ரசிக்க… சிரிக்க…

‘‘ஒருத்தர் தினமும் காலையில ரெண்டு டீ, மாலையில ரெண்டு டீ, மதியம் ஒரு டீ குடிக்கிறார். ஒரு டீ ரெண்டு ரூபாய்னா 30 நாளைக்கு எவ்வளவு செலவாகும்?’’

‘‘கணக்கை அப்புறம் பார்த்துக்கலாம்… ரெண்டு ரூபாய்க்கு எந்தக் கடையில டீ விக்கறாங்க? அதை முதல்ல சொல்லுங்க சார்!’’

———–

வாழைப்பூ வடையில் வாழைப்பூ இருக்கும்; மல்லிகைப்பூ இட்லியில் மல்லிகைப்பூ இருக்குமா..?

– ஆறிப்போன இட்லியை சாப்பிடும் அப்பாவிகள் சங்கம்

——————-

சைக்கிள் டியூப்ல இருந்து பிடுங்கப்படும் காற்று எங்கே போகுதுன்னே தெரியலை. அதே மாதிரிதான், தூக்கத்துல இருந்து விழிச்சதும் கனவு எங்கேயோ போயிடுது!

—————

பென்சில் மட்டும் வாங்குவது தன்னம்பிக்கை. ரப்பரும் சேர்த்து வாங்குவது தன்னம்பிக்கையின்மையா? முன்யோசனையா?

—————

உன்னை நீ அறிய வேண்டுமானால் மற்றவர்களை கவனி; மற்றவர்களை நீ அறிய வேண்டுமாயின், உன்னை நீ கவனி.

——————

மீளாத்துயர் எதற்கும் ஒரு காரணம் உண்டெனில், மீள்வதற்கும் ஒரு வழி எப்போதும் உண்டு!

—————

‘‘அமைச்சரே… பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையான மணம் உண்டா..?’’

‘‘இப்போதெல்லாம் பெண்ணுக்கு இயற்கையாகவே கூந்தல் உண்டா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும் மன்னா!’’

———-

என்னதான் வௌவால் தலைகீழா நின்னாலும், அதால எந்த காரியத்தையும் சாதிக்க முடியாது!

– தலைகீழாய் நின்று தத்துவங்களை யோசிப்போர் சங்கம்

———————

தக்காளி என்பது காய் இல்லை, பழம். ஆனால் அதை ஃப்ரூட் சாலடில் போட்டு சாப்பிட முடியாது. பரங்கிப்பழம் என்பது பழ வகை இல்லை, காய். சாம்பார் வைத்துதான் சாப்பிட வேண்டும். காயா, பழமா என்பது முக்கியமில்லை. எதற்கு உபயோகம் என தெரிந்துகொள்வதே ரொம்ப முக்கியம்.

——————-

யாரிடமாவது போய், ‘‘எப்படி இருக்கீங்க’’ என விசாரிக்குபோது, ‘‘என்னமோ இருக்கேங்க’’ என ஆரம்பித்து ஓயாமல் புலம்பினால் நமக்கு எப்படி இருக்கும்? ‘ஏன்தான் கேட்டோம்’னுதானே இருக்கும்! அதுபோலவே மத்தவங்களுக்கும் நம்மோட சலிப்பும் புலம்பலும் அலுப்பைக் கொடுக்கும். ‘‘சௌக்கியமா’’ன்னு கேட்டாங்கன்னா, ‘‘அட… எனக்கென்ன! சூப்பரா இருக்கேன்’’னு சொல்லிப் பாருங்க. அந்த உற்சாகம் அவங்களுக்கும் பரவும். நமக்கும் புத்துணர்வு கொடுக்கும்.

—————–

ஷாப்பிங் விளம்பரங்களைப் பார்த்து, அடிக்கடி போனிலேயே  ஆர்டர் செய்து பொருட்கள் வாங்குவது ஒருவரின் வழக்கம். அப்படி ‘ஐந்து சுரிதார் செட் ரூ.1,500’ என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தைப் பார்த்து, அதன் விவரம் கேட்காமலேயே ஆர்டர்  செய்தார். மூன்று நாட்களில் பார்சல் வந்தது. பணம் கட்டி  பேக்கிங்கைப் பிரித்த அவருக்கு அதிர்ச்சி. காரணம்,  வண்ணமயமான ஐந்து டாப்ஸ் மட்டுமே இருந்தன. அதற்கு  மேட்ச்சான பாட்டம் இல்லை.

அவர் கோபமாகி உடனே போனில் விளக்கம் கேட்க, ‘‘ஆமாங்க  மேடம்! டாப்ஸ் மட்டும்தான் அந்த விலை. பாட்டம் நீங்க தனியாக வாங்கிக்கணும்’’ என்றனர். ‘‘இதை ஏன் ஆர்டர் செய்தபோதே நீங்கள் கூறவில்லை’’ என அவர் கேட்க, ‘‘நீங்கதான் விளக்கம் கேட்டிருக்கணும். நீங்கள் தெரிந்துகொண்டுதான் வாங்குவதாக நினைத்தோம். இதில் எங்கள் தவறு எதுவும் இல்லை. இன்னொரு முறை அந்த விளம்பரத்தை நன்றாகப்  பாருங்கள்… ‘பாட்டம்  உட்பட’ என அதில் இல்லையே’’ என சாமர்த்தியமாக பதில் சொன்னார்கள்.

கவர்ச்சி விளம்பரங்களைப் பார்த்து பொருட்களை வாங்கும் அவர், இப்போது விசாரிக்காமல் எதையும் வாங்குவதில்லை.

——————–

பேருந்து நிலையத்தில் ஒரு பெண் தன் பையனுடன் பதற்றமாக நின்று கொண்டிருந்தாள். எல்லோரும் விசாரித்தபோது, ‘‘இவன் காசை முழுங்கிட்டான். என்ன செய்றதுன்னு தெரியலை’’ என்றாள்.

‘நாலு வாழைப்பழத்தை ஊட்டி விடு…’, ‘ஆஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே எடுத்துப் பார்’ என ஆளாளுக்கு மருத்துவம் சொல்ல ஆரம்பித்தார்கள். அப்போது ஒருவர் வந்தார். பையனைத் தூக்கி, தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி, ஒரு தட்டு தட்டினார். காசு வெளியே வந்து விழுந்தது. எல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

அந்தப் பெண் நன்றி சொல்லிவிட்டு அவரிடம் கேட்டார், ‘‘சார், நீங்க டாக்டரா?’’

‘‘இல்லை, இன்கம்டாக்ஸ் ஆபீஸர். எங்கே தட்டினால் காசு விழும்னு எனக்குத் தெரியாதா?’’

—————

கரப்பான் பூச்சியைப் பார்த்து பயப்படறீங்களா? அதை வீட்டை விட்டு துரத்த ஒரு டெக்னிக் இருக்கு…

மைதா மாவும் போரிங் பவுடரும் சம அளவில் எடுத்து, ரொம்ப தண்ணீர் விடாமல் சப்பாத்தி மாவு மாதிரி பிசைந்துகொள்ளவும்.  சின்னச் சின்ன உருண்டையாக உருட்டி நிழலில் உலர்த்தி எடுக்கவும். எங்கெல்லாம் கரப்பான் பூச்சி இருக்கிறதோ, அங்கே போட்டு வைக்கவும். கரப்பான் பூச்சி என்ன… பல்லி கூட வராது.

உங்க வீட்டுல ட்ரை பண்ணிப் பாருங்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *