ரசிக்க… சிரிக்க…

பாட்டில் பாதுகாப்பு! டிபார்ட்மென்டல் ஸ்டோரில் மளிகை சாமான்களை ஆர்டர் கொடுத்திருந்தேன். அவர்கள் இரவு 8 மணிக்கு டோர் டெலிவரி செய்தார்கள். மற்ற வேலைகளில் மும்முரமாக இருந்ததால், அதை அப்படியே வைத்திருந்து, அடுத்த நாள் காலையில் வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, சாமான்களைப் பிரித்து அடுக்கத் தொடங்கினேன்.
உள்ளே பார்த்தால், பினாயில் பாட்டில் லேசாக உடைந்து, மற்ற பொருட்களிலும் பரவியிருந்தது. பொருட்கள் எல்லாம் பாலித்தீன் கவர்களில் அடைக்கப்பட்டிருந்தாலும் அரிசி, பருப்பை எடுத்து சமைத்து சாப்பிட பயமாக இருந்தது. உடைந்த பினாயில் பாட்டிலை அப்புறப்படுத்தவும் சிரமமாக இருந்தது.
அதன்பிறகு கடைக்கு எப்போது போய் பொருட்கள் வாங்கினாலும், சாஸ், தேன், நெய், எண்ணெய், பாத்திரம் தேய்க்கும் லிக்விட் என திரவப் பொருட்களை கையில் எடுத்துக்கொண்டு, மற்ற பொருட்களை மட்டும் டோர் டெலிவரி செய்யுமாறு சொல்லிவிட்டு வருகிறேன். சிரமங்களைத் தவிர்க்க எல்லோரும் இதைப் பின்பற்றலாமே! – டி.வந்தனா, சென்னை-31.

தூங்கறதுக்கு தூக்கம் வர்றது மட்டும் முக்கியமில்ல, துக்கம் வராம பார்த்துக்கறதும் முக்கியம். மனசுல நிம்மதி இல்லைன்னா, கணவரோட குறட்டைச் சத்தம் மட்டுமில்லை… குண்டூசி விழற சத்தம்கூட தூங்க விடாம செய்துடும்!

சிரிக்க வைக்க வேண்டாம்… ஆறுதல் சொல்ல வேண்டாம்… அன்பு செலுத்த வேண்டாம்… நேசித்திடக்கூட வேண்டாம்… அழ வைக்காமல் இருப்போம்… அது போதும்!

‘‘துணி எடுக்கப் போறேன்’’னு சொன்னா, மொட்டை மாடியில காயப் போட்டிருக்கறதை எடுக்கப் போறாங்க என்று அர்த்தம். ‘‘டிரஸ் எடுக்கப் போறேன்’’னு சொன்னா, கடையில போய் புதுசா வாங்கப் போறாங்க என்று அர்த்தம்.

‘பொறுமைசாலி’ன்னு பெயர் வாங்குங்க. ஆனால், ‘இவங்களை மாதிரி பொறுமைசாலி இருக்க முடியாது’ன்னு பெயர் வாங்கிடாதீங்க. அப்புறம் அந்தப் பெயரைக் காப்பாத்திக்கவே சுரணையை இழக்க வேண்டியிருக்கும்.

ராத்திரி, பகல்னு எப்போ பார்த்தாலும் வரிசைக் கட்டி போய்க்கிட்டே இருக்கும் எறும்புகளுக்கு கால் வலிக்காதா?!
அவை எப்போ ரெஸ்ட் எடுக்கும்னு யாராவது சொல்லுங்களேன்… ப்ளீஸ்!

(அம்மாவும் பையனும்…) அம்மா: இந்தப் பரீட்சையில நீ நல்ல மார்க் வாங்கலன்னா…
பையன்: நல்ல மார்க் வாங்கலேன்னா?
அம்மா: நீ யாரோ… நான் யாரோ… சொல்லிட்டேன்!
(ரிசல்ட் வந்தபிறகு…)
அம்மா: மார்க் வந்துச்சா, எத்தனை மார்க் கண்ணா?
பையன்: நீ யார் இதைக் கேட்க? நீ யாரோ… நான் யாரோ…
அம்மா: !!!

தழையத் தழைய பட்டுப் புடவை. தலை நிறைய மல்லிப்பூ. கண்ணுக்கு உறுத்தாத அளவுக்கு மெல்லிதான ஆபரணங்கள். கை நிறைய வளையல்கள். கால் கொலுசு. சந்தனக்கீற்றில் ஒட்டிச் சிரிக்கும் குங்குமம். கண் தீட்டிய மை…
புடவைக்கு மட்டும் தானாகவே ஒரு பாந்தம் வந்து ஒட்டிக் கொள்கிறது!

மறையாத மகிழ்ச்சி! வீட்டிலே காபி கொடுத்தார் மனைவி. காபிக்குள் ஓர் எறும்பு கிடந்தது. அதைக் கண்ட கணவர், காபியை விட அதிகமாகக் கொதிக்க ஆரம்பித்துவிட்டார். விளைவு? சண்டை. சந்தோஷமாக இருந்த வீடு, மூன்று நாட்கள் சோகத்தில் மூழ்கிவிட்டது.
இதே சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது. அந்த வீட்டில் உள்ள கணவர், காபியில் செத்து மிதக்கும் எறும்பை எடுத்தார். ‘‘உன் காபிக்கு என்னை விடவும் தீவிர ரசிகன் இந்த எறும்புதான். உன் காபிக்காக உயிரையே கொடுத்து விட்டது பார். இது போல் ரசிகர்களை வீணாய் இழந்து விடாதே’’ என்று மனைவியிடம் சொன்னார்.

மனைவி சிரித்தார். தன் தவறை உணர்ந்தார். அதன்பிறகு அவர்கள் வீட்டு காபியில் எறும்பு சாகவில்லை. அவர்கள் வீட்டின் மகிழ்ச்சியும் மறையவில்லை.

நமது ஆடம்பர வாழ்வுக்கு நாம் சமூகத்தைக் காரணம் காட்டுவது வழக்கம். நான்கு முறை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தவர், திட்ட கமிஷன் தலைவர், வாழ்வின் எல்லா அதிகாரங்களையும் கண்ட மாமனிதர் லட்சுமிகாந்தன் பாரதி. இப்போது 94 வயதில் இருப்பவர், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் மிக எளிமையாக பயணித்த காட்சி இது. நாம் படிக்க இது ஒரு பாடம். – ராம் மோகன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *