முதுமை வேறு… முதிர்ச்சி வேறு!

இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி பார்க்கும் பக்குவமான மனம் இருந்தால், அதைத்தான் ‘முதிர்ச்சி’ என்கிறோம். சிலருக்கு அது 20 வயதில்கூட வந்துவிடும்; சிலருக்கு 80 வயது வரை முதிர்ச்சி வராமலே போகலாம். தான் முதிர்ச்சி அடைந்திருப்பதை ஒருவர் எப்படி உணர முடியும்?

 • யாரைப் பற்றியாவது யாரோ வம்பு பேசுவதைக் கேட்க அலுப்பாக இருக்கும். இதில் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும் என்று தோன்றும். அம்மாவோ, மனைவியோ, நெருங்கிய உறவுகளோ போன் செய்யும்போது எரிச்சல் வராது. போனை எடுத்து அன்புடன் பேச முடியும்.
 • தான் பேசுவதைக் குறைத்து, அடுத்தவர்கள் பேசுவதைக் கேட்கத் தோன்றும்.
 • எல்லாம் தெரிந்தது போல பேச மாட்டார்கள். ‘ஆமாம், இது எனக்குத் தெரியாது’ என தயங்காமல் ஒப்புக்கொள்வார்கள்.
 • நண்பர்களை எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் பேசுவார்கள். அவர்களைக் கொண்டாடவும் செய்வார்கள்.
 • பிரச்னைகளைக் கண்டு ஒதுங்காமல், ஏதேதோ காரணங்கள் சொல்லி தட்டிக் கழிக்காமல், நேரடியாக எதிர்கொள்வார்கள்.
 • தங்கள் நேரத்தை வீணடிக்கும் மனிதர்களை சாமர்த்தியமாக ஒதுக்கக் கற்றிருப்பார்கள்.
 • தன்னுடைய மகிழ்ச்சி மற்றவர்கள் கையில் இல்லை, அது தன் மனதில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்திருப்பார்கள்.
 • அடுத்தவர்களை நேசிப்பது போல தங்களையும் நேசிப்பார்கள். ஒன்றுமில்லாத விஷயங்களுக்காக தங்களை வருத்திக்கொள்ள மாட்டார்கள்.
 • தேவையற்ற வாக்குவாதங்களையும் சண்டைகளையும் புறக்கணித்துவிட்டு, மௌனமாக அந்த சூழலைக் கடந்து போய்விடுவார்கள்.
 • யாரையும் வெறுமனே தோற்றத்தை வைத்தும் பேச்சை வைத்தும் எடை போட மாட்டார்கள்.
 • யார் மீதும் தங்கள் கருத்தை வலிந்து திணிக்க மாட்டார்கள். மாற்றுக்கருத்து வைத்திருக்க அடுத்தவர்களுக்கு உரிமை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்வார்கள்.
 • அடுத்தவர்களின் தவறுகளை மறக்கவும், அதைவிட அதிகமாக மன்னிக்கவும் கற்றிருப்பார்கள்.                     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *