முதுமை ஒரு தவம் – சொல்வேந்தர். சுகி. சிவம்

நமது வயதென்பது 80, 70, 60 என்கிற நம்பரா? வயதுதான் முக்கியமா? உண்மையிலே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் முதலமைச்சருக்குத்தான் நம்பர் தேவை. நம் யாருக்கும் நம்பர் என்பது முக்கியம் கிடையாது. ஏனெனில் நம்பரில்தான் அவர்களுக்குத் தலையெழுத்து இருக்கிறது. நமக்கெல்லாம் அப்படிக் கிடையாது.

ஒரு பெரியவரிடம் நான் கேட்கிறேன். ‘‘உங்களின் வயது என்ன?’’ அதற்கு அவர், ‘‘எப்போது?’’ என்றார். எனக்குப் புரியவில்லை. இன்று காலை எனக்கு என்ன வயதோ, அதுதான் இன்று முழுக்க இருக்க முடியும். இந்தப் பிறந்த நாளில் என்ன வயதோ, அதுதான் இந்த ஆண்டு முழுக்க இருக்க முடியும். வயதென்பது எப்பொழுதும் எல்லோருக்கும் ஒன்றாகத்தானே இருக்க முடியும்!

ஆனால், அவர் ஒரு விளக்கம் சொன்னார் பாருங்கள்… ‘‘என் பேரப்பிள்ளையுடன் விளையாடும்பொழுது எனக்கு வயது ஒன்று. ஏனெனில், என் பேரப்பிள்ளை எந்த அறிவுநிலையில் இருக்கிறானோ, அந்த அறிவுநிலையில் நான் இருந்தால்தான் சந்தோஷமாக இருக்க முடியும். என் பேத்தி இருக்கிறாள். அவளுடன் சேர்ந்து டி.வி பார்க்கிறபோது என் வயது ஐந்து. மியூசிக் போட்டு நான் டான்ஸ் ஆடினால் என் வயது பதினெட்டு. என்னிடம் சிலர் வந்து வாழ்க்கையில் பிரச்னையென்று அறிவுரை கேட்கும்பொழுது, நான் அவர்களுடன் உரையாடுவேன். அப்போது என் வயது 60. சில நேரம் தியானம் செய்யும்போது நான் யோசிப்பேன், ‘உடலுக்குத்தான் வயது இருக்கும். ஆன்மாவிற்கு வயது இல்லை’ என்று சிந்தனை எழும். அப்போது என் வயது ஐந்தாயிரம். நீ எதைக் கேட்கிறாய், என் வயதையா? அதை எனக்குப் புரியும்படியாகச் சொல்’’ என்றார்.

வயதென்பது அபிப்பிராயம். முதுமையில் நோய் என்று வருகிறது. அது ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது. ஒன்றுக்கு மருந்து சாப்பிடும்போது, மற்றொன்று பாதிக்கும். ஓர் அழகான பழமொழி இருக்கிறது, ‘வயோதிகம் நோய்களின் துறைமுகம்’. துறைமுகத்திற்கு ஒரு கப்பல் போகும்போது இன்னொரு கப்பல் வரும், அதைப் போல் ஒரு நோய்க்கு மருத்துவம் பார்த்து குணமடைந்தால் இன்னொரு நோய் வரும். அப்படியென்றால் உடல் சார்ந்த மருத்துவத்தில் நமக்கு அறிவுரையும் தெளிவுரையும் வேண்டும்.

ஆனால் மனம் சார்ந்து எப்படி வாழ்க்கையை வைத்துக் கொண்டால் சிரமம் இல்லாமல் சந்தோஷமாக, மகிழ்ச்சியாக கொண்டு போவது? ‘இளமையில்தான் ஓர் அழகு இருக்கிறது’ என்று சொல்வோம். ஆனால் இது உண்மையில்லை. காந்தியை இளமையில் எடுத்த புகைப்படத்தையும், தென்னாப்பிரிக்காவிற்கு சென்றபோது எடுத்த படத்தையும் பார்க்கும்பொழுது இது புரியும். இளமையில் அவர் தலையில் தொப்பி போட்டு, காதில் கடுக்கன் போட்டு முகத்தை ‘உர்’ரென்று வைத்திருப்பார். ஆனால் அவர் தேசத்தந்தையாக மாறியபின் முதுமையில் அவருக்கு போட்ட நூல் மாலையைக் கழற்றிவிட்டு அந்த பொக்கை வாயில் ஒரு சிரிப்பு சிரிப்பார்… அப்படியே கடவுளைப் பார்த்தது போல் இருக்கும். இளமையில் அழகாக இல்லாத ஒரு மோகன்தாஸ் முதுமையில் அழகாக இருந்தார் என்றால் அவர் தவமாக வாழ்ந்ததால் வந்தது. நாம் இளமையில் இருந்த வாழ்க்கைமுறையைப் பற்றி மட்டும் நினைத்துக் கொண்டிருந்தால் முதுமையிலும் நம் தோற்றம் அப்படியேதான் இருக்கும். முதுமையில் வரக்கூடிய ஒரு தவம், ஓர் ஒளி வருவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய் விடும்.

இதற்கு முறையான விளக்கம் அளித்தவர் சேக்கிழார். பெரிய புராணத்தில் சிவபெருமான் கிழவர் வேடத்தில் வருகிறார். அதற்கு எழுதுகிறார், ‘வடிவுறு மூப்பு வந்து’ என்று! வடிவான அழகான முதுமை வந்திருக்கிறதாம்! தவத்தால் முதுமையில் ஓர் அழகு வரும். அன்னை தெரசாவின் படத்தை எடுத்துப் பார்த்தால் தெரியும். அந்த முகத்தில் எத்தனைக் கோடுகளையும் சுருக்கங்களையும் நாம் காண்கிறோம். இருப்பினும் அழகாகத் தோன்றுகிறது. ஏனெனில், தெரசா தனக்காக வாழவில்லை. மற்றவர்களுக்காக வாழ்ந்ததால் அந்த முகத்தில் ஓர் ஒளி தோன்றுகிறது. 

புத்தரிடம் ஒரு கேள்வி, ‘யார் நல்லவன்? யார் கெட்டவன்?’ ‘பிறர்மீது அக்கறை கொண்டவன் நல்லவன், பிறர் மீது அக்கறை இல்லாதவன் கெட்டவன்’ என்று இரண்டே வரிகளில் புத்தர் பதில் கூறியுள்ளார்.

ஒரு நாட்டில், ‘முதியவர்கள் யாரும் நமக்குத் தேவையில்லை. அவர்களை நாடு கடத்த வேண்டும்’ என உத்தரவு போடுகிறார் அரசர். அதன்பின் நாட்டில் ஒரு பிரச்னை வருகிறது. அப்போது சரியான ஆலோசனை சொல்ல, ஒரு நல்ல அமைச்சரைத் தேர்வு செய்ய முடிவு செய்கிறார் அரசர். ஒரு புதுவிதமான சோதனை வைக்கிறார். ‘சாம்பலில் திரிக்கப்பட்ட கயிறு வேண்டும்’ என்று கேட்கிறார். யாராலும் முடியவில்லை. அப்போது ஒரு பையன் தன் தந்தையிடம் வந்தான். ‘‘அப்பா… அரசர் இது மாதிரி ஓர் உத்தரவு போட்டிருக்கிறார்’’ என்று சொன்னான். அப்பா உடனே, ‘‘ஒன்றுமில்லை. ஒரு கயிறை தாம்பாளத்தில் சுற்றிவைத்து அப்படியே எரிய விடு. அதை அப்படியே எடுத்துச் சென்று அரசனிடம் கொடு. ‘பிரித்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்’’ என்றார். அப்படியே மகன் செய்தான். அரசன் அதை வாங்கிப் பார்த்து விட்டு அதிசயித்தார்.

அடுத்து ஒரு சோதனை வைத்தார். ‘‘யாரும் வாசிக்காத மேளத்தில் சத்தம் வர வேண்டும்’’ என்றார். மகன் மீண்டும் அப்பாவிடம் போனான். ‘‘அவ்வளவுதானே! ஒரு சின்ன மேளத்தை எடுத்துக்கோ. அதன் தோலை எடுத்துவிட்டு ஒரு தேனடையை அந்த மேளத்துக்குள் அசையாமல் போட்டுவிட்டு, தோலை மீண்டும் தைத்து விடு’’ என்றார். பையன் அப்படியே செய்து மேளத்தை எடுத்துப் போனான். அரசன் மேளத்தை வாங்கிப் பார்த்தார். மேலும் கீழுமாக அசைத்தார். உள்ளிருந்த தேனீக்கள் பறக்க… சத்தம் வந்தது. யாரும் வாசிக்கவில்லை, ஆனால் சத்தம் வருகிறது. இதைப் பார்த்து அரசர் வியந்து போய் கேட்டார், ‘‘நீ எப்படி இவ்வளவு அறிவாக இருக்கிறாய்?’’ என்று.

அதற்கு பையன், ‘‘என் தந்தை முதியவர் என்பதால் வேண்டாம் என இந்த அரசு அனுப்பியது. ஆனால் நான் ரகசியமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அவர்தான் இதற்கெல்லாம் காரணம்’’ என்றான். அரசன் தன் தவறை உணர்ந்தான்.

அரசு வேண்டாம் என்றாலும் நாம் நம் தாய், தந்தையைப் பாதுகாக்க வேண்டும். அது நம் கடமையாகும். 

(பேசுவோம்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *