஒரு குணம் வரும். நமக்கு செலவு செய்வதைக் குறைத்துவிட்டு மற்றவர்களுக்காக செலவு செய்வோம். அதில் ஒரு நியாயம் இருக்க வேண்டும். சிலர் செருப்பு கூட பிள்ளைகளுடையதை எடுத்துப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களுக்கு புதிது வாங்கிக் கொடுப்பார்கள். அவ்வளவு நல்லவர்களாக இருக்க வேண்டும் என்றில்லை. பிறரை நேசிப்பது போலவே உங்களையும் நேசியுங்கள்.

ஒரு காலகட்டத்திற்குப் பிறகு நம் வேதனையையும் வலியையும் பிள்ளைகளிடம் மனம்திறந்து சொல்லலாம். அவர்களிடம் மறைத்துக் கொண்டு நல்லவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பிள்ளைகள் நம் பொருளாதார நிலையை அறிந்து கொள்ளாமல் தொந்தரவு செய்வர். அந்த நேரத்தில், ‘நம்மால் என்ன முடியும்’ என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

சிலர் பிள்ளைகள், மனைவி என குடும்பத்துக்காக ஓய்வெடுக்காமல் உழைத்துக்கொண்டே இருப்பார்கள். அவ்வாறு இருக்க வேண்டும் என்பதில்லை. ஓய்வு தேவைப்படும் காலங்களில் தனக்காக ஓய்வு எடுத்துக்கொள்ளவும் வேண்டும்.

காந்தியைப் பற்றி ஓஷோ கூறுவார். ‘‘இவருக்கு வேறு வேலையில்லை. எப்போதும் பயன்பாடு நோக்கியே செயல்படச் சொல்லுவார். அது எல்லா நேரங்களிலும் சாத்தியமா என்றால் கிடையாது. சில நேரங்களில் உபயோகமற்றதும் அழகுதான்’’ என்பார். 24 மணி நேரமும் ‘வேலை… வேலை…’ என்று ஓய்வு இல்லாமல் இருக்கவேண்டும் என்பதில்லை. பிடித்தமான நிகழ்ச்சிகளுக்குச் செல்வது, பாடல்கள் கேட்பது, பாடுவது, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது என மனநிம்மதியுடன் இருக்க வேண்டும்.

ஒருவர் என்னிடம் வந்து, ‘‘1935ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் பத்து ரூபாய். இப்ப என்ன விலை தெரியுமா? இந்த நாடு ரொம்ப கெட்டுப் போச்சு சார்’’ என்றார். உடனே அவரின் நண்பர் வந்து, ‘‘இவர் என்ன சொன்னார் சார்?’’ என்று கேட்டார். ‘‘அவரையே கேளுங்கள்’’ என்றேன். என்னிடம் கூறியதை அப்படியே அவர் தன் நண்பரிடம் சொன்னார். ‘‘நீதான் அப்பவும் தங்கம் வாங்கலை. இப்பவும் தங்கம் வாங்கலை. தங்கம் வாங்காதபோது உனக்கென்ன கவலை?’’ என்று அந்த நண்பர் கேட்டார். ‘நாடு கெட்டுப் போச்சு’ என்றவர் அதன்பின் அமைதியாகிவிட்டார். வயதாகிவிட்டாலே இப்படி தனக்குத் தோன்றுவதையெல்லாம் யாரிடமாவது பகிர்ந்துகொள்ளும் நினைப்பு எழும். ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமா என யோசிக்க வேண்டும். நிகழ்காலத்தில் இருக்க வேண்டும்.

நிகழ்காலத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை நான் என் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டேன். அப்பா எப்போதும் எந்த வேலை செய்தாலும் பரபரப்பாக ‘அடுத்தது என்ன’ என்று ஓடிக்கொண்டே இருப்பார், அம்மா நிதானமாக செயல்படுவார். அதிலிருந்து நான் ஒரு விஷயம் கண்டுபிடித்தேன். திட்டமிடும்போது எதிர்காலத்தில் இரு, வாழும்போது நிகழ்காலத்தில் இரு.

அதேபோல மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். என் மகள் கடுமையாக என்னை எதிர்த்துப் பேசினார். ‘‘என் அப்பா முன்பு நானெல்லாம் உட்கார்ந்தது கூட இல்லை. நீ என்னடா என்றால், என்னை எதிர்த்துப் பேசுகிறாய்’’ என்று நான் சொன்னேன். என் மகள் உடனே, ‘‘அப்படியென்றால் உங்களுக்கோ, உங்கள் அப்பாவுக்கோ ஏதோ கோளாறு என அர்த்தம் அப்பா. உங்களை உட்கார விடாத அளவுக்கு தாத்தா அராஜகமான ஆளா? இல்லை, நீங்கள் உட்கார்வதற்கு தைரியமில்லாத கோழையா?’’ என்றார்.

நான் பதில் சொல்ல முடியாமல் திகைத்தபோது என் மகள் சொன்ன விளக்கம் இது… ‘‘ஆனால் ஒன்று அப்பா! நம்ம லெவல் வேறு. அதை ஏற்றுக்கொள்கிற பக்குவம் உங்களுக்கு வந்து விட்டது. உட்காருகிற தைரியம் எங்களுக்கும் வந்துவிட்டது. அதனால் நாம்தான் சரியாக இருக்கிறோம்.’’

இதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அன்று நான் தினக்கூலி என்பதால், வாங்குகிற சம்பளத்தை பத்திரமாக மனைவியிடம் கொடுப்பேன், மனைவி வீட்டுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து நிர்வாகம் செய்வார். என் அம்மா ஒரு நாள், ‘‘டேய்! நீ கஷ்டப்பட்டு உழைத்து வாங்கி வரும் சம்பளத்தை, உன் மனைவி பேக் ஒன்றை மாட்டிக்கொண்டு போய் செலவு செய்துவிட்டு வருகிறாளே… நீ கேட்க மாட்டியா?’’ என்றார். நான் உடனே அம்மாவைப் பார்த்து, ‘‘அப்பா சம்பளத்தை வாங்கி நீங்கள் நிர்வாகம் செய்கிற மாதிரி உங்கள் கையில் கொடுத்ததே இல்லை என்று எத்தனை முறை என்னிடம் வருத்தப்பட்டு சொன்னீர்கள். இப்போது பாருங்கள்… நான் உங்கள் வழியில்தான் நடக்கிறேன். மனைவியிடம் பணம் கொடுத்து நிர்வாகம் செய்ய கணவன் விடுவதில்லை என்று உங்கள் கொள்கைக்காக போராடினீர்கள். அதை நான் இப்போது நிறைவேற்றி, பணத்தை என் மனைவியிடம் கொடுத்து நிர்வாகம் செய்ய விடுகிறேன். நீங்கள் வேண்டுமானால் வாழ்க்கையில் தோற்றுப் போயிருக்கலாம். ஆனால் உங்கள் கொள்கையை நான் நிறைவேற்றியுள்ளேன். அதை நினைத்து சந்தோஷப்படுங்கள்’’ என்றேன். அம்மா உடனே, ‘‘ஆமாப்பா! நான் தோற்றாலும் பரவாயில்லை. அவள் அதிர்ஷ்டம் நல்லாயிருக்கட்டும்’’ என்று வாழ்த்தினார்கள்.

மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறவர்கள்தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும். மாற்றத்தை நிராகரிப்பவர்கள் வலியோடுதான் வாழமுடியும்.

(பேசுவோம்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *