85 வயது மாணவி
கேரளாவைச் சேர்ந்த 85 வயதாகும் மூதாட்டி கெம்பி, முதியோர் கல்வியில் முக்கியமான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார். கேரள அரசின் எழுத்தறிவு இயக்கத்தின் ஒரு பகுதியாக சமீபத்தில் நடந்த தேர்வை கெம்பி எழுதியிருக்கிறார். மாநிலம் முழுவதும் எழுத்தறிவு விகிதத்தை உயர்த்தும் நோக்கில், எழுத்தறிவு இயக்கத்தை கேரள அரசு தொடங்கியது. அதுதான் கெம்பியின் வாழ்வில் அறிவுச் சுடரை ஏற்றியிருக்கிறது.
கெம்பிக்குச் சிறு வயதில் பள்ளிக்குச் செல்ல ஆசை. ஆனால், அவருடைய பெற்றோர் அதற்கு அனுமதிக்கவில்லை. தினக்கூலியாக வேலைக்குச் சென்றார். ஆனால், கல்வி பயிலும் ஆர்வம் மட்டும் நீறு பூத்த நெருப்பாக மனதில் கனன்றுகொண்டிருந்தது. பேரன், பேத்திகள் வந்தபிறகு, வாழ்க்கை முடிந்துவிட்டதாக கெம்பி நினைக்கவில்லை. இறப்பதற்குள் தன்னால் படித்துவிட முடியும் என நம்பினார். இப்போது எழுத்தறிவு இயக்கம் அதற்கு வாய்ப்பு தந்துள்ளது.
85 வயதில் சிலேட்டில் எழுதிப் பழகும் தன்னை மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் கெம்பி கவலைப்படவில்லை. கல்வி ஒன்றே கண்ணாக இருந்து முதல்கட்டத் தேர்வில் தேர்ச்சிபெற்றார். தற்போது இரண்டாம் கட்டத் தேர்வு எழுதிய 2,994 பேரில் கெம்பிதான் வயதில் மூத்தவர். இதிலும் கெம்பி தேர்ச்சியடைந்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார். ‘கம்ப்யூட்டர் இயக்கக் கற்றுக்கொள்வதுதான் அடுத்த இலக்கு’ என்கிறார். கெம்பிக்கு அது விரைவில் வசப்படும்