ரசிக்க… சிரிக்க 2…

அந்த மாமி வீட்டில் பேசிக் கொண்டிருந்தோம். அவருடைய தோழி வந்திருந்தார். எங்கே வேலை பார்க்கிறார் எனும் கேள்விக்கு, ‘‘ஹவுஸ் வொய்ஃப்தான்’’ என்றார் மாமி தயக்கமாக!

‘‘தான்னு ஏன் இழுக்கணும்? ஏன் தயங்கணும்? உங்களுக்கும் மரியாதை உண்டுதானே..?’’ என்றதற்கு மாமி சொன்னார்.

‘‘டாக்டர், எஞ்சினியர் என்றால் இருக்கும் மரியாதை ஹவுஸ் வொய்ஃப்களுக்கு கிடையாதுதான். அதை ஏற்றே ஆக வேண்டும். இதுவும் ஒரு வேலைதான். இதற்கு மற்ற வேலைகளை விட டிமாண்டும் அதிகம் என்றாலும், மரியாதை கிடையாதுதான்!”

‘‘இல்லையே! அப்ப தெரியலயே… உங்க வீட்ல எந்த விசேஷத்திற்கும் உங்களுக்கு முதல் மரியாதைதானே..?’’

‘‘இல்ல, அது பேரு மரியாதை இல்ல. மரியாதைன்ற பேரில எங்கள வேலை வாங்குறாங்க. நாங்களும் வேற வழி இல்லாததால அத மரியாதைன்னு நம்ப நினைக்கிறோம். ஆனா மனசுக்கு தெரிஞ்சு தொலைச்சிடுது. ஏன்… இப்ப சுதந்திர தினத்துக்கு ஒரு வக்கீல், டாக்டர்னு பிரபலங்களை கொடியேத்த வைக்கிறாங்க. வீட்டுல பிள்ளைய பார்த்துக்கிட்டு, அதுங்கள முழு கவனத்தோட வளர்க்கிற யாரையாச்சும் கொடி ஏத்த விடறதுண்டா..? எங்களுக்கும் பொது இடத்தில மரியாதை வேணும்னு ஆசை இருக்காதா?’’

என்னிடம் பதிலில்லை. உங்களிடம்..?

– ஹன்ஸா

‘மனசுல இருக்கறதை எல்லாம் கொட்டப் போறேன்’னு கணவர் சொன்னதும், குப்பைத்தொட்டியை எடுத்துவந்து அவர் எதிர்ல வைப்பவரை பொறுப்பான மனைவின்னு சொல்லிட முடியாது!

நாம் சொல்வதை மற்றவர்கள் கேட்கிறார்களா என்பதல்ல கேள்வி; நாமே கேட்கிறோமா என்பதுதான் கேள்வி!

ஆற்றின் ஆழத்தைத் தெரிந்துகொள்ள இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் உள்ளே விடுபவன் புத்திசாலி கிடையாது!

பிறரின் கவனத்தைப் பெற, அன்பைப் பெற காட்டும் அக்கறையின் சிறு பகுதி கூட, அதைத் தக்க வைத்துக் கொள்வதில் காட்டப்படுவதில்லை…

பன்னீர் வாசனை என்று எல்லோருக்கும் தெரியும். யாருக்குத் தெரியும், ‘அது ஒரு ரோஜாவின் கண்ணீர்’ என்று!

சரியான நேரத்துல ஒழுங்கான முறையில பாடம் கத்துக்கலைன்னா, தவறான நேரத்துல வாழ்க்கை மிக மோசமான முறையில பாடம் கத்துக் கொடுத்துடும்.

தோற்றுக்கொண்டேயிருப்பது தோல்வி அல்ல. முயற்சியைக் கைவிடுவதுதான் உண்மையான தோல்வி!

இறக்கைகளைத் தாருங்கள், நான் கடந்து விடுகிறேன் இந்தப் பாலைவனத்தை… எலும்பில்லாத நாக்குகள் சுட்டபடி இருக்கின்றன!

செலவு போக மீதி இருப்பதை சேமிப்பதை விட, சேமிப்பு போக மீதி இருப்பதை செலவழிக்கக் கற்றுக் கொண்டாலே போதும்… உலகத்திற்கே நிதியமைச்சர் ஆகிவிடலாம்…

பிரியங்கள் பிரியும்போதுதான்
அது நிரம்பியிருந்த இடம்
எத்தனை பெரிதெனப் புரிகிறது
பள்ளங்கள் இப்படித்தான் இருக்குமோ!

நாம் தேடுவது கிடைத்தவுடன் அதனைத் திரும்பக் கொடுக்க மறப்பதால்தான் நம் தேடல் எதுவும் முடிவதேயில்லை.
அன்பை, ஆதரவை, நேசிப்பை, பாசத்தை, பரிவை, தேடிக்கொண்டே இருக்கிறோம். திருப்பிக் கொடுப்பதில்லை. அதனால், தேடித் தேடிக் களைத்துப் போகிறோம்.

பார்க்காததற்கு நன்றி!
யாரோ போன் பேசியதும் அந்த இல்லத்தரசி பரபரப்பாகிவிட்டார். தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்தார். ‘‘உங்க அத்தையும் மாமாவும் இங்க ஒரு ஆஸ்பத்திரிக்கு வர்றாங்களாம். அப்படியே நம்ம வீட்டுக்கு மதியம் சாப்பிட வர்றாங்க. வீடு ஒரே அலங்கோலமா இருக்கில்ல… இதைப் பார்த்தா நம்மளப் பத்தி என்ன நினைப்பாங்க?’’ என்றார்.
மூவருமாகச் சேர்ந்து வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள். அன்று பள்ளி விடுமுறை என்பதால் விளையாட நினைத்திருந்தார்கள் குழந்தைகள். சீக்கிரம் வீட்டை ஒழுங்காக்கி விட்டால் வெளியில் போய் விளையாடலாம் என்ற நினைப்பில் வேலை விறுவிறுப்பாக நடந்தது. வீடு ஓரளவுக்கு ஒழுங்கானதும், ‘‘நான் சமையலை ஆரம்பிக்கறேன். நீங்க பாத்ரூமை மட்டும் க்ளீன் பண்ணிடுங்க!’’ என்றார் அம்மா.
சில நிமிடங்களில், ‘‘அம்மா! எல்லாம் முடிஞ்சது. நாங்க விளையாடப் போறோம்’’ என்று கிளம்பி விட்டனர் குழந்தைகள். அம்மாவுக்கு ஆச்சரியம். பல நாட்களாக சேர்ந்திருந்த அழுக்குத்துணி, சோப், பிரஷ் போன்ற கிளீனிங் அயிட்டங்கள், துடைப்பம், மாப் என எல்லாம் மூலைக்கு மூலை அங்கு கிடக்கும். எப்படி சுத்தம் செய்திருப்பார்கள்?
போய்ப் பார்த்தார். துடைத்துவிட்ட மாதிரி சுத்தமாக இருந்தது பாத்ரூம். குளியல் தொட்டியை ஒட்டி தொங்கிய திரைச்சீலையில், ‘அன்புள்ள அத்தை, மாமா! தொட்டியை எட்டிப் பார்க்காததற்கு நன்றி’ என எழுதியிருந்தது. தொட்டிக்குள் பார்த்தால், பாத்ரூமிலிருந்த அத்தனை அயிட்டங்களும் அதற்குள் இருந்தன.

(இது போல நீங்கள் ரசித்த, அனுபவித்த சுவையான விஷயங்களை எழுதி அனுப்புங்கள். முகவரி:
முதுமை எனும் பூங்காற்று, டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர்நல அறக்கட்டளை, எண்.14, 2வது மாடி, 29/2, துரைசாமி ரோடு, தி.நகர், சென்னை&600 017. தொலைபேசி எண்: 044 48615866)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *